தென்மண்டலத்தின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் ஊழல், முறைகேடுகள் மலிந்துவிட்டன. அதன் துணைவேந்தரான பாஸ்கரின் நியமனமே சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. அதன் ஒவ்வொரு பிரிவிலும் முறைகேடுகள்... ஆளுநர் கவனத்திற்குக் கொண்டுபோயும் நடவடிக்கை இல்லை. இவை தொடர்பாக நடவடிக்கை எடுத்திட சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி ஜூலை 07 அன்று தமிழக சி.பி.எம். கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணனும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டது... பரபரப்புத் திரியைக் கொளுத்தியிருக்கிறது.
இது தொடர்பாகப் போராடிவரும் மூட்டா அமைப்பின் தலைவரான பேராசிரியர் சுப்புராஜிடம் பேசினோம்.
"தொழில் நுட்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் டைரக்டராக இருந்து, இங்கு துணைவேந்தராக 2016 பிப்ரவரியில் பொறுப்புக்கு வந்த பாஸ்கரால் ஜனநாயக வழியில் ஒத்துப்போக முடியவில்லை. சர்வ அதிகாரமாகச் செயல்படுகிறார். ஆரம்பகாலம் தொட்டு பின்பற்றப்பட்ட நடைமுறைகள், மரபுகள் மீறப்படுகின்றன.
செனட் மற்றும் சிண்டிகேட் அமைப்புகளை அனுமதித்தால் அது தனது செயல்பாட்டுக்கு ஒத்துவராது என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிகேட் மற்றும் செனட் அமைப்பின் பேராசிரிய உறுப்பினர்களைக் கலைத்து விட்டார். துணைக் குழுக்களையும் நீக்கிவிட்டார். பேராசிரியர்கள் அல்லாத சிண்டிகேட் இருந்தால்தான், தன்னுடைய எண்ணங்களை நிறைவேற்ற முடியும் என்ற லெவலுக்கு வந்த துணைவேந்தர் பாஸ்கர், பேராசிரியர்கள் சங்கம் தவிர்த்து தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் அமைப்பிற்கு வரலாம் என்று தன்னிஷ்டம் போன்று அறிவித்தவர் தனக்கு வேண்டப்பட்டவர்களையே செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களாக்கியதையும் கல்லூரிகளின் தகுதியுடைய ஆசிரியர்களை வரவிடாமல் தடுத்ததால் மூட்டா அமைப்பு எதிர்த்தது. ஆசிரியர் பிரதிநிதிகள் அல்லாத தனக்குக் கட்டுப்பட்ட சிண்டிகேட் அமைப்பை உருவாக்கியதால் எதிர்த்து சில ஆசிரியர்கள் நீதிமன்றம்வரை போய் விட்டார்கள்.
பல்கலைக்கழகத்தின் காலியிடங்களுக்கான பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பிற பணிகளுக்கான 27 காலியிடங்களுக்கான நியமனங்கள் 2016-17ஆம் ஆண்டு போடப்பட்டுள்ளன. அவை யு.ஜி.சி., விதிமுறைகளையும் மீறி நிரப்பப்பட்டதில், -குறிப்பாக, பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் பணிகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரை ஆசிரியர் அனுபவம் தேவை. ஆனால் அனுபவமில்லாதவர்களைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டது போன்றவைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) விதிப்படி துணைவேந்தராவதற்குக் குறைந்தபட்சம் 10 வருடங்கள் அவர் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கவேண்டும். ஆனால் மானியக்குழுவின் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக 7 வருடங்கள் மட்டுமே பேராசிரியராகப் பணிபுரிந்த பாஸ்கர், மாஜி தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவின் ரெகமெண்ட்டில் துணைவேந்தரானவர். இவரை வி.சி.யாக நியமிப்பதற்காகவே 2010 யு.ஜி.சி. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன பல்கலைக்கழகம் மற்ற விசயங்களில் மட்டும் யு.ஜி.சி. விதிமுறையைக் கடைப்பிடிப்பது எவ்வாறு பொருந்தும்?.
நிர்வாகத்தின் இதுபோன்ற ஊழல் முறைகேடுகளை ஆதாரத்துடன் நாங்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், 2018, ஏப்.18 அன்று புகாராகவே கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கல்லூரி மாணவர்களைத் திரட்டி பெரிய அளவில் கவன ஈர்ப்புப் போராட்டமும் நடத்தவிருக்கிறோம்'' என அழுத்தமாகச் சொன்னார் சுப்புராஜ்.
இதுகுறித்து விளக்கமறிய, நாம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பாஸ்கரை இரண்டு நாட்களாக பலமுறை அவரது எண்ணில் தொடர்புகொண்டும், பிஸி... பிஸி... என்றே வந்தது. தொடர்ந்து முயன்ற நாம், அவரது உதவியாளரான சுதர்சனனிடம் விஷயத்தைத் தெரிவித்து அவர் மூலமாக வி.சி.யின் கவனத்திற்குக் கொண்டுசென்ற போதிலும், அவரிடமிருந்து பதில் இல்லை. அவரது விளக்கம் கிடைப்பின் அதனையும் பிரசுரம் செய்வதற்குத் தயாராக உள்ளோம்.
வல்லுநர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கக்கூடிய பல்கலைக்கழகம், விமர்சனத்திற்கும், சந்தேகத்திற்கும் உட்பட்டதாக இருக்கிறதே?
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்