அ.தி.மு.க.வில் ஒரு பெரிய எரிமலை வெடிக்கக் காத்திருக்கிறது. அந்த வெடிப்பின்போது எடப்பாடி தூக்கி எறியப் படுவாரா? அவருக்கு எதிராக கொடநாடு வழக்கு உண்மைகள் வெட்ட வெளிச்சமாகி பூதாகரமாக வெடிக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. ‘அந்த கொடநாடு சம்பவம்,’ எடப்பாடி ஆட்சிக் காலத்தில் நடந்தது. அதில் முக்கியப் பங்காற்றிய வர்கள் அன்று அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க. முக்கியப் புள்ளிகள். சஜீவன், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., சேலம் இளங்கோவன் உட்பட பலர் கொடநாடு வழக்கு தொடர்பாக போலீசாரால் இதுவரை விசா ரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வினர்தான். இது தவிர, எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசராக இருந்த கனகராஜ் மற்றும் ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த இறந்து போன கனகராஜ் மற்றும் அ.தி.மு.க.வுடன் தொடர்புடைய கோவை நகைக்கடை அதிபர் உட்பட நூற்றுக்கணக் கான அ.தி.மு.க.வினர் கொடநாடு வழக்கில் போலீசாரால் விசாரிக் கப்பட்டனர்.
மேத்யூஸ் சாமுவேல் என்கிற பத்திரிகையாளர், “முழுக்க முழுக்க அ.தி.மு.க.வினர் சம்பந்தப்பட்ட இந்த கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடியின் தொடர்பு பற்றி சயான் என்கிற குற்றவாளி சந்தேக மழுப்பலாகவே பதில் சொல்லி இருக்கிறார். கொடநாட்டில் கொள்ளை யடிக்க ஏற்பாடு செய்தது, குற்றவாளிகள் தப்பிக்க உதவியது, கொடநாட்டில் கொள்ளையடித்த ஆவணங் களை பெற்றுக்கொண்டது, கனகராஜை கொலை செய்தது என அனைத்திலும் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை விசாரணைக்குள்ளாக்கியபோது அவர்கள் பார்த்ததைச் சொல்லாமல் மறைத்த ரகசியம், யார் சொல்லி கொடநாடு கொள்ளை நடந்தது? யார் குற்றவாளிகளை பாதுகாத்தது? என்பதுதான். அவர்களில் யார் வாயைத் திறந்தாலும் ஒட்டுமொத்த கொடநாடு வழக்கின் மர்மம் அவிழ்ந்துவிடும்” என்கிறார்.
இந்நிலையில் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் அ.தி.மு.க.வில் ஒற்றுமை வேண்டும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வால்தான் 2026-ல் ஆட்சிக்கு வர முடியும்”என்கிறார்கள். அ.தி.மு.க. ஒற்றுமை கோஷம் கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்குள் வலுத்து வருகிறது. அது எடப்பாடியின் தலைமைக்கு எதிராக வலுவான சவாலாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வலுப்பெற்று வருகிறது.
கொடநாடு கொலை கொள்ளையில் எடப்பாடியுடன் சேர்ந்து அப்போது கோவை நீலகிரி பகுதிகளில் அமைச்சர்களாகவும் கட்சி நிர்வாகிகளாக இருந்தவர்கள் கை கோர்த் திருந்தனர் என்கிற குற்றச்சாட்டு காவல்துறை யால் வலுவாகவே முன்வைக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிராக ஆட்களை அணி திரட்டுவதில் முன்னாள் அமைச்சர் கோவை எஸ்.பி.வேலுமணி முனைந்து செயல்பட்டு முன்னிலை வகிக்கிறார். சசி ஏற்பாட்டின்படி சசியின் சகோதரர் திவாகரன் இந்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். எடப்பாடியுடனும் ஏதோ பெயரளவில் பேசி வருகிறார்.
எடப்பாடியோ அவரது மகன் மிதுனை அரசியலுக்குக் கொண்டுவர விரும்புகிறார். 38 வயதான மிதுன், ஜெயலலிதா தொடர்பான ஒரு நிகழ்வில் எடப்பாடியுடன் மேடை ஏறப் போகிறார். அதற்காகத்தான் உதயநிதி துணை முதலமைச்சர் ஆனதைப் பற்றி பெரிதாக கருத்து எதையும் எடப்பாடி சொல்லவில்லை. அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் சுனில் ஆகியோருடன் சேர்ந்து அரசியலுக்கு வரநினைக்கும் மிதுன் மற்றொரு தேர்தல் வியூக அமைப்பாளரான பிரஷாந்த் கிஷோருடனும் பேசி வருகிறார். மகன் மிதுனின் கட்சி பட்டாபிஷேகத்திற்காக தயாராகிவரும் எடப்பாடி, சசிகலா அன்ட் கோ முன்வைக்கும் ஒற்றுமை ஏற்பாட்டிற்கு செவிசாய்க்கத் தயாராக இல்லை. இதனால் கோபமடைந்த திவாகரன், தொடர்ச்சியாக எடப்பாடிக்கு எதிராக ஆட்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளார்.
தங்கமணி, விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி என 25 கட்சி முக்கியஸ்தர்களை திரட்டிவிட்டார் திவாகரன். இவர்கள் அனைவரும் சேர்ந்து எடப்பாடிக்கு எதிராக திவாகரனின் சொந்தக்காரரான ஜெ.ஜெ.டி.வி. பாஸ்கரன் வீட்டில் எடப்பாடிக்கு எதிராக கூட்டம் போட்டுப் பேசியிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுமணியை பின்னர் நேரில் அழைத்த எடப்பாடி, “"நீ வேண்டுமென்றால் கட்சியை விட்டுப் போ! உன் பின்னால் ஒருவனும் வரமாட்டான். கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்''’என திட்டியுள்ளார். எடப்பாடியும் வேலுமணியும் தவிர்க்க முடியாத பண உறவுக்கு சொந்தக்காரர்கள். இருவரும் இணைந்து பல முதலீடுகளை செய்திருக்கிறார்கள். பிசினெஸ் பார்ட்னர்களான இருவரும் இப்பொழுது தங்களது கணக்கு வழக்குகளை சரிபார்த்து பிரித்துவிடுவது என்கிற முடிவில் இருக்கிறார்கள். ஆனாலும் எடப்பாடியை நீக்கிவிட்டு முதல்வர் வேட்பாளராக வேலுமணியைக் கொண்டுவருவதற்கான தயாரிப்பு உத்திகள் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் உள்ளது. என்னால் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உடைக்க முடியும் என்பது எடப்பாடிக்கு எதிராக வேலுமணி முன்வைக்கும் சவால். வேலுமணியும் எடப்பாடி போலவே அவரது மகனை அரசியலுக்கு கொண்டுவர திட்டம் தீட்டி இருக்கிறார். எடப்பாடி நேரடியாகத் திட்டியதால் டென்ஷன் ஆன வேலுமணி கடந்த வாரம் தனது சகோதரர் அன்பரசனை எடப்பாடியிடம் சந்திக்க அனுப்பியிருக்கிறார்.
தான் திட்டியதால் வேலுமணி தன்னிடம் சமாதானம் பேச அனுப்பியுள்ளார் என நினைத்த எடப்பாடி அவரை மகிழ்ச்சியுடன் சந்தித்தார். ஆனால் அன்பரசன் சமாதானம் பேசவில்லை. அதற்கு மாறாக எடப்பாடியைப் பார்த்து, "கொடநாடு வழக்கில் கொள்ளையடிக்க வந்த குற்றவாளிகளை கையாண்டவன் நான். இதை சயான் தனது வாக்குமூலத்திலேயே சொல்லி இருக்கிறான். நான் மட்டும் வாய் திறந்தால் நீங்கள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டிவரும்'” என எடப்பாடியை நேரடியாகவே மிரட்டினார்.
அதிர்ந்துபோன எடப்பாடி ஒன்றுமே பேசவில்லை. ஏற்கெனவே சசிகலாவிடம் கொடநாடு விசயத்தில் என்ன நடந்தது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள வேலுமணி அடுத்தகட்டமாக எடப்பாடியை இப்படி மிரட்டியுள்ளார். அ.தி.மு.க. ‘தலைகளின் உள்கட்சி பதவிமோகத் தகராறில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் திடுக்கிடும் ரகசியங்கள் மற்றும் பல உண்மைகள் வெளிவரும் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.