முதன்முதலில் தமிழ் சினிமாவில் பேசும் படமான காளிதாஸில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி, கபாலி திரைப்படத்தில் "மாய நதி'’ எழுதிய உமாதேவிவரை, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் 81 பேர் என விக்கிபீடியா பட்டியலிட்டுள்ளது.
அந்த வரிசையிலுள்ள பாடலாசிரியர் வேல்முருகனைச் சந்தித்தபோது அருகிலிருந்த நண்பர் “"ஒரு கிடாயின் கருணை மனு இயக்குநர் சுரேஷ்சங்கையா இயக்கத்துல வெளிவந்த "சத்திய சோதனை' திரைப்படத்துல இடம்பெற்ற எல்லா பாடல்களும் வேல்முருகன் எழுதியதுதான். இதுக்கு முன்னால "ரிச்சி' திரைப்படத் துலயும் எல்லா பாட்டயும் எழுதிருக் காரு. தமிழ்த் திரை யுலகத்துல 16 வரு டங்களா போராடி இந்த இடத்துக்கு முன்னேறி வந்தி ருக்காரு..''’என்று கூற, நாம் வேல்முருகனிடம் "திரையுலகில் பாடலாசிரியர் ஆனது எப்படி? போராட்டம் இன்னுமா நீடிக்கிறது?''’என கேட்டோம்.
"சின்ன வயசுல எங்க ஊரு சங்கராபுரம் பர்க்கத் தியேட்டர்ல அம்மாகூட போயி "கரகாட்டக்காரன்' படம் பார்த்தேன். "மாரியம்மா.. மாரியம்மா..' பாட்டுக்கு பெண்கள் சாமி வந்ததுபோல் ஆடுனாங்க. ரொம்ப ஆச்சரியமா பார்த்தேன். அப்ப நான் தியாகதுருகம் கவர்மென்ட் ஹைஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். பின்னாளில் என்னோட காதல் மனைவியானவங்க, அப்ப இன்லேன்ட் லெட்டர்ல எனக்கு எழுதுன கடிதத்துல, "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு'ன்னு "பம்பாய்' படத்தோட முழுப்பாட்டையும் எழுதி பசைபோட்டு ஒட்டி அனுப்பிருந்தாங்க. யோசிச்சுப் பார்த்தா, இந்த ரெண்டு நிகழ்வும்தான் நான் சினிமாவுக்கு வர காரணமா இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.
அப்பல்லாம் ஊர்ல இருந்து சென்னைக்கு வந்து ஒரு நாள் முழுக்க சினிமா கம்பெனிகள்ல ஏறி இறங்கி ஊரைச் சுத்திட்டு, நைட் பஸ் பிடிச்சு திரும்பப் போயிருவேன். எங்க ஊரு ஆசிரியருக்கு சொந்தக்காரர் சிவா. "அமுதே' படத்துல ஒளிப்பதிவாளரா பணியாற்றியவர். அவரோட ரூம்ல தங்கவச்சிக்கிட்டார். எனக்கு சினிமாவுல சோறு போட்டது யாருன்னு கேட்டா மொதல்ல சிவா பெயரையும், அடுத்து நா.முத்துக்குமார் அண்ணன் பெயரையும்தான் சொல்லுவேன். சிவா சார் மூலம் தொலைக்காட்சி கேம் ஷோவுல உதவி இயக்குநர் வேலை கிடைச்சது.
கவிஞர் முத்துவிஜயனும் நா.முத்துக் குமாரும் அடிக்கடி சந்திக்கிற நண்பர்கள். என்னுடைய விடாமுயற்சியைப் பார்த்த முத்துவிஜயன்தான், நா.முத்துக்குமாரிடம் என்னைச் சேர்த்துவிட்டார். என் வாழ்க் கைக்கான அடித்தளம் அங்குதான் போடப்பட்டுச்சு. சில வருடங்கள் நா.முத்துக் குமார்கிட்ட உதவியாளரா இருந்தேன். படம் இயக்குறதுக்கு அவருக்கு நேரம் அமை யாததுனால, வேறு வாய்ப்புகளைத் தேடினேன். அப்பத்தான் கேந்திரம் முனியசாமி அண்ணன் மூலம் கண்ணனைப் பார்த்தேன். சினிமாவுல என்ன தெரியும்னு கேட்டார். கவிதை எழுதுவேன்னு சொன்னேன். அவர் தயாரிச்ச "மதில் மேல் பூனை'லதான் "இருளைக் கட்டி வை.. பகலைத் தட்டி வை'ங்கிற முதல் பாட்ட எழுதுனேன். 2013-ல இந்தப் படம் ரிலீஸாச்சு.
ஓயாத வேட்கைல சுற்றிய எனக்கு பாபுங்கிற உதவி இயக்குநர் மூலம் இசை யமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் அறிமுக மானார். அல்போன்ஸ் புத்ரன் டைரக்ட் பண்ணுன "நேரம்' திரைப்படத்துல, ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல "காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்'ங்கிற பாட்ட எழுதுனேன். இன்னைக்குவரைக்கும் அந்தப் பாட்டுதான் சினிமாவுல நான் இயங்கிட்டே இருக்கிறதுக்கு காரணமா இருக்கு. கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத்தந்த அந்தப் பாட்டு, இலக்கிய ஆளுமைகளுக்கும், அண்ணன் நா.முத்துக்குமாருக்கும் கூட ரொம்பப் பிடிச்ச பாட்டு. அந்தப் பாட்ட பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாதுன்னு சொல்லுற அளவுக்கு புதுமையா காட்சிப்படுத்தி இருந்தார் அல்போன்ஸ் புத்ரன்.
சித்தார்த் நடிச்ச எனக்குள் ஒருவ னுக்கு வசனம் எழுதிருக்கேன். "ஒரு கிடாயின் கருணை மனு'ல கொலைச்சிந்து வடிவத்துல ஒரு பாட்டு எழுதுனேன். இதுக்கு முன்னால "மலையூர் மம்பட்டியான்'ல இசைஞானி இசைல வைரமுத்து இந்த வடிவத்தைப் பயன்படுத்துனாரு. பிரியதர்ஷன் சார் டைரக்ஷன்ல "அப்பத்தா' படத்துக்கு நான் எழுதுன பாட்டைக் கேட்டு ஊர்வசி அம்மா, சித்ரா அம்மா ரொம்பவும் ரசிச்சு பாராட்டு னாங்க. பிரியதர்ஷன் சார்கிட்ட உதவி இயக்குநரா சினிமா வாழ்க்கைய ஆரம்பிச்ச இயக்குநர் ஏ.எல்.விஜய் சாரும் அந்தப் பாட்ட எழுதிய என்னை உச்சிமுகர்ந்து பாராட்டுனாரு.
ஏ.எல்.விஜய் சாரோட சகோதரி மகன் ஹமரேஸ் நாயகனா நடிச்சு இப்ப ஓடிட் டிருக்கிற "ரங்கோலி'ல ரெண்டு பாட்டு எழுதிருக்கேன். "எங்கெங்கும் வானம் எங்கேயும் நீ போலாம் போடா'ங்கிற பாட்டுல... "எங்க நான் போகணும்.. எங்க நான் வாழணும்.. என்ன நான் திங்கணும்.. நீ ஏதும் சொல்லாத.. என்ன நான் பேசணும்.. என்ன நான் கேக்கணும்.. என்ன நான் பாக்கணும்.. ஆர்டர் நீ போடாத'ங்கிற வரிகளுக்கு ரொம்ப பாராட்டு கிடைச்சது. இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், இந்தப் பாடல் வரிகளைப் பாடும்போது, "நா.முத்துக் குமார் அண்ணன் எழுதிய "பளபளக்குற பகலா நீ'ங்கிற பாடல் போல உற்சாகம் தரக்கூடிய பாட்டா இருக்கு'ன்னு என்னை உற்சாகப் படுத்துனாரு. இந்தப் பாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில போய்ச் சேர்ந்ததுல எனக்கு மகிழ்ச்சி. "தலைவி' படத்துல ஏ.எல்.விஜய் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அது வேறொரு தளத்துக்கு என்னைக் கொண்டுபோச்சு.
காலத்தால் மறக்க முடியாத பாடல்களை எழுதிய கவிஞர்கள் பலருக்கும் வழிகாட்டிய தமிழ் சினிமா எனக்கும் நல்லதொரு வழிகாட்டும்''’என்று நம்பிக்கையுடன் பேசினார் வேல்முருகன்.