மிட்நைட்டில் ரயில்வே ஜங்ஷனிலிருந்து வெளியேவந்த நம்மை பின்தொடர்ந்தவர், “""என்ன சார்… இந்த ஏரியாவுல இருக்குற எந்த காலேஜ் பொண்ணு வேணும்னு சொல்லுங்க''’என்று ஆண் நிர்மலாதேவியாய் மாறி நமக்கு கொக்கிபோட, நமக்கோ பேரதிர்ச்சி. விசாரித்தபோது, “""ரொம்ப லக்ஸரியா வாழணும்னு நினைக்கிற ஒரு சில கல்லூரி மாணவிகள்தான் இந்தமாதிரி புரோக்கர்களின் டார்கெட். காதல்ங்குற பேர்ல மன்மதன்களை அனுப்பி கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசி… போட்டோ, வீடியோக்களை எடுத்து வெச்சுக்கிட்டு ப்ளாக்மெயில் பண்ணி தங்களோட பிசினஸுக்கு இரையாக்கிடுறாங்க. அதுமட்டுமில்ல,வெளி மாநிலங்களிலிருந்து வறுமையான இளம்பெண்களை கொண்டுவந்து மாடர்ன் ட்ரெஸ்ஸுகளைப் போட்டுவிட்டு காலேஜ் ஸ்டூடண்டுன்னு ஏமாத்துற வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. போறவன்… ஐ.டி. கார்டெல்லாமா கேட்கப்போறான்? ஆனா, கல்லூரி மாணவிகளோ, வெளிமாநில இளம்பெண்களோ அவுங்களும் பெண்கள்தானே. இதுவும், கொடூரமான பாலியல் துன்புறுத்தல்தான்''’ என்கிறார்கள் அங்குள்ள ஆட்டோக்கார தோழர்கள்.
அங்கிருந்து பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புதியபேருந்து நிலையம் சென்றபோது அந்த இரவிலும் பரபரப்பாக இருந்தது. பயணிகள் தங்கும் அறையில் பலரும் படுத்திருக்க... தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும் அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த விசாலமான அறையைச் சுற்றி குடிநீர்க் குழாய்கள் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தன... திருகிப் பார்த்தோம், ட்ரெயினே பஞ்சர் ஆனால்கூட காற்றடிக்கலாம் போல. அந்தளவிற்கு, தண்ணீருக்கு பதிலாக காற்று பீறிட்டுக்கொண்டு வருகிறது.
அந்த அறையைவிட்டு வெளியே வந்தபோது, வாடாமல்லியை தலையில் சூடியிருந்த அந்த பெண்மணியை நோக்கிச்சென்றனர் சில இளைஞர்கள். பெங்களூரு பேருந்துகள் ஏறும் இடத்தில் மார்டனாக நின்றுகொண்டிருந்த அந்த திருநங்கையிடம் டூவீலரில் வந்த இளைஞர்கள் "300 ரூபாய் 'என்று பேசிக்கொண்டிருக்க... திடீரென்று அந்த திருநங்கையிடம் அப்படியொரு குரல் வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. “
"செருப்பு பிஞ்சிடும்…பொறுக்கி நாய்ங்களா…திருநங்கைகள் நைட்டுல வந்தாலே அதுக்குத்தான் வருவாங்களா? பஸ் ஏற வரமாட்டாங்களா? நீங்கள்லாம் அக்கா, தங்கச்சிங்க கூடதானடா பொறந்தீங்க. உன் அக்காவையோ, தங்கச்சியையோ பஸ் ஸ்டாண்டுல வந்து கூப்ட்டா உங்களுக்கு எப்படிடா இருக்கும்? இருங்கடா… போலீஸை கூப்பிடுறேன்''’என்றதுதான் தாமதம். டூவீலர்காரன்களின் வண்டியிலிருந்த மொத்த புகையும் வெளியே கக்கியது. நொடிப்பொழுதில் காணாமல் போனார்கள். ஷாக்குடன் பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் பார்த்து... “
""பெங்களூர்ல பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேண்ணா. இங்க, ரிலேஷன் வீட்டுக்கு வந்துட்டு போயிக்கிட்டிருக்கேன். என்னைப் பார்த்து இப்படி கேட்டா எப்படிண்ணா இருக்கும்?''’ என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறிய திருநங்கை நம்மைப் பார்த்து புன்னகைக்க… "காமம் கடந்து…"மஞ்சள் மேகம்… மஞ்சள் மேகம் சிறுபெண்ணாகி முன்னே போகும்'’ என்ற "பைரவா' பட பாடல் ரீங்காரமிட்டதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார் நம்முடன் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞர். தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பேருந்துநிலையத்தில் ஒரு திருட்டு, ஒரு அடிதடி என்றால் புகார் சொல்ல ஒரு போலீஸ்பூத் கூட இல்லை. சென்னை பேருந்துகள் நிறுத்துமிடத்தில் ஆவின்பால் பூத் பின்புறம் திறந்தவெளி டாஸ்மாக் செயல்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
அங்கிருந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை ஓட்டியபோது… மணல் திருட்டு நடப்பதை கவனிக்க முடிந்தது. ""இரவு 11 மணியில் ஆரம்பித்து விடியற்காலை 3 மணிவரை மணல் திருட்டு நடக்கிறது. தயாளன், பாபு, ரமேஷ், காங்கு, வெள்ளை எ.சிங்காரம், பிரபு. இவனுங்கதான், இரு சக்கர வாகனத்துல மணல் கடத்தும் கில்லாடிகள். சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனை கடந்துதான் தினமும் மணல் கடத்துறானுங்க. ஆனால், போலீஸார் நிறுத்தி என்ன ஏதுன்னுகூட கேட்கமாட்டாங்க.
ஏன்னா, கடத்தலுக்கு துணையா இருக்கிறவங்களே அவங்கதானே? இதுமட்டுமா? ஒரு நம்பர் லாட்டரி இங்க அமோகமா இருக்கு. மஸ்தான், சுரேஷ், நாகராஜ், பக்ருதீன், நாஸர், அரப், வஜீர், தாஜுதீன், மொய்தீன் உள்ளிட்டவங்கள புடிச்சு விசாரிச்சாலே மொத்த உண்மையும் வெளிய வந்துடும்''’என்று நம்மை கிர்ர்ர்ர்ரடிக்க வைக்கிறார்கள். அப்படியே… பெருமுகை அரசுப்பள்ளி வழியாக வந்தபோது அந்த வளாகத்தில் அமர்ந்து நள்ளிரவில் இளைஞர் பட்டாளம் போதை ஏற்றிக்கொண்டிருந்தது. வேலூர் பழைய பேருந்து நிலையம் சின்ன சப்தம்கூட வராமல் மன்மோகன்சிங் மோடில் இருந்தது. அங்கிருந்து, காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றபோது காய்கறிகளை ஏற்றுவதும் இறக்குவதுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
போலீஸாரின் மாமூல்’ மிரட்டலுக்கு பயந்து தள்ளுவண்டிக்கடைகளின் வியாபாரம் அண்டர்கிரவுண்ட் பிசினஸ்போல் நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் கூடைகளோடு அந்த கொசுக்கடியிலும் துர்நாற்றத்திலும் படுத்துக்கிடக்கிறார்கள் பரிதாபமாக. அப்படியே… வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது... நோயாளிகளுடன் வந்தவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் நோயாளிகளுக்கு "தானம்' செய்யவேண்டியவர்கள் கொசுக்களுக்கு ‘இரத்ததானம்’ செய்துகொண்டிருந்தார்கள். நல்லவேளை… குழந்தைகள், முதியவர்கள் மீதாவது கருணை காட்டி அங்கு ஆவின் பாலகம் இயங்கிக்கொண்டிருந்தது. பாதாம் மில்க்கை குடித்துவிட்டு… வீட்டிற்கு புறப்பட்டோம்.
(பயணிப்போம்)
ரவுண்ட்-அப்: ராஜா
தொகுப்பு: மனோ