"உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா' என்கிற கேள்வி பட்டிதொட்டி யெங்கும் தமிழகத்தில் எதி ரொலிக்கிறது. ஆளும்கட்சியான அ.தி.மு.க., "உள்ளாட்சித் தேர் தலை நடத்திவிடுகிறோம்' என உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி தந்துள்ளது. மக்கள் மன்றத்திலும் முதல்வர் எடப்பாடி முதல், அமைச் சர்கள்வரை "உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்' என வாக்குறுதி தந்து வருகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல், தமிழக மாநில தேர்தல் ஆணையமும், "அனைத்து ஏற்பாடுகளும் தயார்' என்கிறது, "மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகளை இட மாற்றம் செய்யுங்கள்' என உத்தரவிடுகிறது, உள்ளாட்சித் துறையிடம் "தேர்தல் பணிகளை தொடங்குங்கள்' என உத்தரவிட்டுள்ளது. அப்படி உத்தரவிட்டும் அதிகாரிகளுக்கே இன்னும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க. தரப்பில் சுறுசுறுப்பு தெரிகிறது.

வேலூர் மாவட்டத்தில் "உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபடுங்கள்' என ஒவ்வொரு நகரம், ஒன்றியம் வாரியாக கூட்டம் போட்டு வலியுறுத்தி வருகிறார் அமைச்சர் வீரமணி. வேலூர் மாநகர நிர்வாகிகளுக்கான கூட்டம் நவம்பர் 3-ந்தேதி நடைபெற்றது. அங்கு பேசும்போது, ""நம் கட்சியின் எதிர்காலம் இந்த தேர்தல் மூலம்தான் உள்ளது. அதனால் சண்டை சச்சரவு இல்லாமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். கவுன்சிலருக்கு நிற்பவர்கள் அந்த பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும், பொருளாதாரத்தில் நல்ல வலிமையுடன் இருப்பவராக இருக்க வேண்டும்'' எனச் சொல்லியுள்ளார்.

vvஇந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வன்னியர்களுக்கு சமமாக முதலியார்கள் உள்ளார்கள். ஆனால் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க பதவிகளில் பெரும்பாலானவற்றை தனது வன்னியர் சாதியை சேர்ந்தவர்களுக்கே தந்துள்ளார் அமைச்சர். மாவட்ட பால்வளத் தலைவர் வேலழகன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஏழுமலை, கூட்டுறவு அச்சக சங்க தலைவர் டி.டி.குமார், திருவலம் சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன், கூட்டுறவு வங்கி தலைவர் ராமு என தன் சாதியை சேர்ந்தவர்களுக்கு 90 சதவீதத்தையும், பிற சாதியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு மீதி 10 சதவீத பதவிகளையும் தந்துள்ளார் அமைச்சர் வீரமணி.

அதேபோல் கட்சியிலும் வேலூர் கிழக்கு மா.செ.வாக உள்ள ரவி எம்.எல்.ஏ. தன் சாதியை சேர்ந்தவர்களுக்கு பதவியை வாரி வழங்கிவிட்டார். முதலியார்களுக்கு பதவிகளே தரவில்லை. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் அந்தந்த பகுதிகளில் எந்த சாதி பலமாகவுள்ளதோ அந்த சாதியை சேர்ந்த பிரபலங்களுக்கே மேயர் மற்றும் சேர்மன் சீட் தர வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளார்கள் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில். அதோடு, வேலூர் மாநகராட்சி மேயர் பதவி ரிசர்வ் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றி மேயர் பதவியை பொது என அறிவிக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை முதல்வர் வரை கொண்டு சென்றுள்ளனர். வேலூர் மேயர் பதவிக்கான சீட்டுக்காக இப்போதே களமிறங்கத் தொடங்கியுள்ளார்கள் அ.தி.மு.க. பிரமுர்கள்.

Advertisment

""மேயர் பதவியை பொதுவாக மாற்றும் பட்சத்தில் அ.தி.மு.க.வின் முன்னாள் மா.செவும், காட்பாடி தொகுதியில் தி.மு.க. பொருளாள ராகவுள்ள துரைமுருகனை எதிர்த்து இரண்டுமுறை நின்று தோல்வியை சந்தித்தவருமான அப்பு (எ) ராதாகிருஷ்ணன் கோதாவில் இறங்கவுள்ளார். முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், "எனக்குத் தாங்க' எனக் கேட்டுவருகிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக, முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளரும், அவருடன் நெருக்கமாகவுள்ள வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி யின் மா.செ. ஜனனி சதீஷ்குமாரும் காய் நகர்த்துகின்றனர். அ.ம.மு.க.வில் இருந்து மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வந்துள்ள எல்.எம்.கே.வாசு, முன்னாள் அ.தி.மு.க. மா.செ. சிவசங்கரன் ஆகிய இருவருக்கும் மேயர் பதவி ஆசைகாட்டி அழைத்து வந்துள்ளனர். "மகளிர் பொது' என மாற்றினால் தனது மகளுக்கு கேட்க முடிவு செய்துள்ளார் வாசு. மற்றவர்களும் தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். மேயர் பதவி தலித் பிரிவில் பெண்களுக்கு என்பது மீண்டும் உறுதியானால், அமைச்சர் வீரமணி தேர்வு செய்து வைத்துள்ள முன்னாள் மா.செ. கர்ணலின் மகள் செந்தாமரை மேயர் வேட்பாளர்'' என்கின்றனர் மாவட்ட அ.தி.மு.க. புள்ளிகள். .

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் கோதாவில் குதித்துள்ளது. மேயர் பதவி தலித் பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட் டால், பா.ஜ.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவுள்ள முன்னாள் மேயர் கார்த்திகாயினி மீண்டும் சீட் வாங்கும் முயற்சியில் உள்ளார்.

தி.மு.க.வில், அரசு மருத்துவர் வேலையை ராஜினாமா செய்து கடந்தமுறை மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியை சந்தித்தவரும் தற்போது மாவட்ட மருத்துவரணி அமைப்பாளராகவும் உள்ள ராஜேஸ்வரி பெரிதும் எதிர்பார்க்கிறார். முன்னாள் மேயரும், தற்போதைய வேலூர் எம்.எல்.ஏ.வுமான கார்த்தியின் ஆதரவாளரும் தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான தயாள்ராஜ், தனது மனைவிக்கு சீட் கேட்கிறார். மேயர் பதவி பொதுவாக மாற்றிவிட்டால் மாஜி எம்.எல்.ஏ. ஞானசேகரன் முயற்சி செய்கிறார். முன்னாள் துணைமேயர் முகமது சாதிக் வரிசையில் நிற்கிறார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகனையும், மாநகர செயலாளர் கார்த்தியையும் முற்றுகையிட்டு வருகின்றனர்.

Advertisment

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என அரசாணையே வந்துவிட்டாலும், சீட்டை குறிவைத்திருப்பவர்கள் அசரவில்லை.

-து. ராஜா