அ.தி.மு.க. ஆட்சியில் 2003 முதல் 2021 வரை ஜெ, எடப்பாடி அமைச்சரவை யில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, வணிகவரித்துறை என வளமான துறைகளின் அமைச்சராக இருந்தவர் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த கே.சி.வீரமணி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களில் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் வரிசையில் வீரமணி பெயரும் ஊழல் பட்டியலில் இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெய்ராம் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் வீரமணி மீது ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பினார். அதில், ஜோலார்பேட்டை தொகுதியில் 2011-ல் முதல்முறையாக போட்டியிட்ட வீரமணி குடும்பத்தின் சொத்துமதிப்பு 7.48 கோடி. தற்போது அவர் 2021-ல் காட்டியுள்ள சொத்துகளின் மதிப்பு மட்டுமே 91.2 கோடி.
கடந்த 10 ஆண்டுகளில் எப்படி இவ்வளவு வருமானம் வந்தது?. வருமானம் வந்த வழியை காட்டவேயில்லை, ஆனால் சொத்தக்களை வாங்கிக் குவித்துள்ளார். சில சொத்துக்களை மட்டும் தானமாக வந்தது என்கிறார். அமைச்சராக இருந்தபோது வாங்கிய லஞ்சத்தை தனது மாமனார் பழனியிடம் தந்து, அவர் அதனை சொத்துக்களாக வாங்கி தனது மருமகனுக்கு தானமாக வழங்குவதுபோல் செட்டிங் செய்துள்ளார். 100 ஏக்கர் நிலம் உட்பட பல சொத்துக்களை மாமனார் தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். அதேபோல் அம்மா மணியம்மாள், சகோதரிகள் தன்மானம், சுதா, சுசீலாவும் இப்படி சொத்துக்களை வீரமணிக்கு தான செட்டில்மெண்ட் தந்துள்ளனர். இந்த சொத்துக்களை அவர்கள் தானமாக தருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் வேறு நபர்களிடமிருந்து வாங்கியுள்ளனர். வாங்கிய ஒரு மாதத்தில் அப்படியே வீரமணி பெயருக்கு வந்துள்ளது.
அதேபோல், ஓசூர் சிப்காட்டில் 1 சென்ட் நிலம் வருடத்துக்கு 1 ரூபாய் என்கிற விலையில் 99 ஆண்டுக்கு வீரமணிக்கு சொந்தமான ஹோம் டிசைனர்ஸ் அன்ட் பேர்பரிக்காட்டர்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு 2017-ல் விடப்பட்டுள்ளது. அதில் பிரமாண்டமான ஹோட்டலை ஓசூர் ஹில்ஸ் என்கிற பெயரில் கட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் இவருடையது. மற்ற 30 சதவீதம் இவருடைய உறவினர்களுடையது. அதில் 8 கோடி இன்வெஸ்ட் செய்துள்ளார். அந்த தொகை அவருக்கு எப்படி வந்தது என்பதற்கான ஆதாரமே கிடையாது என புகார்களை தொகுத்து அனுப்பியிருந்தனர்.
அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முன்பு 2016-ல் அமைச்சராக இருந்தபோதே வீரமணி வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்துவிட்டார். நாட்றம்பள்ளி அருகே விவசாயக் கல்லூரி தொடங்கியுள்ளார், திருமண மண்டபம் கட்டியுள்ளார். ஏலகிரி யில் முன்னாள் எம்.பி. ஒருவரிடமிருந்து ஹோட்டலை மிரட்டி வாங்கி யுள்ளார் என்கிற குற்றச்சாட்டு கவர்னர் வரை புகாராக சென்றது. இரண்டாவது முறை அவர் எம்.எல்.ஏவாகி, அமைச்சரானதும் புகார் தந்தவர் சரிக்கட்டப்பட்டார், புகார் கடிதம் பழைய பேப்பரானது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் இணைந்து பாலாற்று மணல் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார் வீரமணி. ஜெ. இறந்தபின் ஓ.பி.எஸ் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்தியவர் எடப்பாடியிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார், சசிகலாவை திட்டிக்கொண்டிருந்தார். அப்போது, வேலூர் பேருந்து நிலையம் அருகே ஒரு நிலம் சம்பந்தமாக ரியல் எஸ்டேட் வியாபாரிகளான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷை தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசி தாக்கிய தால், அவர்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதே நேரத்தில் பிரதமர் அலுவலகத்துக்கும், வருமானவரித்துறைக்கும் புகார்களை அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் 2019 பிப்ரவரி 19-ஆம் தேதி வருமானவரித்துறையினர் அமைச்சர் வீரமணி வீடு உட்பட 33 இடங்களில் ரெய்டு நடத்தினர்.
அந்த ரெய்டுக்குப் பின் அதுவரை ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்தவர், ரெய்டுக்குப் பின் அப்படியே இ.பி.எஸ். ஆதரவாளராக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டார் வீரமணி. தொழிலதிபர் சேகர் ரெட்டி உட்பட பல முக்கிய புள்ளிகளை கையில் வைத்துக் கொண்டு ஏலகிரி, திருப்பத்தூர், ஓசூர், பெங்களுரூவில் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டல்களை கட்டத் துவங்கினார். மற்றொரு புறம் காலேஜ்கள், திருமண மண்டபங்கள், நிலங்கள் என வரிசையாக வாங்கி குவித்துக்கொண்டே இருந்தார். ஆனால் இதனை பெரிய பந்தா இல்லாமல் வருமானம் சேர்த்துக்கொண்டே இருந்தார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தன்னை தி.மு.க.வின் முக்கிய புள்ளி காப்பாற்றுவார் என நம்பியிருந்தார். இதற்காக அவருக்கு தேவையான பலவற்றையும் செய்து தந்தார். மாமா - மச்சான் என உறவு கொண்டாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 25 இடங்களில் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் ரெய்டு நடந்துவரு கிறது. வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விஜய், 15-ஆம் தேதி ஊழல் புகாரை பதிவு செய்தார். ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணியின் வீடு, திருமண மண்ட பம், ஏலகிரியில் உள்ள ஹோட்டல், ஒசூரில் உள்ள ஹோட்டல், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலையில் உள்ள மாமனார் பண்ணையார் பழனி வீடு, சின்ன மாமனார் கார்த்திகேயன் வீடு, பெரிய காவல் துறை அதிகாரிகளின் இடமாற்றம் முதல் பல விவகாரங்களை கவனித்த வீரமணி பினாமி அரக்கோணம் ஷ்யாம் வீடு, குடியாத்தம் அடுத்த கொத்தமாரி குப்பத்தில் உள்ள வீரமணிக்கு சொந்தமான கல்லூரி, வீரமணியின் சென்னை வீடு, ஹோட்டல்கள் என 25 இடங்களில் 100-க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இந்த ரெய்டில் ஈடுபட்டனர்.
தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு, லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் நடவடிக்கைக்கு உள்ளானவர் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவருக்கு சொந்தமான இடங் களில் நடந்த ரெய்டுகளுக்குப் பிறகு, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து கே.சி.வீரமணி குறி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பல இடங்களில் சரிக்கட்டியும், இப்போது ரெய்டு பீதியில் உள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
மாஜி அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்து, சொந்தக் கட்சிக்காரர்களே பேசுகிறார்கள். ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் புகார்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்தப் புகார்களை தி.மு.க. அரசு தூசு தட்டியதால், ல.ஒ.துறையினர் ரெய்டு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். ரெய்டுகளோடு நடவடிக்கை முடிந்துவிடுமா? ஜெ-சசி மீது பாய்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு போல வலுவாக நடத்தப்படுமா என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
____________________________________
எங்கெங்கே?
வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையைத் தொடங்கினர். திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 14 இடங்களில் ரெய்டு நடந்தது.
1. திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்
2. ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்
3. ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள அமைச்சர் வீடு
4. பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள அமைச்சரின் மற்றொரு வீடு
5. அமைச்சரின் அண்ணன் காமராஜ் வீடு
6. அமைச்சரின் அண்ணன் அழகிரி வீடு
7. அமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த மண்டி
8. தமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு
8. திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் வீடு
9. ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள மகளிர் அணி தலைவி சாந்தி வீடு
10. ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம்
11. நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா வீடு
12. நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் வீடு
13. நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் வீடு
14. ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு