தேர்தல் முடிந்த மறுநாள், இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதால் சாதி பிரச்சினையாகிவிடுமோ எனப் பதட்டத்தில் இருக்கிறது அரக்கோணம் தொகுதி.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தனி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மா.செ.வும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரவி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகியான வழக்கறிஞர் கௌதம்சன்னா நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் ரவி, கடந்த பத்து ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து தொகுதி மக்களிடம் கடுமையான அதிருப்தியை சம்பாதித்து வைத்திருப்பதால் அவரால் வாக்கு கேட்டு தொகுதிக்குள் சுதந்திரமாகச் செல்ல முடியவில்லை.
இது தனித்தொகுதி என்பதால் பட்டியலின மக்கள் அதிகளவில் உள்ளனர். அதே அளவுக்கு வன்னியர்களும் உள்ளனர். பா.ம.க.வின் வளர்ச்சிபோல வி.சி.க., புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் பார்ட்டி உட்பட சில தலித் கட்சிகளும் இங்கு கணிசமாக உள்ளன. மக்களின் எதிர்ப்பால் தனது பட்டியலின சாதி வாக்குகள் வெற்றிக்கு கைகொடுக்காது என்பதால் கூட்டணியில் உள்ள பா.ம.க.வை கையிலெடுத்தார் அ.தி.மு.க. வேட்பாளர் ரவி. களத்தில் எதிர்த்து நின்றது வி.சி.க. என்பதால் பா.ம.க. இளைஞரணியினர், ரவிக்காக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதேபோல் போட்டி போட்டுக்கொண்டு வி.சி.க. இளைஞர்களும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டினர். ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவுற்றது. ஏப்ரல் 7-ஆம் தேதி இரண்டு இளைஞர் கள் படுகொலையாக... அரசியல் கொலையென தகவல் பரவ, அரக் கோணம் தொகுதியை யும் தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவகாரம் குறித்து நாம் விசாரித்தபோது, செம்பேடு காலனி பகுதியைச் சேர்ந்த அப்பு, சௌந்தர்ராஜன் இரு வரும் பைக்கில் குருவராஜ பேட்டை டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளனர். அதேபோல் பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த அஜித், புலி என்கிற சுரேந்தர் இருவரும் ஒரு பைக்கில் அதே குருவராஜப்பேட்டைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கிக்கொண்டு திரும்பி தங்களது ஊருக்கு வரும் போது, குருவராஜப்பேட்டையி லேயே இரு பைக்குகளும் உரசியதில், இருதரப்பும் அங் கேயே சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். அங்கிருந்த சிலர் அவர்களை விலக்கிவிட, சமாதானம் பேசிக்கொள்ளலாம் என இருதரப்புக்கும் பொது வான ஊரான சித்தாம்பாடி கவுதம்நகர் பகுதியைத் தேர்வு செய்துள்ளனர்.
அங்கு இரு தரப்பும் தங்களது ஆட்களுடன் திரண்டுள்ளனர். அரக்கோணம் அ.தி.மு.க. மேற்கு ஒ.செ. பழனியின் மகனும் அ.தி.மு.க. ஐ.டி. விங் ஒ.செ.வுமான சத்யா, பஞ்சாயத்து பேசியதாகக் கூறப் படுகிறது. அப்போது இருதரப்பும் போதையில் இருந்ததால் வாய்ச் சண்டை, கைச்சண்டையாகி இரு சமூக இளைஞர்களும் அடித்துக் கொண்டுள்ளனர். அதில் பெரு மாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் சோகனூர் பகுதி இளைஞர்களைக் கத்தி, பாட்டிலால் குத்தியதில் ஒரே சாதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அங்கேயே இறந்துபோயினர். இரண்டு இளைஞர்கள் இறந்த தகவல் காட்டுத் தீயாய் பரவியது.
"கொலையான 23 வயது சூர்யாவுக்குத் திருமணமாகி 12 நாட்களாகியிருந்தது. 26 வயது அர்ஜுனனுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. அவரது மனைவி லஷ்மி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்' என்கிற தகவல் பரபரப்பை அதிகப்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென சாலை மறியலில் இறங்கினர் இறந்த இளைஞர் களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள். சாலை மறியல் தொடங்கிய ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு பெருமாள்ராஜப் பேட்டையை சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான டிராக்டர், 300 மூட்டை நெல் குவியலை மண்ணெண்ணெய் ஊற்றி சிலர் தீவைத்து எரித்ததால் பதட்டம் அதிகமானது. குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை போராட்டம் நடைபெறும் என்றதால் திருத்தணி- குருவ ராஜப்பேட்டை சாலையில் இரண்டு நாட்களாக வாகனங் கள் செல்லவில்லை. பெருமாள்ராஜப்பேட்டையை சேர்ந்த அஜித், புலி, நந்தா, மதன், கார்த்திக் என 6 பேரை கைது செய்துள்ளது போலீஸ்.
சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் நம்மிடம், ""தேர்தலின்போது பானை சின்னத்துக்கு தீவிரமாக களப்பணியாற்றினார்கள் சோகனூர், செம்பேட்டை பகுதி இளைஞர்கள். இவர்களுக்கும் பக்கத்து கிராமமான பெருமாள்ராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூக இளைஞர்கள் சிலருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். தேர்தலின்போது அவர்கள் இரட்டை இலைக்கும், இவர்கள் பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டுள்ளார்கள். இதில் ஏற்பட்ட கோபத்தில் பெருமாள்ராஜப்பேட்டை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. ஒ.செ. பழனி மகன் சத்யா, தேர்தல் முடிந்த மறுநாள், சோகனூர் இளைஞர்களிடம் பிரச்சினை செய்து, பின்னர் "பேச்சுவார்த்தைக்கு வா' என அழைத் துள்ளார்கள். அங்கு இவர்களும் சென்றுள்ளார்கள். அவர்கள் கத்தி, கட்டையுடன் தயாராக இருந் துள்ளார்கள். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில் அர்ஜீன், சூர்யா இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். காயம்பட்ட சௌந்தர்ராஜன், மதன் உட்பட மூன்று பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராடுவோம்'' என்றார்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒ.செ. பழனியை தொடர்பு கொண்டு பேசியபோது, ""ஒயின்ஷாப்ல ஏற்பட்ட தகராறில் இரண்டு குரூப் அடிச்சிக்கறாங்க. அப்படியே ஊருக்குப் பக்கத்துலயும் வந்து அடிச்சிக்கறாங்க. அந்த வழியாக வந்த என்னோட மகன் சத்யா, அதைப் பார்த்துட்டு நமக்கு எதுக்கு வம்புன்னு வந்துட்டான். ஆனா இப்போ இந்த கொலை விவகாரத்தில் சம்மந்தமேயில்லாம என் மகனை இழுத்துவிடறாங்க. இதுக்கும் என் மகனுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. நான் அ.தி.மு.க.வில் இருக்கன், எங்க கட்சியில் தலித்கள் இருக்காங்க. அப்படியிருக்கறப்ப நான் எப்படி சாதிரீதியா செயல்படுவேன்'' என கேள்வி எழுப்பியவர், ""ஒயின்ஷாப்ல உருவான பிரச்சினையை அரசியல் பிரச்சினையா, சாதி ரீதியா திசை திருப்பறதுக்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகர் உள்ளார். அவரின் குடும்பத்தில் பா.ம.க., அ.ம.மு.க. என உள்ளார்கள். ஊரில் மணல் கடத்தல், கஞ்சா கடத்தல் செய்யும் அவர்கள்தான் எனக்கு எதிராக திசை திருப்புகிறார்கள்'' என்றார்.
இது குறித்து இராணிப்பேட்டை எஸ்.பி. சிவக்குமாரிடம் கேட்டபோது, ""பைக்கில் வரும்போது ஏற்பட்ட தகராறு. இருதரப்பும் நண்பர்களை அழைக்க அது மோதலாகியிருக்கு. இப்போ அரசியல், சாதின்னு சொல்றாங்க... விசாரிக்கறோம்'' என்றார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன், ""பா.ம.க.வை தடை செய்ய வேண்டும், கொலை செய்த பா.ம.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம்'' என அறிக்கை வெளியிட... அரசியல் களத்திலும் பரபரப்பு அதிகமானது. தேர்தல் முடிந்தபிறகு, அரசியல் பகை -சாதிப் பகை உள்ளிட்டவை தீர்க்கப்படுவது ஒருசில பகுதிகளில் நடக்கும். சில இடங்களில் அத்தகைய சாயம் பூசப்படுவதும், பூசி மெழுகுவதும் நடக்கும். அரக்கோணம் விவகாரத்தில், முழுமையான விசாரணையும், அதனடிப் படையில் கடுமையான தண்டனையும் வழங்கப்படுவதுதான், பலியான இளைஞர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்கக்கூடிய நீதி.