"வாயைத் திறந்தாலே வம்பு தான்!" என்கிற அளவில் செல்லுகின்ற இடமெல் லாம் சர்ச்சைப் பேச்சுகளை பேசுவதே வாடிக்கையாக உள்ளது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு! கடந்த 21ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்!' என்று கூறியதற்கு தமிழ்நாடெங்கும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் இராமலிங்க வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தனது மனைவி லட்சுமி ரவியுடன் வள்ளலார் வாழ்ந்த இடமான மருதூருக்குச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பின்னர், வடலூரில் உள்ள சத்திய ஞான சபைக்கு ஆளுநர் ரவி சென்றபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி, கருப்புக் கொடி ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். வடலூரில் ஒரு திருமண மண்டபத் தில் வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய ஆளுநர், "சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களை படிக்கப் படிக்க பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் பெருமான் ஆவார். காழ்ப்புணர்ச்சி, அறியாமை காரணமாக சனாதன தர்மத்தை பற்றி சிலர் தவறான எண்ணம் கொண் டுள்ளனர். அனைத்து ஜீவராசிகளும் நோயற்று வாழ வேண்டும் என்பதுதான் சனாதனம். அதைத்தான் "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி னேன்' என்று வள்ளல்பெரு மானார் பாடினார் என்று முழுக்க முழுக்க சனாதனத்துக்கு எதிரான வள்ளலாரை, ஓர் சனாதனவாதியாகக் காட்ட முயன்றார் ஆளுநர்.
ஆளுநர் ரவியின் இந்த கருத்து வள்ளலார் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சாதி, சமய மூடநம்பிக்கைகளை எதிர்த்து ஆன்மீகப் புரட்சி செய்தவர் வள்ளலார். அப்படிப்பட்ட வள்ளலாரை சனாதனவாதி என அடையாளப்படுத்த ரவி முயற்சிக்கிறார் எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து வள்ளலார் பணியக ஒருங் கிணைப்பாளர் முருகன்குடி முருகன் நம்மிடம், "10,000 வருட சனாதன தர்மம் என்கிறார் ஆளுநர். கைபர் போலன் கணவாய் வழியாக வர்ணாசிரம தர்ம ஆரியர்கள் நுழைந்தே 5000 ஆண்டுகள்தான் ஆகின்றன. வள்ளலார் வர்ணாசிரம தர்மத்தை, சாதியை, மதப் பிரிவுகளை எதிர்த்தவர். "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' என்றார். தீட்சிதர்களின் வர்ணாசிரம பாகுபாடுகளை எதிர்த்து தான் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் எனும் சோசலிச சங்கத்தை தொடங்கி னார். ஆரிய, வேத, ஆகமங்களை சுக்குநூறாக உடைத்துப் போட்டவர் வள்ளலார். "வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேத ஆகமங்களின் விளைவு அறியீர்! சூதாக சொன்னதனால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை! என்ன பயனோ இவை!?' என்று கேள்வி எழுப்பியவர் வள்ளலார். வள்ளலாரையும், அவரின் உயரிய கோட்பாடுகளையும், இழிவுபடுத்திய ஆளுநர் ரவியின் விபரீதப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என்றார்.
வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநிலத் தலைவர் அருள்.நாகலிங்கம் கூறுகையில், "சாதி சமய சழக்கை விட்டேன்!' என்று வள்ளலார் பெருமான் கூறியுள்ளார். சனாதனத்தை உள்ளடக்கியது தான் சாதிய மதமும். சாதியும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சனாதனத் துக்குள் அடைக்க முடியாது. முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சுப் போடுவது போன்றது தான் சன்மார்க்கவாதியான வள்ள லாரை சனாதனவாதி என்பது. வள்ளலாரின் அருட்கொள்கை அன்புமயமானது. எனவே வள்ளலார் குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயன்ற ஆளுநர், மறுப்பு வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்'' என்றார்.
"சாதி, சமயம், மதம் பொய். கடவுள் அருளைப் பெறுவதற்கு அவை தடையாக இருக்கின்றன. சாதி, சமய, ஆச்சாரம், சனாதன தர்மம் இவைகளை ஒதுக்கிவிட்டு, கருணை மட்டுமே கடவுள் என்கிறார் வள்ளலார். வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் பற்று வைக்க வேண்டாம் என்கிறார். இதை நிலைநிறுத்துவதற்காக வழக்குகள் நடத்தப்பட்டு, வள்ளலார் மார்க்கம் தனித்தன்மை வாய்ந்தது இதில் சைவ வைணவ கொள்கைகளை, சனாதன தர்மத்தை புகுத்தக்கூடாது என்று உயர்நீதி மன்றமே உத்தரவிட்டுள்ளது'' என்கிறார் ஏ.பி.ஜே. அருள் என்கிற வழக்கறிஞர் இளங்கோ.
ராஜபாளையத்தை சேர்ந்த வள்ளலாரின் கொள்கைப்பிடிப்பாளர் சகாதேவராஜா நம்மிடம் "வள்ளலாருக்கு 200ஆவது ஜெயந்தி விழா எடுக்கிறார்கள் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சாதி, சமயம், மதம் பொய் என்று புதிய மார்க்கத்தை கொண்டு வந்த வள்ளலாரின் கொள்கைக்கு எதிராக, மடாதி பதிகள், ஆதீனங்கள், ஜீயர்கள், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் ஜாதியைப் புகுத்துவதை அவரது கொள்கைகளை அழிக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்'' என்றார்.
வள்ளுவரைப்போல் வள்ளலாரையும் காவிக்குள் அடைப்பதற்காக இந்துத்வா கும்பல், தமிழ்நாடு கவர்னரை ஓர் கருவியாகப் பயன்படுத்துவது அம்பலப்பட்டுள்ளது!
- எஸ்.பி.எஸ்., சுந்தரபாண்டியன்