"இந்தியன்-2' படப்பிடிப்பின்போது சங்கருக்கும் லைகாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் படப்பிடிப்பு பாதியில் நின்றதால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "விக்ரம்' படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் கமல்ஹாசன்.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தைத் தயாரிக்க, கமலுடன் பகத்பாசில், விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கமல் போலீஸாக நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்துவந்த சூழலில்... ஊரடங்கு, கமலுக்கு கொரோனா என சில சிக்கல்கள் அடுத்தடுத்து எழுந்தன. இதனையடுத்து, பட்ஜெட் மற்றும் கால்ஷீட்டை கருத்தில்கொண்டு திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்த இயக்குநர், அவுட்டோரில் எடுப்பதாக இருந்த சில காட்சிகளைச் சென்னை பின்னி மில்லுக்கு மாற்றியுள்ளாராம். தற்போது கமல் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பட வேலைகளைச் சுறுசுறுப்பாக மேற்கொண்டுவரும் படக்குழு, இந்த வருட கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம்.
ரஜினிகாந்த்தின் 169
"கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிய நெல்சன் திலீப்குமாரின் கேரியர் க்ராப், சிவகார்த்திகேயன், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என டாப் நட்சத்திரங்களுடன் அமைந்த கூட்டணி மூலம் உச்சத்தைத் தொட்டுள்ளது. "டாக்டர்' பட 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த உற்சாகத்தில் விஜய் நடித்துவரும் "பீஸ்ட்' படத்தை இயக்கிவருகிறார் நெல்சன். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார். நெல்சன் -சூப்பர் ஸ்டார் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடைசியாக ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த "அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க, ரஜினிகாந்த் -சன் பிக்சர்ஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கான படப் பிடிப்பை மே மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ரஜினிகாந்தின் 169-ஆவது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
எதிர்பார்ப்பில் "ராக் வித் ராஜா'!
இன்றும் படங்களுக்குப் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, அவ்வப்போது இசைக் கச்சேரிகள் நடத்தி தன்னுடைய ரசிகர்ளுக்கு இசை விருந்து வைப் பதையும் வழக்கமாக வைத்துள்ளார். கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையில் இசைக் கச்சேரி ஒன்றை நடத்தினார். பின், உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அவர் நடத்த திட்டமிட்டிருந்த இசைக் கச்சேரிகள் ரத்தாகின. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து, மெல்ல இயல்புநிலை திரும்பத் தொடங்கி யுள்ளதையடுத்து, அடுத் தடுத்து இசைக் கச்சேரிகள் நடத்த இளையராஜா தயாராகிவருகிறாராம். முதலில் சென்னையில் பிரம்மாண்ட கச்சேரி ஒன்றை நடத்திவிட்டு, பின் வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளாராம். "ராக் வித் ராஜா' எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த இசைக் கச்சேரி, மார்ச் மாதம் நடைபெற உள்ளது. கச்சேரி நடைபெறும் நாள் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இளைய ராஜாவின் இசைக் கச்சேரி என்பதால் இசை ரசிகர்கள் இந்தக் கச்சேரியை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர்.
காஜலின் பளிச் பதிவு!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை காஜல் அகர்வால், கடந்த அக்டோபர் மாதம் கௌதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில படங்களில் நடித்துவந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக உள்ளார். விடுமுறைக்காகத் தன்னுடைய கணவருடன் துபாய் சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அவருடைய சமீபத்திய புகைப்படத்தை வைத்து சிலர் உருவகேலி செய்யும் வகையில் மீம்ஸ்களைப் பதிவிட்டனர். இந்த நிலையில், கர்ப்பிணியாகத் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், அப்பதிவிலேயே உருவ கேலி செய்பவர்களுக்குப் பதிலடியும் கொடுத்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், "என்னுடைய வாழ்க்கையில், என் உடலில், என் வீட்டில், குறிப்பாக நான் வேலை பார்க்கும் இடங்களில் அற்புதமான சில முன்னேற்றங்களை நான் கையாண்டு வருகிறேன். அதனோடு கூடுதலாக, எதற்கும் உதவாத சில உருவ கேலி மீம்ஸ்களையும் குறுஞ்செய்திகளையும் எதிர்கொண்டுள்ளேன். கனிவாக இருக்கக் கற்றுக்கொள்ளலாம். அதுவும் கடினம் என்றால் வாழு, மற்றவர்களை வாழவிடு'' என குறிப்பிட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-இரா.சிவா