முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நீண்டகால உடல் சுகவீனத்திற்குப் பின், ஆகஸ்டு 16-ஆம் தேதி தனது 93 வயதில் காலமானார். மூன்றுமுறை பிரதமர் பதவியை அலங்கரித்த வாஜ்பாய், இன்றைய பா.ஜ.வின் ஆதார அமைப்பான ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். முதல்முறை அவரது பிரதமர் அந்தஸ்து 13 நாட்களே நீடித்தது. இரண்டாவது முறை பிரதமரானபோது, அன்றைய தமிழக முதல்வரான ஜெ., பா.ஜ. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டு 13 மாதங்களில் ஆட்சி கவிழக் காரணமானார். ஆனாலும் பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வெற்றிக்குப் பின் 1999-ல் நடந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகளும் இணைந்த கூட்டணியுடன் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து, கூட்டணி அரசை முதல்முறையாக வெற்றிகரமாக செயல்படுத்தியவர் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் பதவியை அலங்கரித்தவர்களில் கவிஞர் என்ற சிறப்புத் தகுதியைக் கொண்டவர் வாஜ்பாய் ஒருவர்தான். 2009-ல் ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவரது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பத்துமுறை மக்களவைக்கும் இருமுறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடையவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற வாஜ்பாய். மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசில் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த வாஜ்பாய், ஐ.நா. அவை உட்பட பல சர்வதேச மாநாடுகளில் கவனத்தை ஈர்க்கும் உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
பிரதமராக இருந்தபோது தங்க நாற்கர சாலை எனும் பெயரில் கணிசமான அளவுக்கு இந்திய சாலைகளை விரிவுபடுத்தினார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப்பேச்சில் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியவர் வாஜ்பாய். பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர், கூட்டணியில் பங்கேற்றிருந்த வைகோ ஆகியோருடனான நட்புறவால் சேது சமுத்திரத் திட்டம் போன்ற நல்ல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முயன்றார். ஈழப் பிரச்சினையிலும் அக்கறை செலுத்தியவர். நேருவுக்கு அடுத்தபடியாக தமிழக மக்களின் மனதுக்கு நெருக்கமான பிரதமர்களில் வாஜ்பாய்க்கு முக்கிய இடம் உண்டு.
1980-ல் பாரதிய ஜனதா உருவெடுத்தபோது அதன் முதல் தலைவராகப் பதவி வகித்தவர் வாஜ்பாய். அதேபோல, 2002 குஜராத் கலவரங்களின்போது அதற்குக் காரணமானவர்களை வாஜ்பாய் கடுமையாக எதிர்த்ததுடன் தனது கண்டனத்தையும் பதிவுசெய்தார். தனது அரசியல் பணிகளுக்கான அங்கீகாரமாக 2015-ல் பாரத ரத்னா விருதுபெற்றார். சிறந்த நாடாளுமன்றவாதியை நாடு இழந்துள்ளது.
தொகுப்பு: க.சுப்பிரமணியன்