போலீசாரில் சாத்தான்குளம் கொடூரர்களும் உண்டு. ஏரல் போல பரிதாபத்திற்குரியவர்களும் உண்டு. குடித்துவிட்டு தகராறு செய்த தன்னைத் தட்டிக் கேட்டதற்காக சிறப்பு இன்ஸ்பெக்டர் பாலு மீது லோடு ஆட்டோவை ஏற்றிக் கொலை செய்திருக்கிறார் முருகவேல் என்ற மெக்கானிக். பாதுகாப்பாற்ற காவல் பணியில் நாள்தோறும் காயங்களே பரிசாக வழங்கப்படு கிறது என்றால் நம்ப முடிகிறதா?
நாம் சந்தித்த சிலரில் அந்த இன்ஸ்பெக்டரின் கதை, மனதைக் கலங்க வைக்கிறது. அண்மையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை வழியாகக் கன்னியாகுமரிக்குச் சென்றார்.
முதல்வர் வருகிறார் என்பதால் போலீஸார் எல்லாப் பக்கமும் குவிக்கப்பட்டி ருந்தார்கள். இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வினர் அவரை வரவேற்பதற்காக மாவட்ட எல்லையிலேயே பெரிய அளவில் கூட்டப்பட்டிருந்தனர். அந்த பந்தோபஸ்து கெடு பிடிக்கு நடுவில், தோள்பட்டை யில் கருப்பு ரிங் அணிந்திருந்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், அங்கிருந்த மஞ்சள் ரிங்குடன் த்ரீ ஸ்டார் அணிந்திருந்த இன்ஸ்பெக்டர் மீது இளக்காரப் பார்வையை வீசினார்.
பின் அவரைப் பார்த்து, ""யோவ் இங்க வாய்யா... அந்த பேரிகார்ட்டை இழுத்து இப்புடிப் போடுய்யா''’என்று உரத்த குரலில் உத்தரவிட்டார். இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், ஓடோடிச் சென்று, அவருக்கு விறைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு, பேரிகார்டை சொன்ன இடத்தில் தம் கட்டிக்கொண்டு இழுத்துவந்து வைத்தார். அந்தக் காட்சியை அங்கு நின்றுகொண்டிருந்த சாதாரண காக்கிகள் பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்கொண்ட அந்த இன்ஸ்பெக்டர், மெதுவாகத் தளர்நடை போட்டு சாலையோரம் சென்றார். கண்களில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளை யாருமறியாதபடி துடைத்துக்கொண்டார். இந்தக் காட்சி நம்மை ஏதோ செய்ய, முதல்வரின் கான்வாய் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற பின், அவரை நெருங்கினோம்.
""சார் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தேன்.. உங்கள் கலக்கத்தை உணரமுடிந்தது''’என்று ஆறுத லாக அந்த இன்ஸ்பெக்டரிடம் பேசத் தொடங்கினோம்.
விரக்தியாகப் புன்னகைத்த அவர் பேசத்தொடங்கினார்...
""நானும் அந்த டி.எஸ்.பி.யும் 94-95 பேட்ச்சைச் சேர்ந்தவர்கள். அப்ப 1100 பேர் டைரக்ட் எஸ்.ஐ.யா தேர்வு செய்யப்பட்டோம். 96, 97-லும் 600 பேர் எஸ்.ஐ. ஆனாங்க. இப்படி பார்ட் பார்ட்டா புரமோஷன் கொடுத்ததால், எங்க சர்வீஸில் மூணு வருசம் அடிபட்டுப் போச்சு. அடுத்து, வழக்கப்படி 10 வருஷம் கழிச்சி, செலக்சன் கிரேடு போட்டதில் முறைப்படி 2006 புரமோஷன்ல நாங்க எல்லோரும் இன்ஸ் பெக்டரானோம். இதுவரைக்கும் எல்லாம் முறையாக நடந்தது.
அதன்பிறகு, 10 வருச சர்வீசுக்குப் பிறகு 2016-ல் எங்களுக்கான டி.எஸ்.பி. புரமோஷன் கிடைக்கணும். ஆனால் கொஞ்ச பேருக்கும் மட்டும்தான் அப்ப புரமோஷன் கொடுக்கப்பட்டது. பிறகு வேகன்சியைப் பொறுத்து டி.எஸ்.பி. ப்ரமோஷன்ல போஸ் டிங் போட ஆரம்பிச்சாங்க. அதனால் புரமோஷனுக்குக்காகக் காத்திருந்த பட்டியல் பெருசா ஆய்டுச்சு. இதன்பிறகு அதிலும் மாற்றம் வந்துடுச்சு. 100 போஸ்ட்டிங் அல்லது 80 போஸ்ட்டிங் வேகன்சி ஆகுது என்றால், அதை முழுவதுமாக நிரப்பாமல், அதில் பாதி அளவுக்கு மட்டும்... அதாவது 50, 60 பேருக்கு மட்டும் புரமோஷன் போட்டதால், கடைசியா நான் உட்பட என் னோட பேட்ஜ்-ஐச் சேர்ந்த ஏறத்தாழ 300 பேர், கடந்த 3 வருசமா டி.எஸ்.பி. புரமோஷ னுக்காகக் காத்திருக்கோம்.
இந்த நிலையில்தான் என் பேட்ஜ்-ஐச் சேர்ந்த அந்த டி.எஸ்.பி. தனக்கு புரமோஷன் கிடைச்ச தெனாவெட்டில், தன் அதிகாரத்தை என்னிடம் எல்லோர் முன்னிலையிலும் காட்டறதா நினைச்சி, அவமானப்படுத்திட்டுப் போறார்'' என்றார் கலக்கமாய். பின்னர் அவரே... “""எங்களின் பதவி உயர்வு மட்டும் பாதிக்கலை. கூடவே, புரமோஷன் காலத்தில கிடைக்க வேண்டிய இன்க்ரிமெண்ட், டி.ஏ. எல்லாம் கட்டாவுது. எங்க வயசும் ரிட்டயர்டு ஸ்டேஜை நெருங்க ஆரம்பிச்சிருச்சி. அதுக்கு முன்னாடி எங்களுக்கு உரிய புரமோசன் கிடைச்சாதான், ரிட்டயர்டு ஆகும்போது சமூகத்தில் அதிகாரி என்ற ஒரு அந்தஸ்தும், படிப்படியான இன்க்ரிமெண்ட் டி.ஏ. மற்றும் பணிக்கொடைகளும் கிடைக்கும். இல்லைன்னா, இன்ஸ்பெக்டர் பதவியிலேயே எங்க பணிக்காலம் முடிஞ்சிடும்.
எங்களை மாதிரி, காவல்துறையில் இருக்கும் கீழ்மட்ட அதிகாரிகளுக்குத் தான் இந்த நெலமை. ஆனா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தாமத மில்லாமல் எல்லா புரமோஷனும் ரெகுலராக வந்துடுது. நாங்க வெளியில் பாக்கறதுக்குதான், காவல்துறை அதிகாரிகள்னு வெறப்பு சிறப்பா இருக்கோம். ஆனால் எங்க உள்ளத்துல எப்பவும் புழுக்கம்தான்''’என்றார். அவர் விழிகளில் இருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டன.
இதுபோல் காவல்துறை யில் இருக்கும் ஒவ்வொரு பிரிவினரும், பல்வேறு ஆதங்கங்களுடனும் அவஸ்தைகளுடனும் தான் அன்றாடம் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நேரம், காலம், உணவு, உறக்கமின்றி 24 மணிநேர காவல் பணியிலிருக்கும் இப்ப டிப் பட்ட காவல்துறையினரின் நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளையும் கூட, அவர்களை முறைகேடாய்ப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த அரசு கண்டுகொள்வதே இல்லை.
பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு எப்போது விடிவு பிறக்கும்?