"மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்'’எனக் கேள்வி கேட்டு டெல்லி வட்டாரங்களில் போஸ்டர் ஒட்டியதற்காக இருபத்துநான்கு பேரை கைது செய்திருக்கிறது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ். கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கும் இந்த போஸ்டர்களுக்கும் சம்பந்தமில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பொது சபைக்குச் சென்ற பிரதமர் மோடி, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித் திறன் பற்றி பெருமையாகப் பேசியதுடன், "இந்தியாவால் உலக நாடுகளுக்கே தடுப்பூசி உற்பத்தி செய்துதர முடியும்' எனவும் சொன்னார். "மைத்ரி தடுப்பூசித் திட்டம்' என்ற பெயரில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி தயாரித்து அளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய அரசு தன் சொந்த மக்களைவிடவும், வெளிநாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசி தயாரித்து அளித்துள்ளதாக ஆளும்கட்சியினர் மார்ச் மாதம் பெருமையாகப் பேசித்தீர்த்தனர். கிட்டத்தட்ட 6.5 கோடி தடுப்பூசி மருந்துகள் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது.
பிறகுதான் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது. அதுவரை தடுப்பூசி போட யோசித்தவர்களெல்லாம் தடுப்பூசி போட அலைபாய ஆரம்பித்தனர். ஆனால் இந்தியாவிடமோ போதிய தடுப்பூசிகள் கையிலில்லை. மாநிலங்கள் கேட்ட அளவுக்கு மத்திய அரசால் தடுப்பூசி தர முடியவில்லை. வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றுவதுபோல், மாநிலங்களே கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளச் சொல்லி கைவிரித்தது மத்திய அரசு.
அதாவது மத்திய அரசுக்குக் கொடுத்ததை விட இருமடங்கு விலையில் மாநில அரசுகள் தடுப்பூசியை விலை கொடுத்து வாங்கவேண்டும். அந்த விலை கொடுத்தாலும் பாரத் பயோடெக் நிறுவனத்தாலும், அஸ்ட்ராஜெனகா நிறுவனத் தாலும் இந்திய மாநிலங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேகமாக தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்து அளிக்க முடியவில்லை.
ஒரே மாதத்தில் இந்தியாவில் நிலை கைமீறிப் போயிருந்தது. இதனால் மத்திய அரசு, வெளி நாட்டிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்து கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதியளித்தது. மார்ச்சில் தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த இந்தியா, ஏப்ரல் கடைசியில் உலக நாடுகளிடம் இருந்து ஸ்புட்னிக், பைசர் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்யும் நிலைக்குக் கீழிறங்கியது.
"இதற்கு பிரதமரின் தவறான அணுகுமுறையைத் தவிர வேறென்ன காரணம்' என்கிறார்கள் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்கள். அந்த போஸ்டரில் என்ன தவறாகச் சொல்லிவிட்டார்கள்? அவர்களை ஏன் கைது செய்யவேண்டும்? என்கிறார்கள். ராகுல்காந்தியோ, அதே போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்டு, "என்னையும் கைது செய்யுங்கள்' என சவால் விட்டிருக்கிறார்.
கொரோனா அலை குறித்து ஆளும் அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்கவில்லை. அதனால்தான் இந்தியா இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது என எதிர்க்கட்சிகளின் தொடர்ந்த பிரச்சாரத்தை அடுத்து, பிரதமருக்கு ஆதரவாக, “"எதிர்க்கட்சிகள் இறந்தவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன, குணமாகி வந்தவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதில்லை'’என பா.ஜ.க. தரப்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
அதன் ஒரு அம்சமாக, "கொரோனா இரண்டாவது அலை குறித்து பிரதமர் 6 முறை எச்சரித்தார்' என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாள ரான சீதாராம் யெச்சூரி, "கொரோனா இரண்டாவது அலை குறித்து பிரதமருக்கு உண்மையிலே அக்கறை இருக்குமானால், கும்பமேளாவுக்குக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது? ஏப்ரல்வரை அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை? ஏன் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கையிருப்பு அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தேர்தல் பொதுக்கூட்டங்களில் பிரதமர் ஏன் பங்கேற்றார்?'' என்பது போன்ற முனைகூர் மையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது பா.ஜ.க.வினரைத் தொந்தரவு செய்யத் தொடங்கியிருக் கிறது.
இது போதாதென்று பல்வேறு மாநிலங்கள் "பி.எம். கேர்ஸ் நிதிமூலம் வாங்கி அனுப்பப்பட்ட வென்டி லேட்டர்கள் பழுதானவை, பயன்படாதவை' என புகார்க் குரல் எழுப்பத் தொடங் கியதும் மோடியின் பெயருக்குக் களங்கம் சேர்க்கத் தொடங்கியிருக்கிறது.
மகாராஷ்டிர காங்கிரசின் பொதுச் செயலாளரான சச்சின் சாவந்த், “அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ நிபுணர் குழு, "பி.எம். கேர் நிதியிலிருந்து வாங்கியனுப்பிய அனைத்து வென்டிலேட்டர்களும் பயனற்றவை' எனச் சொல்லியுள்ளது. "அவற்றை பழுது பார்த்துக்கூட பயன்படுத்தமுடியாது. இது பெரிய ஊழல்'’என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “"பி.எம். கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட 1,900 வென்டிலேட்டர்களின் தரம் சரியில்லை. அவற்றைப் பயன்படுத்துவது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தானது''’என்றுள்ளார்.
மகாராஷ்டிரா மட்டுமல்லாமல், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களும் இதேபோன்ற புகாரை முன்வைத்துள்ளன. பி.எம். கேர்ஸ் மூலம் பெறப்பட்ட 3,000 கோடி நன்கொடையில், சுமார் 2,000 கோடிக்கு இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் வாங்கப் பட்டதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது அவை பயனாகாத, வெற்று வென்டிலேட்டர்கள் என்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.