2012 உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களைக் கொண்ட சட்ட மன்றத்துக்கு காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுமே பெரும்பான்மை பெறாமல் போக, 32 சீட்டுகளை வென்ற காங்கிரஸ், கூட்டணி மற்றும் சுயேட்சைகளின் தயவுடன் முதல்வர் பதவியைப் பிடித்தது. ஆனால் 2014-ல் மத்தியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் உத்தரகாண்டிலும் சிக்கலைக் கொண்டுவந்தது. ஆட்சியைக் கலைக்கும் 356 சட்டப்பிரிவை பலமுறை பயன்படுத்திய காங்கிரஸுக்கு, அந்தச் சட்டம் பிரயோகிக்கப்படுவதின் வலியை பா.ஜ.க. காட்டியது. ஹரீஷ் ராவத்தின் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்தியது.

2017 தேர்தலில் உத்தரகாண்ட் மக்கள் 57 இடங்களை பா.ஜ.க.வுக்கு அளித்து ஒரு தெளிவான சேதியைச் சொல்லிவிட்டனர். இந்தச் சூழலில் 2022 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க.வும் காங்கிரஸும் ஆயத்தமாகி வருகின்றன. கூடவே ஆம் ஆத்மி கட்சி, நானும் ஆட்டத்தில் உண்டென தலையை நீட்டுகிறது.

ff

Advertisment

ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு மத்தியில் ஆட்சியிலிருப்பதன் சாதகம், நட் சத்திர வி.ஐ.பி. களின் பிரச்சாரம், வலதுசாரி அமைப்பு களின் ஆதரவு, வளமான தேர்தல் நிதி என பலமான துணை யிருக்கிறது. ஆனால் ஐந்தாண்டு ஆட்சியில் பெரிய நற்பெயர் எதுவும் கிடைக்கவில்லை. ஐந்தாண்டில் திரிவேந்திர சிங் ராவத், தீரத்சிங் ராவத், புஷ்கர்சிங் தமி என மூன்று முதல்வர்கள் மாறியிருக்கிறார்கள்.

தவிரவும் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் கொரோனா வேகமெடுத்து சாமியார்கள், பொதுமக்கள் என பலரும் பலியானார்கள். கொரோனா பரிசோதனை முதல் பல்வேறு விஷயங்களில் ஊழல் நடந்ததாக கெட்ட பெயர் வாங்கியிருக்கிறது.

வேளாண் சட்டத் திருத்தமும் அதைத் திரும்பப் பெற்றதும் உத்தரகாண்ட் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வலு வான தலைவலியாக இருக்கிறது. உத்தரகாண்டின் குமாவுன் பகுதியில் வலுவாக இருக்கும் விவசாயிகள், தாங்கள் வஞ்சிக்கப் பட்ட கோபத்தை சூடு குறை யாமல் தக்கவைத்து வருகின்றனர். தற்போதைய முதல்வரான புஷ்கர்சிங் தமியின் கத்திமா சட்டமன்றத் தொகுதியே இந்தப் பிரதேசத்துக்குள்தான் வருகிறது. தவிரவும், 5 வருடம் ஆட்சியி லிருந்தும் லோக் ஆயுக்தா அமைக்க முடியாததை பா.ஜ.க.வின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

சர்தாம் தேவஸ்தானக் குழு அமைத்த விவகாரத்தில், மத குருக்கள் திரிவேந்திரசிங் ராவத் மேல் கோபத்தில் இருக்கிறார்கள். அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும், பிராமண மற்றும் மேல்தட்டு சாதியினருக்கு திரிவேந்திர சிங் மீதான கோபம் குறையவில்லை. மேலும் பா.ஜ.க. வின் ஆளுகையிலிருக்கும் உத்தர காண்ட் தேர்தலில், இம்முறை ஆட்சி மாற்றம் நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

காங்கிரசின் பலம் அதன் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத்தான். கடந்தமுறை வெறும் 11 சீட்டுகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. முதல்வர் வேட்பாள ரான ஹரீஷ், தான் நின்ற இரண்டு தொகுதிகளிலுமே தோற்றார். ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. பக்கம் காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் பலரும் தாவியோடினர்.

இத்தனைக்குப் பிறகும் காங்கிரஸ் தாக்குப் பிடித்து நிற்கிறது. வழக்கமான காங்கிர ஸின் கோஷ்டிப் பூசலைத் தாண்டி மேலிட ஆதரவுடன் ஹரிஷ் முதல்வர் வேட்பாளராக தாக்குப்பிடித்துவிட்டார். வழக்கமான பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்களான பிராமண, தாக்கூர் வாக்குகள் இம்முறை காங்கிரசுக்கும் கணிசமாகக் கிடைப்பதோடு தலித், சிறுபான்மை வாக்குகளை பெருமளவில் காங்கிரஸ் ஈர்க்கும். இது பா.ஜ.க.வைவிட வாக்கு சதவிகிதம் அதிகமாகப் பெறவைக் கும் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த வித்தியாசம் ஒன்றிலிருந்து இரண்டு சதவிகி தம் அளவில் இருப்பதுதான் கவலைக்குரியது. இந்த இரண்டு சதவிகித வாக்கு வித்தியாசத்தை ஈடுகட்டும் வியூகங்களை பா.ஜ.க. இப்போதே திட்டமிட ஆரம் பித்துவிட்டது. கவலைக்குரிய தொகுதிகளுக்கு எல்லாம் வி.ஐ.பி. பிரச்சாரம், பண விநியோகம், பூத் கமிட்டி, இருமனதாக இருக்கும் வாக்காளர்களை மனம் மாற்றும் வியூகம் என அனைத்தும் பரிசீலிக்கப்படுகின்றன. மாறாக, வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க என்ன வியூகங்கள் காங்கிரஸ் தரப்பில் செய்யப்படுகின்றன என்பதுதான் தெரியவில்லை.

பஞ்சாப், கோவாவைப் போலன்றி உத்தரகாண்டுக்கு ஆம் ஆத்மி புதிது. அதனாலேயே கடந்த இரண்டரை ஆண்டு களாக உத்தரகாண்டில் சில அடிப்படை வேலைகளில் கட்சி மும்முரம் காட்டிவருகிறது. ஓய்வுபெற்ற கர்னல் அஜய் கோத்தியாலை ஆம் ஆத்மி தங்களது முதல்வர் வேட் பாளராக அறிவித்திருக்கிறது.

உத்தரகாண்டில் பா.ஜ.க., காங்கிரஸைப் போல் ஆம் ஆத்மி முதன்மையான கட்சியல்ல. ஆனால், கடந்த இரண்டரை வருட பணியால் ஓரளவு மக்கள் அறிமுகம் பெற்றிருக்கிறது. கோத்தியால், 2013 உத்தரகாண்ட் வெள்ளத்தின்போது மக்க ளிடையே நற்பெயரைச் சம்பா தித்தவர். கூடவே அரவிந்த் கெஜ்ரிவால் பெயரின் துணை யுடன், சில சதவிகித வாக்குகளை ஈர்த்துவிட முடியும். வெற்றி சதவிகிதம் ஒன்றிரண்டு சதவிகிதமாகத்தான் இருக்கும் என யூகிக்கப்படும் நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க. இரு தரப்பில் யாருடைய வாக்குகளைத் ஆம் ஆத்மி அறுவடை செய்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆபத்து காத்திருக்கிறது.