கொரோனாவால் உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை, மீண்டு எழமுடியாமல் தத்தளிக் கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு பெண்கள் வராதீர்கள் என்கிற அமெரிக்காவின் எச்சரிக்கை, இந்திய சுற்றுலாதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன உலகில் சுற்றுலாத்துறை பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் தொழில். உலகத்தின் பல நாடு களிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2019-ஆம் ஆண்டு மட்டும் 97 லட்சம் பேர் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். இதன்மூலம் சுமார் 2 லட்சம் கோடி அந்நியச் செலாவணி நமக்குக் கிடைத்தது. உலகம் முழுவதும் டிராவல்ஸ், ஹோட்டல், விடுதிகள், கைடுகள், பொருட் கள் விற்பனை, கேளிக்கை என நேரடியாகவும், மறைமுகமாக வும் கோடிக்கணக்கானோர் இத்துறையில் வேலைவாய்ப் பைப் பெற்றுவருகின்றனர்.
கொரோனா காலி செய்த தொழில்களுள் சுற்றுலாத் துறையும் அடக்கம். கொரோனா வின் வேகம் குறைந்து, தடுப்பூசி யின் பாதுகாப்பு வளையத்தை நம்பி உலகம் மீண்டுவரும் நிலையில், ஒவ்வொரு நாட்டின் சுற்றுலாத் துறையும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முயற்சிக் கின்றது.
இந்நிலையில் இந்தியா வுக்கான அமெரிக்கா தூதரகம், தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான ஆலோ சனைக் கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது, சுற்றுலா தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரங்கள், குற்றங்கள் அதிகரித்துள்ளன, அதனால் இந்தியா வரும் அமெரிக்கர்கள் குறிப்பாக பெண்கள் சுற்றுலாத் தலங்கள் உட்பட பொது இடங்களுக்கு தனியே செல்லவேண்டாம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்புக்கு காரணம் பா.ஜ.க.வின் மோடி அரசுதான் என்கிறார்கள் பெயர் கூறவிரும்பாத சுற்றுலாத்துறை அதிகாரிகள். “இந்தியாவுக்கு வரும் 100 வெளிநாட்டுப் பயணிகளில் 25 பேர் அமெரிக்கர்கள். அமெரிக்கா தனது நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்துள்ள இந்த எச்சரிக்கை மற்ற நாடுகளின் பயணிகளையும் யோசிக்கவைக்கும். இதனால் இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த சில ஆண்டுகளாக வட இந்தியாவில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. உத்திரபிரதேசத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல்கூற பிரியங்காகாந்தி செல்கிறார். அவரை உத்திரபிரதேச காவல்துறை பிடித்துத் தள்ளி, மூர்க்கமாக நடந்துகொண்டதோடு தடுத்தும் வைத்தது.
ஏதோ ஒரு சம்பவமென்றால் பரவாயில்லை. நாடு முழுவதும் பல பாலியல் பலாத்கார கொலைகள், பெண் கடத்தல்கள், சிறுமிகள் பாலியல் பலாத்கார, குற்றச்சம்பவங்களில் அதை எதிர்த்து கேள்வியெழுப்பு பவர்கள், போராடுபவர் கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் ஏன் இரவில் வீட்டை விட்டு வெளியே வர்றாங்க, வந்தால் இப்படித்தான் நடக்கும் என மத்திய அமைச்சராக இருப்பவர் பேசுவதெல்லாம் உலகம் முழுவதும் செய்தியாகப் பரவுகின்றது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை மேற்குலக மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். இது சுற்றுலா வருவதிலும் எதிரொலிக்கும்.
வெளிநாட்டினர் டூரிஸ்ட் நிறுவனத்திடம் பாலியல் சம்பவங்கள் குறித்து விவாதித்து, தங்குமிடம், பாதுகாப்பு, வாகனம், உடன் பயணிக்கும் கைடு குறித்து தெளிவாக அறிந்துகொண்டு, பாதுகாப்பாக பயணம் செய்யமுடியும் என நம்பிக்கை வந்தபின்பே இந்தியாவிற்கு வருகிறார்கள். ஆனால் தூதரகமே இத்தகைய எச்சரிக்கைகளை விடுக்கும்போது, இந்தியாவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வருகை குறைகிறது. அவர்கள் தங்கும் நாட்கள் குறைகிறது. உ.பி, ம.பி, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, பீகார், உத்தரகாண்ட், இமாச்சல் மாநிலங்களில்தான் அதிகளவு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்குதான் பாலியல் சம்பவங்கள், குற்றச் சம்பவங்கள் அதிகம். குற்ற மனோபாவம் உடையவர்கள் உள்ளூர்ப் பெண்களிடம் அத்துமீறும்போது நடவடிக்கை இல்லாதபோது, அது வெளிநாட்டுப் பெண்களிடம் அத்துமீறுவதற்கான தைரியத்தைக் கொடுக்கும்'' ’என்கிறார்கள்.
இந்திய சுற்றுலா ஆப்ரேட் டர்கள் சங்கத்தின் தமிழக, அந்தமான், புதுச்சேரி பிரிவு தலைவரும், சோழன் டூர்ஸ் நிறுவன உரிமையாளர் திருச்சி பாண்டியனிடம் அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து நாம் கேட்டபோது, “"கொரோனா கட்டுப் பாடுகள் குறித்த பாதுகாப்பு, விசா குறித்துதான் அவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு தந்திருந்தார்கள். பாலியல் குற்றங்களுக்காக இந்தியா செல்லாதீர்கள் என அறிவிப்பு தந்திருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்.
இதில் உடனடியாக இந்திய அரசு தலையிட்டு இத்தகைய அறிவிப்பை திரும்பப்பெற வைக்கவேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பான நாடாகவே இருக்கிறது. இந்தியாவில் கலை, பண்பாடு சார்ந்த பகுதிகள், புராதனச் சின்னங்கள், கட்டடங்கள் பல உள்ளன. அதைப் பார்க்கவும், வரலாற்றை அறிந்து கொள்ளவும், மனஅமைதி தேடியும் திரும்பத் திரும்ப வருகிறார்கள். திருவண்ணாமலை, பாண்டிச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் மாதக்கணக்கில் தங்கியுள்ளார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியா வரும்முன் நம் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, அரசியல் குறித்து எல்லாம் படித்துவிட்டே வருகிறார்கள். அதனால் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையை அவர் கள் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்''’என்றார்.