புலம்பெயர் தொழிலா ளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்துதருவதாக பிரியங்கா காந்தி சொல்ல, ஒப்புக்கு அதற்கு அனுமதியளித்துவிட்டு, ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல் களை தந்துகொண்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசு.

விடைதெரியாத கொரோனா ஊரடங்கின் நடுவே, தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக லட்சக்கணக் கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் போதுகூட இத்தகைய காட்சிகளை இந்தியா கண்டதில்லை.

தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு ரயிலில் அனுப்பிவைக்கும் விவகாரத்தில், மாநில அரசே செலவை ஏற்கவேண்டுமென மத்திய அரசு சொல்ல, ஈவிரக்கமற்ற இந்த முடிவுக்கு பதிலடியாக, புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணச் செலவை காங்கிரஸ் ஏற்குமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த தடாலடி அறிவிப்பால் தங்களுக்கு செக் வைக்கப்பட்டதாக உணர்ந்த மத்திய அரசு, இந்த ரயில் பயணத்தில் 85 சதவிகித செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. ஆனால் புலம்பெயர் தொழி லாளர் ஊர்திரும்பும் ரயில் பயணத்துக்கு மத்திய அரசு தரும் மாணியம் 85 சதவிகிதம் இருக்காது. அதிகபட்சம் 20 சதவிகிதத்துக்குள்தான் இருக்குமென சர்ச்சை எழுந்தது.

இது ஒருபுறமிருக்க, இனி அரசுகளை நம்பி பிரயோஜனமில்லை என ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மக்கள் கால் நடையாகவே ஊர்திரும்பத் தொடங்கினர். இதற்கும் ஒரு இடைஞ்சல் விபத்து வடிவில் வந்தது.

Advertisment

oo

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அவ்ரியா என்ற ஊரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த இரு லாரிகள் மோதின. இதில் 26 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தனர். 30 பேர் காயம்பட்டனர். மேலும் இரு விபத்துகளில் உத்தரப்பிரதேசத்தில் கால்நடையாகச் சென்ற ஏழுக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகினர்.

இதனையடுத்து கால்நடையாகவும், இருசக்கர வாகனங்களிலும் ஊர்திரும்ப முயலும் தொழிலாளர்களை உ.பி. அரசு தடுத்துநிறுத்த ஆரம்பித்தது. இந்நிலை யில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, கட்சிச் செலவில் 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரப்பிரதேச அரசு அனு மதிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது அம்மாநில அரசை இக்கட்டில் கொண்டுபோய் நிறுத்தியது. வேறுவழியின்றி தர்மசங்கடமாக அதனை ஏற்றுக்கொள்வதாக கூறியது.

Advertisment

ஈஸியாக காங்கிரஸ் ஸ்கோர் பண்ணிக்கொண்டு போக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு விட்டுவிடுமா? ஆயிரம் பேருந்து கள் பற்றிய விவரத்தை காங்கிரஸ் தரப்பிலிருந்து தங்களுக்கு அனுப்ப வில்லையென உ.பி. அரசு சொல்ல, திங்கட்கிழமை இரவே (மே 18) விவரங் களை அனுப்பிவிட்டதாக காங்கிரஸ் சொன்னது.

பிரியங்காவின் தனிச்செயலர், “""திங்கட்கிழமை எல்லாப் பேருந்துகளைப் பற்றிய விவரங்கள், டிரைவர்கள் பட்டியல், பிட்னஸ் சான்றிதழ், டிரைவிங் லைசன்ஸ் விவரம் கேட்டிருந்தார்கள். அன்றே அந்த விவரங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. எங்களுக்கு வந்த பதில் மின்னஞ்சலில் இந்த விவரங்களை லக்னோ ஆட்சியரிடம் அளித்து, பேருந்துகளையும் அங்கே அனுப்பச் சொல்லியிருந்தார்கள்'' என்கிறார்.

பேருந்துகள் ஆக்ராவில் காத்துக்கொண்டிருக்க, ஆக்ராவிலோ மேலிடத்திலிருந்து இன்னும் உத்தரவு வர வில்லை என்றார்கள். இந்நிலையில்தான் உ.பி. அரசு பேருந்து களை லக்னோவுக்கு அனுப்பச்சொன்னது. பா.ஜ.க இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்ட, கூடுதல் தலைமைச் செயலாளர் அவினேஷ் அவஸ்தி, காஸியா பாத்துக்கும் நொய்டாவுக்கும் 500 பேருந்துகளை அனுமதிப்ப தாக கூறினார்.

oo

எனினும் பேருந்துகளின் ஆர்.சி., இன்சூரன்ஸ் அனைத் தையும் சோதனை செய்தபிறகே அனுமதி என இழுத்துப் பிடித்தது. காங்கிரஸ் அனுப்பிய பேருந்துகளின் எண்கள் பெரும்பாலானவை சரக்கு வாகனங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்களின் எண்களாக இருப்பதாக உ.பி. அரசு குற்றம் சாட்டியது. அத்துடன் நிற்காமல் பிரியங்கா காந்தியின் தனிச்செயலாளர்கள் லாலு, அஸ்வதி இருவரும் பயணிகளின் உயிருடன் விளையாடுவதாக எப்.ஐ.ஆர். பதிந்திருக்கிறது.

காங்கிரஸும் விட்டுக்கொடுக்கவில்லை. “நாங்கள் ஏற்பாடு செய்த 1049 பேருந்துகளில் 879 பேருந்துகளின் சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியானவை. மிச்சமிருக்கும் 200 பேருந்துகளையும் சான்றிதழ்களையும் நாளை அனுப்புகிறோம். தற்போது சான்றிதழ் சரியாக இருக்கும் பேருந்துகளில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல அனுமதியுங்கள் என ட்விட் டரில் விளக்கமளித்தார் பிரியங்கா.

ஒன்றுமில்லாத காரணங்களை திரும்பத் திரும்பக் கூறி பா.ஜ. தட்டிக்கழிக்க முயல்வ தையும், காங்கிரஸின்மேல் புலம்பெயர் தொழிலாளர்கள் கோபம் திரும்புவதற்காக பா.ஜ.க. போடும் நாடகத்தையும் பட்டவர்த்தனமாக்க, பேருந்துகளில் பா.ஜ.க. கட்சிக்கொடியை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள். ஏற்கெனவே இந்த அரசியல் நாடகத்தால் மூன்று நாட்கள் வீணாகிவிட்டது. இப்போது அனுப்பியிருக்கும் பேருந்துகளில் தொழிலாளர்களை ஊருக்கு ஏற்றியனுப்புங்கள்’’ எனச் சூடாகப் பதிலளித்திருக்கிறார் பிரியங்கா.

ஆவ்ரேயா விபத்தில் இறந்தவர்களின் உடலையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் ஒரே லாரியில் அனுப்பி வைத்து ஜார்கண்ட் முதல்வரின் கண்டனத்துக்கு ஆளான உ.பி. அரசு, இப்போது காங்கிரசுடன் மல்லுக்கட்டுகிறது. மத்தியிலும் உ.பி.யிலும் நடப்பது பா.ஜ.க. அரசு. ரயில்வேதுறை மத்திய அரசிடம் உள்ளது. ஆனால், காங்கிரசை பகடைக்காயாக்கி அரசியல் செய்வதில்தான் பா.ஜ.க. முனைப்பாக உள்ளது.

-க.சுப்பிரமணியன்