"தீண்டாமை ஒரு பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல்' என என்னதான் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலே அச்சிட்டுச் சொல்லித்தந்தாலும், யதார்த்தத்தில் இந்திய சமூகத்தில் பெரும்பாலானோரின் ரத்தத்தில் வெள்ளையணு, சிவப்பணு இருக்கிறதோ... இல்லையோ... தீண்டாமை இருக்கிறது என்பதைத்தான் நடூர் தீண்டாமைச்சுவர் மரணங்கள் காட்டுகின்றன.
டிசம்பர் 2 ஆம் தேதி நடூர் ஏ.டி. காலனிவாசி களுக்கு மரணத்தின் சாவோலையைக் கொண்டுவந்தது விடியல். தீண்டாமைச் சுவர் வடிவில் 17 உயிர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் நசுக்கிக் கொன்றது சாதிய மனோபாவம். மழையையும் விதியையும் கையைக் காட்டிவிட்டு, மரணத்துக்குக் காரணமானவர்களைக் காப்பாற்ற ஆதிக்கசாதியினர் முயற்சிப்பதாக இவ்விஷயத்தில் அக்கறை காட்டும் போராளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கன்னாபின்னா போலீஸ்
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சம்பவ இடத்துக்கு வந்து உயி ரிழந்தவர்களைப் பார்வை யிட்டு, இந்தச் சுவரைக் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படு மென உத்தரவாதமளித்தார். அதன்பின்பே, உடல்கள் பிரேத பரிசோதனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. ஆனால் வெகுநேரமாகியும் யாரும் கைதுசெய்யப்படாதது கண்டு, அப்பகுதி மக்கள் போராடத் துவங்க, திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, சமத்துவ முன்னணி தலைவர் கார்கி, இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் துணைக்குவந்தன.
இடிந்துவிழுந்து மரணத்துக்கு வித்திட்ட சுவருக்குச் சொந்தக்காரரான சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளரைக் கைதுசெய்யவேண்டுமென சாலைமறியல் போராட்டத்தில் இறங்கினர். அதுவரை இறந்தவர்களின் உடலை வாங்கமுடியாதென போராடியவர்கள் திட்டவட்டமாகக் கூறியது, காவல் துறையின் ஆத்திரத்தை அதிகரித்தது. பொதுமக்களின் போராட்டத்தை திரும்பப்பெற லத்தியை இறுகப்பிடித்து களமிறங்கியது காவல்துறை.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. மணி, ""... நாய்கள்ட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கணுமா, முஸ்லிம்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்'' என பொறுப்பில்லாமல் சாதிப்பெயரைச் சொல்லி இழிவு செய்ததோடு, போராட வந்தவர்களை மத அடிப்படையில் பிரித்துப் பார்த்து கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி நாகை திரு வள்ளுவன் காவல்துறையால் முரட்டுத்தனமாக கையாளப் பட்டதுடன், 26 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறது காவல்துறை.
பொதுச்சொத்தை சேதப் படுத்தியதாக போராட்டக் காரர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததையறிந்த நீதிபதி, ஆதாரம் எங்கேயென கேள்வியெழுப்பியதுடன் பொதுச் சொத்தை சேதப்படுத்தியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளை நீக்கச்சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இருந்தாலும் அசராத காவல்துறை, கோவை சிறை யில் அடைக்கவேண்டியவர்களை சிறையில் இட மில்லை எனக் கூறி சேலம் சிறையில் அடைத்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது இத்தகைய வழக்குகளைப் பதிந்த காவல்துறை, 17 உயிர்கள் பலியானதற்குக் காரணமென கூறப்படும் சிவசுப்பிர மணியம் மீது அஜாக்கிரதையான செயலால் மரணத்துக்குக் காரணமாகும் 304 ஏ பிரிவில் முதலில் வழக்குப்பதிவு செய்தது. பின் 304 (2) பிரிவுக்கு மாற்றியது. மரணத்துக்குக் காரண மாகும் எனத் தெரிந்தே ஒரு செயலில் ஈடுபடுபவர் களை இந்தப் பிரிவில் சேர்ப்பர். ஆனால் சிவசுப்பிர மணியன்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தின்கீழ் இதுவரை வழக்குப் பதியப்படவில்லை.
சுவர் எழுந்த கதை
ஆரம்பத்தில் இப்பகுதியில் நிலங்களும் காடுகளும் சமதளத்தில்தான் இருந்தன. அப்போது அம்பேத்கர் காலனி மட்டுமே இருந்தது. அருகே தனியார் வீடுகள் பெருக ஆரம்பித்தபோதுதான் பிரச்சினை எழுந்தது. ""எங்கள் குடியிருப்பைவிட மேடான இடத்தில் அவர்கள் வீடுகளைக் கட்ட பலமடங்கு மண்ணைக் கொட்டி மேடாக்கினர். அதுவும் போதாதென்று 6 அடி உயரத்தில் முதலில் கருங்கல் சுவரொன்றை எழுப்பினர். எங்கள் குடியிருப்பை அவர்கள் பார்க்க விரும்பாத தோடு, அவர்களது நடமாட்டத்தையும் நாங்கள் பார்க்கக்கூடாதென அந்தச் சுவரை 20 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டினர்'' என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
""20 அடி உயரத்தில் சுவர் கட்ட வேண்டுமென்றால், 4 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கவேண்டும். ஆனால், இடிந்த சுவரின் அகலம் வெறும் 1 அல்லது 2 அடிதான் இருக்கும். முறையான கட்டுமான விதிகளும் பின்பற்றப்படவில்லை, நகராட்சி அனுமதியும் பெறப்படவில்லை. இதோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் வழிப்பாதையாக இருந்த இடத்தை அடைத்து சுவர் கட்டப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், வீட்டின் உரிமையாளர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.
முதலில் குடும்பத்துக்கு நான்கு லட்சம் நிவாரணம் மட்டுமே அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சிகளின் கண்டனம், தலித் அமைப்புகளின் போராட்டம், விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகளைக் கண்டு நிவாரணத் தொகையை பத்து லட்சமாக உயர்த்தி அறிவித்தார். எனினும் நிதி மட்டுமே நீதியாகிவிடாது என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
அலட்சியம் காட்டிய நகராட்சி
“நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு!
நடூர் ஏ.டி. காலனி கண்ணப்பன் லே-அவுட் ஒட்டியுள்ள சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமை யாளரின் மதில்சுவர் போதிய பாதுகாப்பின்றிக் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததன் காரணமாக அம்மதில் சுவரின் உயரத்தினை குறைக்க வேண்டுகிறோம். அதை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு நடூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் பழனிச்சாமி.
இப்படி ஒரு புகார், மனுவை நகராட்சி ஆணையாளருக்கும், நகலை வட்டாட்சியருக்கும் (13-10-2018-ல்) அனுப்பிவைத்தார் பழனிச்சாமி. ஆனால் அந்த புகார் மனுவை அதிகாரிகள் உதாசீனப்படுத்தி யதன் விளைவே தற்போதைய மரணங்கள் என சொல்லுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
பிண எரிப்பிலும் சர்ச்சை
சிவசுப்பிரமணியம் கைது செய்யப்படும்வரை போராடுவோம். நிவாரணத் தொகையை உயர்த்தித் தரவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டுமென போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்த நிலையில், சாந்திவனம் மின்மயானத் துக்கு இறந்தவர்களின் உடல்களைக் கொண்டுசென்று எரிக்கப்போவதாக செய்தி பரவியது. பின் ருக்மணி என்பவரின் உடலை மட்டும் அவரது உறவினர்கள் பெற்றுச் செல்ல... மற்ற 16 பேரின் உடலையும் போலீஸாரே மேட்டுப்பாளையம் கோவிந்தன்பிள்ளை மயானத்துக்கு கொண்டுசென்று விறகால் எரியூட்டினர். கையெழுத்துகள் பெறப்பட்டாலும், உரிய நபர்களின் முழுச் சம்மதமின்றி இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
துயரத்தின் சாட்சிகள்
சின்னத்துரை மட்டும் தன் குடும்பத்தில் ஐந்து நபர்களை இந்த துர்சம்பவத்தில் இழந்திருக்கிறார். மனைவி, அத்தை, குழந்தைகள், வீட்டில் குடியிருந்தவர் எல்லோரும் இறந்துவிட்டனர். அவரது பையனும் அவ ரும் தற்செயலாக ஊருக்குப் போயிருந்ததால் பிழைத் தனர். அவரது சகோதரரான செல்வராஜ், தன் மகன் ரங்கநாதனையும் மகள் நிவேதாவையும் இழந்துநிற் கிறார். சம்பவ தினத்தன்று டீக்கடையில் பின்னிரவுவரை வேலையிருக்கவே அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டார். சம்பவம் நிகழ்ந்த பிறகு உறவினர்கள்தான் விஷயத்தைச் சொல்லி அவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
""மூணு முறை அந்த வீட்டுக்காரங்ககிட்ட கும்பலா போய்ச் சொல்லிப் பார்த்துட் டோம்ங்க. கேட்டாதானே… மனுவும் கொடுத் தோம்… பார்க்கலாம்னாங்க. எதுவும் பண்ண லை'' என்கிறார் விரக்தியாய்.
அத்தனை துயரத்துக்கு இடையிலும் ஒரு நற்காரியம் செய்திருக்கிறார் செல்வராஜ். மகன், மகளின் கண்களைத் தானம் செய்தால் நாலு பேருக்கு பார்வை கிடைக்கும் என விஷயம் தெரிந்தவர்கள் எடுத்துச்சொல்ல, அதை அங்கீகரித்து கண் தானம் செய்திருக்கிறார். நெருக்கடியான காலனியில் இருப்பவரின் மன விசாலம், தாராளமாக மாளிகை கட்டிக் கொண்டவர்களுக்கு இல்லாததுதான் வேதனை.
சுவரிடிந்து விழுந்ததில் பலியானவர்களில் ஒருவர் குருசாமி. இறந்த குருசாமியின் மனைவி சுதா, தன் குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக் குப் போயிருந்ததால் உயிர்பிழைத்து நிற்கிறார். ஆனால், “இருப்பதற்கு ஒரே அடைக்கல மாயிருந்த வீடும் நொறுங்கிப் போனதால் மகன் மணிகண்டன், மகள் வைஷ்ணவியுடன் மாற்றுத் துணிக்குக்கூட வழியின்றித் தவித்துவருகிறார். இழப்பின் துயரே மாறாத நிலையில் இனி எங்கே தங்குவதென்ற புதிய பிரச்சனையும் எழுந்துள்ளது சுதாவுக்கு.
இன்னும் மிச்சமிருக்கும் சுவர்கள்
நடூர் துர்மரணம் நடந்த இடத்தில் மிஞ்சிய சுவர் இடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அருகிலேயே அண்ணாநகர் பள்ளம் என்ற இடத்தில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்குடியிருப்புக்கு அருகில் தனியார் காம்ப வுண்ட் சுவர் ஒன்று 15 அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது. நடூர் சம்பவத்தையடுத்து திகிலடைந்த இப்பகுதி மக்கள் இந்த காம்ப வுண்ட் சுவரை இடித்து அகற்றவேண்டுமென அதன் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய் திருக்கின்றனர். ஏ.டி.காலனி விவகாரத்தில் உறங் கிப்போன மாவட்ட நிர்வாகம், அண்ணா நகர் காலனி விவகாரத்திலாவது விழித்தெழட்டும்.
-க.சுப்பிரமணியன், அருள்குமார்