சிதம்பரம் நடராஜர் கோவிலில், கடந்த ஓராண்டுக்கு முன் கொரோனா தொற்று காரணமாகக் கோவிலின் கருவறைமுன் இருக்கும் சித்சபையில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகம் தடைவிதித்தது.
இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்து சகஜநிலைக்கு மாறியபிறகு நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஒன்றுகூடிச் சித்சபையில் பொதுமக்கள், பக்தர்களை அனுமதிக்கலாமா? என்று கடந்த 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கணேஷ் தீட்சிதர் எப்போதும்போல் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்குக் கூட்டத்திலுள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 12-ஆம் தேதி கணேஷ் தீட்சிதர் அவரது மனைவியுடன் சித்சபைக்குச் சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீட்சிதர்கள் ராஜாசெல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் கணேஷ் தீட்சிதர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான கணேஷ் தீட்சிதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு மட்டும் செய்யப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.
பிப்ரவரி 13-ஆம் தேதி சிதம்பரத்தி லுள்ள ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா சாமி தரிசனம் செய்ய சித்சபைக்குச் சென்றுள்ளார். அப்போது தீட்சிதர்கள் அவரை சாதிப்பெயரைக் கூறி இழிவாகப் பேசி கையைப்பிடித்து இழுத்துத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெயசீலா சிதம்பரம் காவல்துறையில் அளித்த புகாரில் இரு நாட்கள் கழித்து 20 தீட்சிதர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய கணேஷ் தீட்சிதர், "இனிமேல் தீட்சிதர்களைத் தவிர யாரும் மேலே ஏறக்கூடாது என்ற தீண்டாமைக் கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். தீட்சிதர்கள் சாமி தரிசனம் செய்வதுபோல் பொதுமக்களும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்யவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதற்கு அரசு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும்''’என்றார்.
தீட்சிதர்களால் தாக்கப்பட்ட ஜெயசீலா கூறுகையில், "நடராஜர் கோவிலில் நீதிமன்ற உத்தரவுப்படி கனகசபையில் ஏறித் தேவாரம், திருவாசகம் பாடி, வழிபட அனுமதி உண்டு. ஆனால் கொரோனாவைக் காரணம் காட்டி தீட்சிதர்களைத் தவிர வேறு யாரையும் மேலே ஏற்றாமல் தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தீட்சிதர் களின் ஆணவத்தை அடக்க இந்துசமய அறநிலையத்துறையின்கீழ் கோவில் செயல்பட வேண்டும்''” என்கிறார்.
கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கமளித்த தீட்சிதர்களான ஐயப்பன், வெங்கடேசன் ஆகியோர், “கணேஷும் அவரது மகன் நடராஜனும் கோவிலுக்கும், தீட்சிதர் சமூகத்திற்கும் எதிராகச் செயல்படுகிறார்கள். அதனால் கோவிலை விட்டு நீக்கிவைத்துள்ளோம். பொதுமக்களை அனுமதிப்ப தில்லையென தீர்மானம் நிறைவேற்றியது உண்மைதான். மீண்டும் சித்சபையில் பொது மக்களை அனுமதிப்பது குறித்து நடராஜர்தான் முடிவுசெய்வார். கோவில் விசயத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. சட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது'' என்றனர்.
கொலை முயற்சி வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 நாட்களுக்கு மேலாகியும் யாரும் கைது செய்யப் படாததைக் கண்டித்து தீட்சிதர்களை உடனடி யாகக் கைது செய்யவேண்டும் என்று 18-ஆம் தேதி சிதம்பரம் காவல்நிலையத்தில் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிட விடுதலை இயக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்பு களைச் சார்ந்தவர்கள் புகாரளித்துள்ளனர். நடராஜர் கோவில் சித்சபையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும் என்று 8 ஆண்டு கள் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறி ஞர் ராஜி சிதம்பரம், "நட ராஜர் கோவில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்தல்ல, அது தமிழக மக்களின் சொத்து, அரசின் சொத்து. நீதிமன்றத் தில் அவர்கள் நாங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக என்ன செய்வோம் என்ற காரணத்தைச் சொல்லித் தான் இன்றுவரை அரசின் தயவில் நிர்வாகத்தை வைத்துக்கொண்டு கொட்டமடிக்கின்றனர். தமிழன் கட்டிய கோவிலில் சித்சபையில் ஏறித் தேவாரம் திருவாசகம் பாடக்கூடாதென தீண்டாமையைக் கடைப்பிடித்துள்ளனர். சித்சபையில் ஏறுவதற்கு தடைவிதிக்க யார் இவர்கள்? யார் வேண்டு மென்றாலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் சித்சபையில் ஏறி வழிபடலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தீட்சிதர்கள் ஆணவத்தின் உச்சத்தில் ஆடுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட தீட்சிதர்களைக் கைது செய்யக்கோரி வரும் ஆர்ப்பாட்டமும். சித்சபையில் தேவாரம் திருவாசகம் பாடவும் அனைவரையும் சித்சபையில் அனுமதிக்ககோரி கோவிலை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது'' என்றார்.
சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், "சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள். ஆனால், மாவட்ட காவல்துறை யினர் கண்டும், காணாமலும் இருப்பதும், கைதுசெய்யாமல் இருப்பதும், நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு உடந்தையாகச் செயல்படும் நடவடிக்கை. இது குற்றவாளிகள் அனைவரையும் தப்புவிக்கும் சட்டவிரோதமான நடவடிக்கை''’என்றார். இதுகுறித்து காவல்துறை டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.