நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இந்த ஐ.ஐ.டி. நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50 மர்ம மரணங்கள் அரங்கேறியுள்ளன. இதில் சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் 8 மர்ம மரணங்கள் இதுவரை நடை பெற்றுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்ற மாணவியின் மர்ம மரணம் நிகழ்ந்தது. ஐ.ஐ.டி.யில் உள்ள தீண்டாமைக் கொடுமைதான் அவரது மரணத்திற்கு காரணம் என்பது அவரின் கடிதம் வாயிலாக வெளி யுலகிற்கு தெரியவந்தது. தற்போது ஐ.ஐ.டி. வளாகத்திற்குள்ளேயே ஒரு மாணவரின் உடல் தீயில் கருகிக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

iit

போலீஸ் விசாரணையில், அந்த மாணவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்றும், இவர் ஐ.ஐ.டி.யில் புராஜெக்ட் அசோசியேட் விரிவுரையாளராக பயின்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வேளச்சேரியில் உள்ள லதா தெருவில் வாடகை அறையில் தன் சக நண்பர்களுடம் தங்கி கல்லூரி சென்று வந்துள்ளார். கொரோனா கால கட்டத்தினால் ஷிஃப்ட் முறையில் கல்லூரி நடைபெற்று வந்துள்ளது. கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான ஷிஃப்ட், வெளியில் இருந்து வரும் டேஸ்காலர் மாணவர்களுக்கான ஷிஃப்ட் எனப் பிரிக்கப் பட்ட நிலையில், டே ஸ்காலருக்கான வகுப்பின்போது விடுதியில் உள்ள மாணவர்கள் யாரும் விடுதியை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதும் கல்லூரியின் விதியில் இருந்து வந்துள்ளது.

டே ஸ்காலரான உன்னிகிருஷ்ணன் 1-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றுள்ளார். பிறகு வெளியில் வரவில்லை. 2-ந் தேதி அவரது உடல், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய போலீசார், உன்னி கிருஷ்ணனுடன் தங்கியிருந்த கேரளத்தைச் சேர்ந்த அனில் குமார் மற்றும் சேலத்தை சேர்ந்த பிரகாஷிடம் விசாரித்தனர். பின்னர், உன்னிகிருஷ்ணன் தனது அறையில் கடிதம் எழுதி வைத் திருந்ததாகவும் அதில், தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்ததாகவும் தெரிவித்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisment

iii

அந்த கடிதத்தில், சிறுவயதில் நினைத்த என்னுடைய ஆசை நிறைவேறாமலேயே செல்வதாகவும் மன உளைச்சலினால் தற்கொலை செய்வதாகவும் எழுதி இருந்ததாக போலீஸ் தெரிவித்தது. உன்னிகிருஷ்ணன் இறப்புக்கு முந்தைய நாள், சென்னை ஐ.ஐ.டி.யில் பணி புரியும் விபின் என்ற உதவிப் பேராசிரியர், தீண்டாமை காரணமாக தான் பணியில் இருந்து ராஜினாமா செய்துகொள்வதாக நிர்வாகத்திற்கு இ-மெயில் அனுப்பியிருந்த செய்தி வெளியாகி யிருந்தது.

இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஐ.ஐ.டி.யில் நீண்டகாலமாக நிலவிவரும் உயர்சாதி ஆதிக்கத்தினால் பேராசிரியரும் மாணவரும் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், முழுமையான விசாரணையை வலியுறுத்தி யிருந்தார்.

ஐ.ஐ.டியில் பிராமணர் ஆதிக்கம் தொடர்பாக பல போராட்டங்களை நடத்திய த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், ஐ.ஐ.டி. என்றாலே பார்ப்பனர்களின் அதிகாரமும் ஆதிக்கமும் சாட்டை எடுத்து ஆடுகிறது. அந்த வகையில் பேராசிரியர் விபின் ராஜினாமா கடிதத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரைத் தொடர்ந்து உன்னி கிருஷ்ணன் மரணம் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் சைவ உணவு உண்போருக்கு தனி இடம், அசைவ உணவு உண்போருக்கு தனி இடம் என நேரடியாக உணவு தீண்டாமை யை கடைப்பிடித்த கொடுமை மீண்டும் தொடருகிறதா என்பதையும் ஆராய வேண்டும். ஐ.ஐ.டி. கல்வி நிலையம் என்பது பார்ப்பனரல்லாத மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் நரகமாக இருப்பதை இனிமேலும் சகித்துக்கொண்டு நாம் இருக்கக்கூடாது. உதவிப் பேராசிரியர் விபின் முன்வைத்துள்ள தீண்டாமை குற்றச்சாட்டையும் உடனடியாக விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒரு தனி விசாரணை ஆணையத்தை அமைத்திட வேண்டும். இந்த கொடுமைகளுக்கு காரணமாக இருந்த ஐ.ஐ.டி. நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

உன்னியின் உறவினர் ஷிஜூ கூறுகையில், ""மன அழுத்தத்தால் தற்கொலை செய்துள்ளான் என்று நாங்களும் நம்புகிறோம். ஆனால் அந்த மன அழுத்தத்திற்கான உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியவில்லையே. கல்லூரியில் மற்ற மாணவர்களுக்கும் இதுபோன்று நடக்காமல் இருக்க இந்த அரசு வழிவகை செய்யவேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் ஏ.சி. சிவசுப்ரமணியிடம் கேட்டபோது, ""விசாரணையில் தற்கொலை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. ஐ.ஐ.டி.யின் தொடர் நிகழ்வுகளை ஒப்பிடும்போது பல சந்தேகம் எழுகிறது அதன் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம்'' என்றார்.