தமிழ் ஹெலன்

tt

மலையாள நடிகை அன்னா பென்னின் பிரபல மலையாளப் படமான "ஹெலன்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் தயாராகிறது. அன்னாவின் "கும்ப்ளாங்கி நைட்ஸ்' விரிவான ரசிகர்களைச் சென்றடைந்தபோதும், "ஹெலன்' படமே அன்னா பென்னுக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. இக்கட்டான ஒரு இடத்தில் சிக்கி உயிர்ப்போராட் டத்துக்கு ஆளாகும் நாயகி, அதிலிருந்து எப்படி மீளுகிறாள் எனும் ஹாலிவுட் டைப் படமான ஹெலனில் சிறப்பாக ஸ்கோர் பண்ணியிருந்தார் அன்னா. இந்தியில் அன்னா பென்னின் ரோலை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர் பண்ண, தமிழில் தும்பா படநாயகி கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். ஹெலனின் தந்தை பாத்திரத்தை ஏற்கும் அருண் பாண்டியன் இப்படத்தை தயாரிக்கிறார். டைரக்டர் கோகுல் இயக்கு கிறார். விரைவில் இப்படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.ஐ. பிடியில் ரியா

Advertisment

tt

கடந்த இதழில் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டுமென அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையில் இந்த வழக்கில் சந்தேக வளையத்தில் வரும் ரியாவின் செல்பேசி அழைப்புகளை பிரபல ஊடகம் ஒன்று களத்தில் இறங்கிச் சேகரித்துள்ளது. அந்த தொலைபேசி அழைப்புகள், ரியாவும் சுஷாந்தும் போனில் 147 முறை அழைத்துப் பேசியுள்ளதைக் காட்டுகின்றன. ரியா, சுஷாந்திடம் பேசியதைவிடவும் சுஷாந்தின் முன்னாள் மற்றும் தற்போதைய பிஸினஸ் மேனேஜர்களான ஸ்ருதி, சாமுவேல் மிராண்டாவிடம்தான் அதிக முறை போனில் பேசியுள்ளார். ஸ்ருதியிடம் 808 முறையும் மிராண்டாவிடம் 289 முறையும் பேசியுள்ளார். மும்பையின் மிகப் பிரபலமான மனநல மருத்துவர்களிடமும் ஸ்ருதி தொடர்பில் இருந்துள்ளார். இந்த அழைப்புகள் ரியா வின் மீதான சந்தேகப் பார்வையை வலுப் படுத்துவதாகவே உள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குநரகம் ரியாவை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிந்துள்ள சி.பி.ஐ. அதில் ரியா சக்கரவர்த்தி, இந்திரஜித், சந்தியா, சௌவிக் சக்கரவர்த்தி ஆகியோரது பெயர்களையும் இணைத்துள்ளது.

ராவண சென்டிமெண்ட்!

Advertisment

இந்தியாவெங்கும் ராமர் கோவில் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரேயொரு மாநிலம் மட்டும், இது ராவண தேசம் என சொல்லிக்கொண்டு சமூக ஊடகங்களில் ராவணனின் புகழ் பாடிக் கொண்டிருந்தது. அதை கணக்கில் வைத்தோ அல்லது தற்செயலாகவோ சாந்தனு நடிக்கும் "இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. நடிகர் விஜய்யின் "மாஸ்டர்' படத்தில் சிறியதொரு கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருப்பதால், அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டதோடு, ""இதுக்கப்புறம் உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்'' என்று வாழ்த்தியிருக்கிறார். பார்க்கலாம் இராவண சென்டிமெண்ட் பலிக்கிறதா என்று.

ஆமா விசாரிக்கணும்!

எவ்வளவுதான் வெயிட் பண்றதுனு பொறுத்திருந்து பார்த்துவிட்டு, கொரோனா நேரமாயிருந்தாலும் பரவாயில்லைனு ராணா டகுபதி திருமணத்தை நடத்திமுடித்திவிட்டார். நீண்ட காலமாக த்ரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ராணா, சமீப காலமாக மிஹிகா பஜாஜுடன் காதல் நெருக்கத்தில் இருந்துவந்தார். த்ரிஷா விவகாரத்தைப் போலல்லாமல் ராணா, தம் வீட்டில் பேசி காதலை உறுதிசெய்ததுடன் கல்யாணத்தை நோக்கியும் நகர்ந்து வந்துவிட்டார். கொரோனா நேரமாக இருப்பதால் வெகு நெருக்கமான 30 உறவினர்களுக்கு மட்டும்தான் அழைப்பு. மணமகள் வீட்டருகில் வைத்தே கல்யாணம் சிம்பிளாக நடந்துமுடிந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போது, அழைப்பிதழ் வந்ததா... இல்லையா… என்பதை த்ரிஷாவிடம் நாசூக்காக விசாரிக்கவேண்டும்.

கொரோனாவின் மாஸ் ரீச்!

""நான் இல்லாத இடமேயில்லை...…நான் வெல்லாத ஆளே இல்லை'' என மாஸ் ஓப்பனிங் சாங் வைக்காத குறையாக அடித்து ஆடிக்கொண்டிருக்கிறது கொரோனா. அமித்ஷா, புரோகித், ரஞ்சன் கோகாய் மாதிரி அரசியல்வாதிகளை மட்டுமின்றி விஷால், ராஜமௌலி மாதிரி சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ஆக்சன் கிங் எனத் தெரிந்தும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிடம் வாலாட்டிவிட்டுப் போயிருக்கிறது. தமிழகத்தின் "பாடும் நிலா பாலு' என புகழப்படும் எஸ்.பி.பி.யையும் கொரோனா தொற்றியிருக்கிறது. அரசியலிலும் சினிமாவிலும் கலக்கும் கருணாஸுக்கும் கொரோனா தன் விசிட்டிங் கார்டை தந்திருக்கிறது. படப்பிடிப்பு இல்லாமலே கொரோனா இந்த ஆட்டம் போடும் நிலையில், சினிமாக்காரர்கள் கோருவதுபோல் படப்பிடிப்புக்கும் அனுமதி யளித்துவிட்டால் என்ன ஆகும் என்ற கவலையும் திரையுலகை வாட்டுகிறது.

tt

ரீமேக் கோலம்!

நயன்தாராவின் "கோலமாவு கோகிலா' படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறதாம். மயூரா ராகவேந்திரா இயக்க, நயன்தாராவின் கதாபாத்திரத்தில் ரச்சிதா ராம் எனும் சின்னத்திரை நடிகை நடிக்கவிருக்கிறாராம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் முறையான அறிவிப்புகள் வெளிவரும் என்கிறார் இயக்குநர்.

-சூரியன்