தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் முடிந்த நிலையில் தமிழக பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் சந்தித்து மனம் திறந்து பேசினார். கவர்னர் நிகழ்ச்சி என்ற பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லாதது ஊடகத்தினரை ஆச்சரியப்படுத்தியது. தெலங்கானா கவர்னராக அம்மாநில மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டது தொடர்பான ஒரு காஃபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட்டது.
தாமரை மலர்ந்தே தீரும் என அரசியல் களத்தில் இருந்தபோது தமிழிசை பேசிய தொனி உள்பட அவரது பண்பு நலன்களைப் பத்திரிகையாளர்கள் பாராட்டிப் பேசினர். ஆளுநர் தமிழிசை பேசும் போது, ""கவர்னராக பொறுப் பேற்றதுமே பாஜகவை சேர்ந்த நான், பாஜக அல்லாத அரசுடன் எப்படி ஒத்துப்போவேன் என்று பத்திரிகை யாளர்கள் கேட்டனர். நான், மக்கள் நலன் சார்ந்து அரசு நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன். அதற்கேற்ப ஒப்புக் கொள்ள வேண்டிய விசயங்களுக்கு ஒப்புக் கொள்வேன். தவறுகள் நடந்தால் அதனை சுட்டிக்காட்டுவேன் என சொன்னேன். அப்படித்தான் எனது கவர்னர் பணி இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ராஜ்பவன், வெறும் கவர்னர் மாளிகையாக இல்லாமல், மக்கள் பவனாக இருந்தது. ஒரு டாக்டராகவும் மக்களுக்கு ஆலோசனை வழங்கினேன்.
தனது தோற்றத்தை வைத்து மீம்ஸ் போட்டது பற்றியும் அதற்கு லைக்குகள் அள்ளியது பற்றியும் விமானப் பயணத்தின் போது தெரிவித்த ஒரு இளைஞரைப் பற்றியும் பின்னர் அவர் மனம் மாறியதையும் சொன்ன தமிழிசை, என் தலை முடி சுருட்டைதான். அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. முடிதான் எனக்கு சுருட்டை; ஆனா, யாருடைய பணத்தையும் நான் சுருட்டியதில்லை. நான் கறுப்புதான்; ஆனா, என்னிடம் கறுப்பு பணம் கிடையாது'' என்று டைமிங்கான ரைமிங் குடன் சொன்னார். ""இங்கு பேசிய பத்திரிகையாளர்கள், செகண்ட் இன்னிங்சில் இங்கு வேறு பதவி காத்திருக்கிறது என சொல்கிறார்கள். எனக்கு எதிலும் ஆசையில்லை. ஆண்டவனும், ஆள்பவர்களும் எனக்கு கொடுக்கிற பணியை செய்கிறேன்.
அரசியலில் பெண்கள் வருவதும் அதில் சாதிப்பதும் அவ்வளவு எளிதானது இல்லை. என்னை மாநில தலைவராக நியமித்த மறுநாளே, இவரை மூணு மாசத்துல மாத்திடுவாங்கன்னு சொன்னாங்க. பாஜக தலைவராக அதிக வருடங்கள் இருந்தது நான் தான். தலைவராக நான் இருக்கும் போது எதிர்கொண்ட பிரச்சனைகள் அதிகம். எனக்கு ஆதரவாக இருந்தவர் எனது கணவர் டாக்டர் சௌந்தரராஜன்தான். தமிழக மக்கள் போலவே தெலங்கானா மக்களும் என்மீது அன்பாக இருக்கிறார்கள்'' என்று மனம் திறந்து பேசினார் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.