த்தரப்பிரதேசத்தின் உன்னாவ் வன்புணர்வு வழக்கின் பிரதான குற்றவாளியான குல்தீப் செங்கர் மீண்டுமொருமுறை தேசத்தின் பேசுபொருளாகியிருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் கிளை அமர்வு ஒன்று டிசம்பர் 23-ஆம் தேதி, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் செங்கருக்கு பல்வேறு நிபந்தனைகளின்கீழ் ஜாமீன் வழங்கியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

Advertisment

2017, ஜூன் மாதம் பதினெட்டு வயதைக் கூட எட்டியிராத உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, அப்பகுதியின் அப்போதைய எம்.எல்.ஏ.வான குல்தீப்சிங் செங்கராலும் மற்றும் சிலராலும் வன்புணர்வு செய்யப்பட்டார். 

Advertisment

அரசு வேலை தருவதாகக் கூறி பாதிக் கப்பட்ட பெண், ஷஷி சிங் என்ற பெண்ணின் மூலம் கான்பூருக்கு வரவழைக்கப்பட்டார். அங்கே சுபம் சிங், அவனது ஓட்டுநர் அவ்தேஷ் திவாரி இருவரும் பலமுறை வன்புணர்வு செய்ததோடு, பிரஜேஷ் யாதவ் என்பவருக்கு ரூ.60,000-க்கு பொருளை விற்பதுபோல் விற்கவும் செய்திருக்கின்றனர்.

இதற்கெதிராக நீதியை நிலைநாட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பெரிய போராட்டம் நடத்தவேண்டியிருந்தது.

Advertisment

இந்த வழக்கில், கிட்டத்தட்ட 1 வருடம் காவல்துறை செயல்படாத நிலையில், பாதிக்கப்      பட்ட பெண், உ.பி. முதல்வர் யோகியின்   அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்று தடுக்கப்பட்டார். மக்களின் அழுத்தம் அதிகரித்த நிலையில் முதல் குற்றப்பத்திரிகை பதியப்பட்டது. பின், குல்தீப் செங்கரும் அவரது சகோதரரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையையே குற்றவாளியாகக் காட்ட முயன்றது குறித்து மற்றொரு குற்றப்பத்திரிகை பதியப்பட்டது.

இந்த வழக்கில் ஏப்ரல் 13, 2018-ல் குல்தீப் செங்காரும், பின் சுபம் சிங்கும் கைது செய்யப்பட்டனர். விஷயங்கள் மட்டுமீறிப் போன நிலையில், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றம் வரை இந்தப் பிரச்சனையைக் கொண்டுவந்தபின், பிரதமர் மோடி ஒருவழியாக இந்த வன்புணர்வு நிகழ்வுகளைக் கண்டித்து 2018-ல் குரல்கொடுத்தார்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விரைவிலேயே உத்தரப்பிரதேச காவல்துறை கஸ்டடியில் சந்தேகமான முறையில் மரணமடைந்தார். தேசிய அளவில் இந்த வழக்கு பெரிய கவனம் பெற்றிருந்தபோதும், பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவளது குடும்பத்தையும் முடக்கிவிட இந்த     வழக்கில் தொடர் முயற்சிகள் நடந்தன. வழக்கு விசாரணைக்கு ஒருமுறை சென்றுவந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும்               இருந்த கார் 2019, ஜூலை 28-ல் விபத்துக்குள்ளாகியது. அவளது உறவினர் இறந்துபோக, பாதிக்கப்பட்ட பெண்ணே பலத்த காயத்துக்கு உள்ளானார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அதுவரை நடந்த விஷயங்களை வழக்கறிஞர்கள் கோரிக்கையாக எழுதி, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.

kuldeep1

கடைசியாக 2019, டிசம்பர் 20 அன்று, பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்காக டெல்லி நீதிமன்றம் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது. மார்ச் 2020-ல், அவரது தந்தையின் மரணத்தில் சதி' செய்த குற்றத்திலும் செங்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இந்தநிலையில்தான் டிசம்பர் 23, 2025-ல், டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத், ஹரிஷ் வைத்யநாதன் அமர்வு பல்வேறு நிபந்தனைகளுடன் வன்புணர்வு வழக்கில் ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர் தங்கியுள்ள வீட்டின் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் செங்கர் நுழையக் கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது. அதேசமயம், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் கொலைவழக்கு பாக்கியுள்ளதால் தற்போதைக்கு செங்கர் சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் பிரிவு 5(ஸ்ரீ), இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2) ஆகியவற்றின் கீழுள்ள கடுமையான குற்றங்களுக்கான விதிகள் செங்கரின் வழக்கில் பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. அந்த விதிகளின்படி அவரை ஒரு "அரசு ஊழியர்' என்று வகைப்படுத்தமுடியாது என்றுசொல்லி அதனடிப்படையில்,  தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. 

இதையடுத்து வழக்கின் மையப்பிரச்சனை, அவர் பதினெட்டு வயதை எட்டாத பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தாரா இல்லையா என்பதுதான். 

அதைவிட்டு அவர் அரசு ஊழியரா, இல்லையா என்பதல்ல என சமூக ஊடகங்களில் தீர்ப்புகுறித்த விமர்சனம் எழுந்துள்ளது.

அதேசமயம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் மேற்கொண்ட நிலையில், அவர்களை அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக சி.ஆர்.பி.எஃப். போலீசார் அகற்றியிருக்கின்றனர். அழைத்துச்செல்லும் போது, ஓடும் வண்டியிலிருந்து பெண்ணின் தாயார் தள்ளிவிடப்பட்டு காலில் காயமடைந்ததாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.

உன்னாவ் பாலியல் வழக்கில் தண்டனைபெற்ற குல்தீப்சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் 

உத்தரவை சி.பி.ஐ., 'சட்டத்திற்கு முரணானது', 

'தவறானது' என்று கூறியுள்ளது. மேலும், குற்றம் நடந்த நேரத்தில் அந்த முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. 

"அரசு ஊழியர்' அல்ல என்ற உயர்நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புக்கெதிராகவும் சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தை அணுகியது.

“இதன்பின், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, குல்தீப் செங்கருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.