நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் நிர்மலாதேவியால் வலை வீசப்பட்ட நான்கு மாணவிகளின் குமுறலை கல்லூரி நிர்வாகம் வரையிலும் எடுத்துச்சென்றதில் முக்கிய பங்கு வகித்தவரான அருப்புக் கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த அந்தப் பேராசிரியை இதுவரை வெளியுலகம் அறியாத பல விஷயங்களை நம்மிடம் பேச ஆரம்பித்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் -அலுவலர்கள் தங்கள் ஊதிய உரிமை குறித்துப் போராடிக்கொண்டிருந்த நேரம் அது.
புரிந்துகொள்ள முடியாத பேச்சு!
நிர்மலாதேவியின் பேச்சை மாணவிகள் ஏன் ரெகார்ட் செய்தார் கள் தெரியுமா? அதற்குமுன், நிர்மலா தேவி அனுப்பிய வாட்ஸப் தகவல்கள் மாணவிகளுக்குப் புரியவில்லை. தொடர்ந்து பலமுறை அவர் சூசகமாகப் பேசியிருக்கிறார். அதனால்தான் அவருடைய பேச்சை ரெகார்ட் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டால், புரிந்துகொள்ள முடியுமென்று கருதியே, அப்படி செய்தார்கள். நான்கு மாணவிகளில் ஒருவரின் உறவினர் கல்லூரியில் பணியாற்றுகிறார். அவர் மூலம்தான் அந்த ஆடியோ, கல்லூரியின் மகளிர் மன்றத்துக்கு வந்து சேர்ந்தது. "மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் அவர்.
அந்த ஆடியோவில் பேசிய பேராசிரியை யார் என்று அவர் சொல்லவில்லை. ஆனாலும், அந்தக் குரல் எங்களுக்குப் பரிச்சயமானது என்பதால், பேசியவர் நிர்மலாதேவி என்பதைத் தெரிந்துகொண்டோம். மகளிர் மன்றம் வழக்கமாக விசாரித்து வரும் எல்லையைத் தாண்டிய விவகாரமாக இருந்ததால், பிரின்சிபல், வைஸ் பிரின்சிபல், செக்ரட்டரி ஆகியோரிடம் கொண்டு சென்றோம். "இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்'’என்று உறுதியளித்தார் கல்லூரியின் செயலாளர் ராமசாமி. ஆனால், சொன்னபடி அவர் நடந்துகொள்ளவில்லை.
அமைச்சர்களுக்கு அள்ளித் தந்த கல்லூரி!
தேவாங்கர் எனப்படுபவர்கள் சிறுபான்மையினர்தான். ஆனாலும், அவர்கள் பேசுகின்ற மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அதனால், மொழிச்சிறுபான்மையினர் என்ற தகுதிக்குள் தேவாங்கர் வர முடியாது. ஆனாலும், விதிமீறலாக மொழிச் சிறுபான்மையினருக்குக் கிடைக்ககூடிய சலுகைகளைப் பெற்று, இன்றுவரையிலும் இவர்கள் கல்லூரியை நடத்தி வருகின்றனர். இக்கல்லூரி ஆண்டொன்றுக்கு ரூ.10 கோடி வருமானம் ஈட்டுகிறது. இதைப் பங்கு போட்டுக்கொள்வதற்காகத்தான், பழைய நிர்வாகிகளும் புதிய நிர்வாகிகளும் முட்டி மோதுகின்றனர். செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சம் வரை வாங்கிக்கொண்டு, 11 போஸ்டிங் போட்டிருக்கிறார் ராமசாமி. நிர்வாகிகளின் மோதலில் அமைச்சர்களும் அதிகாரிகளும் குளிர் காய்கிறார்கள். இன்றைய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி... முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி போன்றோர் பட்டியலில் உள்ளனர்.
செயலாளர் ராமசாமியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முடிந்துவிட்டது. ஆனாலும், கல்வித்துறை அதிகாரி ஒருவருக்கு ரூ.50 லட்சம் கொடுத்து, பதவியில் நீடிப்பதற்கான உத்தரவு ஒன்றை வாங்கி, கல்லூரியில் அதிகாரம் செலுத்தினார். சில நாட்களுக்கு முன், "இந்த உத்தரவு செல்லாது' என்று கூறி, கல்லூரிக்குள் நுழைந்து பிரச்சினை செய்துவிட்டுச் சென்றார்கள் பழைய நிர்வாகிகளின் விசுவாசிகள். இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு, ராமசாமி பதவியில் தொடர்வதற்குத் தடை விதித்திருக்கிறது.
ஆதரித்த சமுதாயம்!
இந்தக் கல்லூரி மீது முன்பே ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அன்றைய கல்வித்துறை இணைச் செயலாளர் முழுமையாக விசாரித்து, 100 பக்கங்களுக்கு கோப்பு ஒன்றைத் தயாரித்தார். அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், நிர்மலாதேவி இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்க முடியாது. நிர்மலாதேவி விவகாரத்தை இக்கல்லூரி நிர்வாகம் எப்படி அணுகியது தெரியுமா? கல்லூரி மகளிர் மன்றம் நான்கு மாணவிகளின் குமுறலை எடுத்துச்சொன்னதும், ‘""நிர்வாகக் கமிட்டி கூடித்தான் முடிவெடுக்கும். அதுவரை பொறுத்திருங்கள்''’என்றார் செயலாளர் ராமசாமி. அந்த நிர்வாகக் கமிட்டியோ, ""நிர்மலாதேவி தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புகார் கூறும் மகளிர் மன்றத்தினரில் 7 பேரில் 4 பேர் தேவாங்கர் அல்லாத சமுதாயத்தவராக இருக்கிறார்கள். நம் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்மலாதேவியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள். நிர்வாகம் நம் கையில் இருப்பதால், அவர்களை ஒருகை பார்த்துவிட வேண்டும்''’என்று விவாதித்திருக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மாணவிகள் தரப்பு, ""காவல்துறையிடம் புகார் செய்வோம்; மாவட்ட ஆட்சியரிடம் முறையிடு வோம்''’என்று ராமசாமிக்கு நெருக்கடி தர, "அவசரப்படாதீர்கள்'’எனச் சொல்லி, நிர்மலாதேவியை சஸ்பெண்ட் செய்வ தென்று முடிவெடுத்தார்.
மிரட்டிய நிர்மலாதேவி!
இதை அறிந்து, ஆத்திரமடைந்த நிர்மலாதேவி, ""நிர்வாகிகளில் யார் யோக்கியம்? அத்தனை பேரையும் காட்டிக்கொடுப்பேன்''’என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். அதனால், பெயரளவில் நிர்மலாதேவி மீது 15 நாட்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது சொந்தபந்தங்களான தேவாங்கர் சமுதாயத்தவர், அவருக்கு ஆதரவான நிலை எடுத்து, கல்லூரி நிர்வாகத்துக்கு நெருக்கடி தந்தனர். உடனே, செயலாளர் ராமசாமி, மகளிர் மன்றத்தினரில் தேவாங்கர் அல்லாதவர்களை அழைத்து, "நீங்கள் இன்னொரு புகார் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும்'’என்றார். இது பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை அறிந்துகொண்ட தேவாங்கர் அல்லாத பேராசிரியைகள், "எதற்காக இன்னொரு புகார்?' என்று கேட்டு, தர மறுத்தனர். ஒருவேளை அப்படி ஒரு புகார் அளித்திருந்தால், இந்த விவகாரத்தை சாதிரீதியாகக் கொண்டுசென்று, நிர்மலா தேவியைக் காப்பாற்றும் முடிவில் இருந்தது கல்லூரி நிர்வாகம்.
வற்புறுத்தி வாங்கிய புகார்!
இந்த நிலையில்தான், நிர்மலாதேவி குறித்த கட்டுரை நக்கீரனில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து, சேனல்களிலும் அந்த ஆடியோ வெளியாகி, தமிழகமே பரபரப்பானது. அப்போதும்கூட, கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவி மாணவிகளை ‘டிஸ்டர்ப்’ செய்தது குறித்து, முறையாகப் போலீஸிடம் புகார் அளித்திட முன்வரவில்லை. நிர்மலாதேவியைக் கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி வாசலில் மாதர் சங்கத்தினர் போராட்டமெல்லாம் நடத்தினார்கள். அதனால், காவல் துறையினரே கல்லூரிக்கு வந்து, புகார் எழுதித் தரும்படி வற்புறுத்திய பிறகே, வேறு வழி யின்றி புகார் அளித்தார் செய லாளர் ராமசாமி.
ப்ரோட்டகாலை மீறி கவர்னரை நெருங்கியது எப்படி?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், நிர்மலாதேவி கவர்னருக்கு அருகில் நின்று போட்டோ எடுத்திருக்கிறார். வீடியோவும் எடுத் திருக்கிறார். அந்த போட்டோவையும் வீடியோ வையும்தான் மாணவிகளுக்கு அனுப்பி, "நான் கவர்னருக்குப் பக்கத்தில் நிற்கிறேன் பாருங்க. இதிலிருந்தே என்னுடைய செல்வாக்கை நீங்கள் அறிந்து கொள்ளலாம். என்னால், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்துதர முடியும்' என்று ஆசை வார்த்தைகளை வீசினார். கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ப்ரோட்டகால் கடைப்பிடிக்கப்படும் அல்லவா? அதனை மீறி நிர்மலாதேவியால் எப்படி கவர்னரை நெருங்க முடிந்தது? இதன் பின்னணியில் நிச்சயம் யாரோ ஒரு வி.வி.ஐ.பி. இருந்திருக்க வேண்டும். அந்த வி.வி.ஐ.பி. யார்? யாருக்காக மாணவிகளை நிர்மலாதேவி மூளைச் சலவை செய்தார் என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம், சந்தானம் கமிஷன் மற்றும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையிடமிருந்து நமக்குப் பதில் கிடைக்கவில்லை.
ஆதாரங்கள் ஏன் அழிக்கப்பட்டன?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போன்ற பெரும் தலைகளுக்கு என்ன வேலை? இங்கு நடந்த மேக்சிமம் கிராண்ட் பார்ட்டியில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்குத்தான் நல்ல ரோல். கவர்னர் நிகழ்ச்சியில் மட்டுமல்ல. இந்தப் பார்ட்டியிலும் நிர்மலாதேவி கலந்துகொண்டார் தெரியுமா? இந்த ஆதாரங்களெல்லாம் கவர்னர் மாளிகை உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டன. "துணைவேந்தர் செல்லத்துரைதான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்தார். ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன' என்று அப்போது காவல்துறையிடம் புகார் அளிக்க முன்வந்தார் ஒருவர். சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இதையெல்லாம் விசாரித்தார்களா?
டெல்லிவரை சேவை!
நிர்மலாதேவி விவகாரம் வெளிவந்துவிடக் கூடாது என்று அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் மெனக்கெட்டது ஏன் தெரியுமா? சென்னை, டெல்லி வரையிலும் நிர்மலாதேவிக்கு அந்தந்த டிபார்ட் மெண்ட் ஆட்களைத் தெரியும் என்பதால் அவரை அழைத்துச் சென்று கல்லூரி காரியங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். ‘தனிப்பட்ட முறையிலும் நிர்வாகிகள் இருவரின் கைப்பாவை ஆனார் நிர்மலாதேவி. கல்லூரியில் பணிபுரியும் பெண் களையும் வளைக்கத் துணிந்தார்கள். இத்தகையோரின் பலவீனங்களை நேரடியாக அறிந்திருந்த தாலேயே, கல்லூரியில் எதையும் செய்யலாம், மாணவிகளையும் தவறான முறையில் வழி நடத்திச் செல்லலாம் என்ற கெட்ட எண்ணத்தோடு செயல் பட்டார் நிர்மலாதேவி. மாணவிகளை மட்டுமல்ல. கல்லூரியில் பணிபுரிபவர்களையும் "வாங்க குற்றாலம் போகலாம்; கொடைக்கானல் போகலாம்; ஜாலியா இருக்கலாம்'’என்று அழைத்தார் நிர்மலாதேவி. சிலர் போகவும் செய்தார்கள். வாட்ஸப் மூலம் இதுபோன்ற அழைப்புகள் நிர்மலாதேவியிடமிருந்து வருவது குறித்து, கல்லூரி செயலாளர் ராமசாமி யிடம் புகார் அளித்தார்கள் சில பேராசிரியர்கள். அதற்கு ராமசாமி, "இங்கே பாருங்க... எனக்கும்தான் வாட்ஸப்ல மெசேஜ் அனுப்பிருக்காங்க'’என்று தன்னுடைய போனுக்கு வந்த மெசேஜைக் காட்டி, விவகாரம் பெரிதாகாமல் தவிர்த்தார்.
வளர்த்துவிட்டதன் பலன்!
விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவல கத்துக்கு கல்லூரி மகளிர் மன்ற பொறுப்பில் உள்ள வர்களையும், கல்லூரிச் செயலாளர் ராமசாமியையும் விசாரணைக்காக அழைத்திருந்தனர். மூன்றுமணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்ததால், ‘"எங்க ளுடைய கிரேடுக்காவது மதிப்பு தர வேண்டாமா? நாங்கள் என்ன குற்றவாளிகளா?' என்று சி.பி. சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் கேட்டேவிட்டார் ஒரு பேராசிரியை. அதற்கு அந்த எஸ்.பி., "நீங்க எல்லாரும் சேர்ந்துதானே நிர்மலாதேவியை வளர்த்துவிட்டீங்க. அதற்காகத்தான் இந்த பனிஷ்மெண்ட்' என்று கூலாகச் சொன்னார்.
நல்ல மனுஷியாக்கும் முயற்சியில் தோல்வி!
மாணவிகளால் குற்றம் சுமத்தப்பட்ட நிர்மலாதேவியை ‘நல்ல மனுஷியாக்கப் பார்த்தது கல்லூரி நிர்வாகம். அதனால், கல்லூரிக்கே வந்து சத்தம் போட்டார்கள் மாணவிகளின் பெற்றோர்கள். அப்போதே, ‘நிர்மலாதேவி மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விவகாரம் வெளிஉலகத்துக்கே தெரிந்திருக்காது. கல்லூரிக்கும் அவப்பெயர் ஏற்பட்டிருக்காது. கல்லூரி நிர்வாகிகள் சிலரின் சாதி மனோபாவமும், சுயநலமும்தான் இந்த விவகாரத்தை உலகறியச் செய்துவிட்டது.
இத்தனை குளறுபடிகளுக்கிடையே, நிர்வாகப் பொறுப்புக்கு அடுத்து யார் வருவது என்பதில் எழுந்த போட்டா போட்டியால், நீதிமன்றமே தலையிட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தம் செய்வதற்காக நியமித்துள்ளது.
-சி.என்.இராமகிருஷ்ணன்,
தாமோதரன் பிரகாஷ், அண்ணல்
___________________
துணை நின்ற தோழர்கள்!
கடந்த நவம்பர் 03-06 தேதியிட்ட "நக்கீரன்' இதழில் "சொல்வதெல்லாம் பொய்! மாணவிகள் சாட்சியம்!'’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்த நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தில் நடக்கும் திரைமறைவு வேலைகளைத் தோலுரிக்கும் வகையில் மாணவிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களின் மனநிலையை நேரடியாகப் பதிவு செய்திருப்பது "நக்கீரன்' மட்டும்தான் என்று வாசகர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
மாணவிகளின் சரியான முகவரியை நாம் அறிந்திடாத நிலையில், நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளியாக வேண்டும் என்ற நோக்கத்தில், "நக்கீரன்' குழுவினரோடு சளைக்காமல் பயணித்தவர்கள் ஜனநாயக மாதர் சங்கத்தினரும் அருப்புக்கோட்டை நகர சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத் தலைவர் ராஜா மற்றும் மாரியப்பனுடன் வந்த மார்க்சிஸ்ட் தோழர்களே! வாசகர்களின் பாராட்டுகளை தோழர்களுக்கு உரித்தாக்குகிறோம்.
-சி.என்.இராமகிருஷ்ணன்