"கடலூர் மாவட்டத்தில் “ஆட்டம் காணும் சேர்மன் பதவிகள்'” என கடந்த நவம்பர் 17-19 இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கேற்றாற்போல் விருத்தாசலம், நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஆதரவு கவுன்சிலர்கள், ஒருபடி மேலேபோய் அ.தி.மு.க. சேர்மனே தி.மு.க.வில் இணைந்துவிட்டதால் கடலூர் மாவட்ட அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

admk-dmk

கடந்த 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த செல்லத்துரை ஒன்றியக்குழு தலைவராகவும், பா.ம.க.வை சேர்ந்த பூங்கோதை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பரூர் அ.தி.மு.க. கவுன்சிலர் மல்லிகாவும், அவரது கணவர் பாலதண்டாயுதமும் உயிரிழந்தனர். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த மதியழகன் வெற்றிபெற்றார். இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து, அ.தி.மு.க கவுன்சிலர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது.

Advertisment

adddd

Advertisment

இதனிடையே கடந்த 21.12.2021 அன்று ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், உள்ளாட்சி சட்டங் களுக்கு விரோதமாக நடந்து வருவதாகவும் கூறி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 14 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மான மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் அளித்தனர்.

இதேபோல் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலும் ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் இருவரும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு 2 ஆண்டுகளாக நிதிகளை பிரித்துக் கொடுக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, தலைவர் செல்வி ஆடியபாதம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி 15 கவுன்சிலர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், 25.12.2021 அன்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான சி.வெ.கணேசன் ஏற்பாட்டில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் செல்லத்துரை மற்றும் சில அ.தி.மு.க., அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்கள் தி.மு.க.வில் சேர்ந்தனர். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கணேசன், ‘அ.தி.மு.க சேர்மன் தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேர் தி.மு.கவில் இணைத்துக் கொண்டதாகக் கூறினார்.

இது செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பரவவே, உடனடியாக அன்று மாலை விருத்தாசலத்தில் நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் பச்சமுத்து, ராஜலட்சுமி, முத்து, ஜான்சிமேரி, பத்மாவதி, வள்ளி மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக கவுன்சிலர் ராஜா உட்பட 7 பேருடன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், "நல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 7 பேரில் 6 பேர் இங்குள்ள நிலையில் அமைச்சர் கணேசன் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார். நல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்த பா.ம.க.வை சேர்ந்தவர் சேர்மனாக தற்போதுவரை உள்ள நிலையில், விருத்தாச்சலம், நல்லூர் ஒன்றியங்களில் இனிமேல் தி.மு.க. சேர்மன்கள் இருப்பார்கள் என்று கூறியது அதிகார துஷ்பிரயோகம். சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் 2 பேர், பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க.வில் சேர்ந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் சேர்ந்திருப்பதாக, ஊடகங்கள் முன்பு பொய்யான தகவலைக் கூறுவது மிகவும் கண்டனத்துக் குரியது.

விருத்தாச்சலம் ஒன்றிய சேர்மன் செல்லதுரை மீது தி.மு.க. உட்பட 14 கவுன்சிலர்கள், "சேர்மன் மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கோரி கோட்டாட்சியரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில் தற்போது, மக்களின் நம்பிக்கையை இழந்த விருத்தாச்சலம் ஒன்றிய சேர்மன் செல்லதுரையை, தமிழக முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்திருப்பது கேலிக்குரியது" என்றார்.

அமைச்சர் கணேசனோ, "தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களாலும், சிறப்பான ஆட்சி நிர்வாகத்தாலும் ஈர்க்கப்பட்டு பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அதேபோல் விருத்தாசலம் சேர்மன், மங்களூர், நல்லூர், விருத்தாசலம் ஒன்றியங்களைச் சேர்ந்த அ.தி.மு.க மற்றும் அக்கட்சி ஆதரவு சுயேட்சைகள் 7 பேர் தலை வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அதைத்தான் நான் குறிப்பிட் டேன். அதைத் தவறாக புரிந்துகொண்டு, நல்லாட்சி நடத்தும் தி.மு.க அரசு மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். சேர்மன்களை மாற்றுவ தெல்லாம் எங்கள் வேலையல்ல, அது கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்டது'' என்றார்.

இந்த இரண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களில் யாருடைய பதவி பறிபோகும், யாருடைய பதவி தொடரும் என இன்னும் சில நாட்களில் தெரியவரும்.