மிழ் சினிமாவில் வணிகரீதியிலான, வெகுஜன ரசிப்புத் தன்மைக்கு உட்பட்டதாக சொல்லப்படுகிற நாயக பிம்பம், கவர்ச்சியான கதாநாயகி, பாடல், சண்டை காட்சிகள், நகைச்சுவை என படங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. சில படங்கள் பெரிய கதாநாயகர்களுக் காகவும், தற்சமயங்களில் இயக்குநர்களுக்காகவும், சில படங்கள் கதையின் ஆழத்தை வைத்தும் திரையரங்கில் ஓடுகிறது. அதற்கு பிறகு ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியும் பேசுபொருளாகிறது.

Advertisment

இந்த வரையறைகளுக்கு உட்படாமல் அத்தி பூத்தாற்போல சில படங்களும் வந்துகொண்டு தானிருக்கிறது. அவை பரந்துபட்ட வியாபாரச் சூழல் அமையாமல், அதிக திரையரங்குகள் கிடைக்  காமல், பெரிய ஓ.டி.டி. தளங்களை அணுகவே முடியாமல் போய்விடுகிறது. அதற்காகவெல்லாம் அந்த படம் நல்ல படைப்பு என்றில்லாமல் ஆகிவிட முடியாதல்லவா? அது வெகுமக்களை சென்று சேரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisment

ஒடுக்கப்படுகிற மக்களைப் பற்றிய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், விளையாட்டு, திருவிழா போன்றவற்றை மையமாகக் கொண்ட சினிமாக்கள் தற்சமயம் அதிகம் வந்துகொண்டு இருக்கிறது. அவை சினிமாத்தனத்தோடு எடுக்கப்படுகிறது. பார்வையாளரின் சுவாரசியத்திற்காக அங்கே பல விசயங்கள் இணைப்பட வேண்டியும் இருக்கிறது. இவையில்லாமலும் ஒரு சில படங்கள் வருகிறது. சர்வசாதாரணமாக அவற்றை திரைப்பட விழாக்களுக்கான படங்கள் என்று சொல்லி தனித்து விடப்படும் சூழலும் இங்கு நிலவுகிறது.

கொங்குமண்டல வட்டார வழக்கு மொழியோடும், தொழில்முறை கலைஞர்களோடும் இணைத்து அந்த மண்ணின் மைந்தர்களையும் நடிக்க வைத்து, யதார்த்தமான கதை சொல்லும் வகையில் வந்திருக் கிறது "ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. நாவலின் தலைப்பைப் போல இருக்கும் இப்படம் முழுவதும் ஒரு நாவலை வாசிப்பதைப் போன்ற உணர்வை காட்சிகளின் வழியே கடத்துகிறது.

Advertisment

கொங்குமண்டலத்தில் அதிக நிலங்களை வைத்திருக்கிற ‘பண்ணாடிகள்’ என்று சொல்லப்படுகிற சிறு முதலாளிகள் இருவருக்கிடையே அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கிற ஒரு எளிய மனிதனுடைய வாழ்க்கையின் கதை தான் இப்படம். தாயின்றி இரண்டு பிள்ளைகளை வளர்க் கும் அப்பா, தன்னுடைய மகனுக்காக கிராம தெய்வமான ஒண்டிமுனியிடம் வேண்டி, கிடா ஒன்றினை நேர்ந்து விடுகிறார். அதை வெட்டி விருந்து வைக்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாக நடக்காமல் இருக்கிறது. ஏனெனில் அந்த கோவில் இருக்குமிடம் பண்ணாடிகளுக்கு சொந்தமானதால் அவர்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. எந்த மகனுக்காக கஷ்டப்பட்டு உழைத்து வேண்டுதல் எல்லாம் வைக்கிறாரோ... அவரோ ஒழுங்காக படிக்காமல், குடித்துக் கொண்டு, பெண்ணை கவர்வதற்கான வேலையில் ஈடுபடுகிறார். அந்த மகன் அப்பனின் கஷ்டம், குடும்ப சூழல் புரிந்து திருந்தினாரா? கிடா வெட்டி வேண்டுதல் நிறைவேறியதா? என்பதுதான் மீதிக்கதை.

படம் முழுக்க கஷ்டப்படுகிற கதைமாந்தர்கள் மீது கழிவிரக்கம் வராமல் அவர்களுடைய வாழ்வியல் வலி உணர்வை நம் மீது கடத்துகிறார் இயக்குநர் சுகவனம். கதை மாந்தர்களுக்கு பொருளாதாரம்தான் இல்லை, ஆனால் வாழ்வில் நகைச்சுவைக் கும், எள்ளி நகையாடுதலுக்கும் பஞ்சம் இல்லை என்ற ரீதியில் ஒரு பெரும் விருந்திற்கு தயாராவதில் கொண்டாட்ட மனநிலையோடு இருப்பதை பார்க்கலாம். இன்னும் கிராமங்களில் புரையோடிக் கிடக்கிற சாதிய ஏற்றத்தாழ்வுகளும், சாதியின் பெயரால் நடத்தப்படும் தீண்டாமையும், நிலமற்ற ஏழைகளாக இருப்பவர்களின் நிலங்கள் எல்லாம் எப்படி இல்லாமல் போனது என்பதையும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தங்கள் தேவைக்காக உதவி என்று போய் நின்றால் ஊரின் சிறு முதலாளிகள் எப்படியெல்லாம் உழைப்புச் சுரண்டல் செய்கிறார்கள் என்பதையும் காட்சிகளாகக் காணலாம்.

திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்படு கிறவர்கள் ஆஜானுபாகுவாக இருந்து அடியாட்களை அருகிலேயே வைத்துக்கொண்டு, அவர்களை ஏவி அடிக்க வைப்பது போன்று தான் பார்த்திருப்போம். ஆனால், எதார்த்த வாழ்வின் வில்லன்கள் சாதாரண உடல்வாகுவோடும், எண்ணங்களிலும், செயல்களிலும் எப்போதும் வன்மத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பண்ணாடிகள்  என்று இப்படத்தில் குறிப்பிடப்படுகிறவர் கள் ஒருமுறை கூட யாரிடமும் ஆவேச மாகவோ, கடுமை யாக பேசக்கூட மாட்டார்கள். நயமாக பேசி உழைப்பை சுரண்டிக்கொள் வதிலும், தங்கள் நலனை மைய மிட்டு எளியவர் களை பலி கொடுக்கவும், சூழ்ச்சி செய்து காரியம் சாதித்துக் கொள்ளவும் தயாராக இருப்பார்கள்.

கொங்கு மண்டல வட்டார வழக்கு மொழி வசனம் பேசுகிற படத்தில் எளிய மக்கள் எள்ளி நகையாடுகிற சொலவடைகள் படம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறது. இறுதியாய் சாக வேண்டியது வாய் பேசமுடியாத உயிரினங்கள் இல்லை, வன்மம் நிறைந்த மனிதர்களே என்ற ரீதியில் இயக்குநர் சுகவனம் முடிக்கிறார்.