கொரோனா காலத்தில் சாதாரண மனிதர் முதல் பிரபலங்கள் வரையிலான மரணங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதோடு, இறுதி நிகழ்வில் பங்கெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
தமிழர்களைக் கவிதைகளால் தட்டியெழுப்பியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவருடைய புதல்வர் மன்னர் மன்னன், ’கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ உள்ளிட்ட 50-க்கும் அதிகமான கவிதை, கட்டுரை, நாடக நூல்களை இயற்றி இருக்கிறார். தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். நம் நக்கீரன் குழும இலக்கிய இதழான ’இனிய உதயத்தில்’ பாவேந்தரைப் பற்றிய அரிய தகவல்களுடன் "நெருஞ்சி மலர்க் காட்டிடையே' என்ற ஒரு தொடரையும் எழுதினார். புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும், இலக்கிய நிகழ்ச்சிகளில் மன்னர்மன்னர் பங் கேற்றுவந்தார்.
92 வயதுடைய அவர் முதுமையின் காரணமாக ஜூலை 6ந் தேதி மரணமடைந்த போது, இலக்கிய உலகம் பேரிழப்பை உணர்ந்தது. புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அம்மாநில அமைச்சர்களும் இலக்கியவாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மன்னர் மன்னனின் நினைவு களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் ""பாரதிதாசனின் தோற்றத்தைப் பார்க்கும் வாய்ப்பை இழந்தவர் களுக்கு, அவர் மகன் மன்னர்மன்னன் தனது நறுக்கு மீசை, தலை சீவும் முறை, சால்வை என தன் அப்பாவின் பிம்பமாகவே அவர் இருந்தார். என் இளமைக் காலத்தில் பாரதிதாசனோடு இருந்த போது மன்னர்மன்னனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். மன்னர்மன்னனையும் ஒரு தேர்ந்த தமிழ்க்கவிஞராக ஆக்கவேண்டும் என்று பாரதி தாசன் விரும்பினார். மயிலம் தமிழ்க்கல்லூரியில் பணியாற்றிய, பழுத்த ஆன்மீகவாதியான புலவர் சுந்தர சண்முகனாரை அழைத்து, திருவிளையாடல் புராணத்தில் இருந்து பாடல்களைச் சொல்லிக்கொடுங்கள். விளங்கிக் கொள்ளவும் விளக்கிச் சொல்லவும் எளிதான அழகிய தமிழ்ப்பாடலுக்கு அதுதான் சரி என்று பாரதி தாசன் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. மன்னர்மன்னனின் மறைவு துயரத்தை ஏற்படுத்துகிறது. பாரதிதாசனின் வெளிவராத படைப்புகளை அவர் வைத்திருந்ததாகவும் அறிந்திருக்கிறேன். அவற்றை வெளிக்கொண்டு வருவதுதான் மன்னர்மன்னனுக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்'' என்றார்.
புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளரான பாலசுப்பிர மணியனோ “பாரதிதாசனுக்கு புதுவையிலும் தமிழகத்திலும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதுதான் மன்னர்மன்னனின் கனவாக இருந்தது’’ என்கிறார். மன்னர் மன்னனின் மகன்களில் ஒருவரான பாரதி, “பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது பாண்டியன் பரிசையும் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்ற ஆசை அப்பாவுக்கு இருந் தது’’ என்றார் கலக்கம் நீங்காமல். புரட்சிக்கவிஞரின் புதல்வர் கண்ட கனவுகள் எப்போது நிறைவேறுமோ?
-தமிழ்நாடன்