1991, ஜூன் 11-ஆம் தேதி, பேரறிவாளனின் வீட்டுக்கு காவல்துறையினர் வருகிறார்கள். "உங்கள் மகனை விசாரித்துவிட்டு காலையில் அனுப்பிவிடு கிறோம்' எனக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் மனித வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக்கொடுத்ததாகக் கூறப்பட்டு, தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ம் தேதி, பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட குற்றம்சாட்டப் பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது. பின்னர், 1999, மே மாதம் 11-ஆம் தேதி, சாந்தன், முருகன், பேரறி வாளன், நளினி ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு, மற்ற 19 பேரை விடுதலை செய்தது.
அதன்பின்னர், 2000 ஏப்ரல் 24-ம் தேதி, கலைஞரின் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்மூலமாக நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 2000, ஏப்ரல் 26-ம் தேதி, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினார்கள். ஆனால் 11 ஆண்டுகளாக கருணை மனுக்கள்மீது எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இருந்தன. குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், 2011, ஆகஸ்டில் மூவரின் கருணை மனுக்களையும் நிராகரித்தார். அதையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியானதிலிருந்து, தமிழகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்ட னையையும் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்துவந்தவர் வைகோ. தூக்குத்தண்ட னைக்கு மிகக்குறுகிய காலமே இருக்கும் சூழலில், மூவருக்கும் ஆதரவாக வாதாடுவதற் காக, இந்தியாவின் பிரபல மூத்த வழக்கறிஞ ரான ராம்ஜெத்மலானியை அழைத்துவந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடவைத் தார் வைகோ.
ராம்ஜெத்மலானி தனது வாதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக் கைகள் அனைத்தும் 1999-ம் ஆண்டி லேயே முடிவடைந்துவிட்டன. எனவே அதனைத் தற்போது மீண்டும் தொடர் வது சரியாக இருக்காது. தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட கருணை மனுக்கள் மீது 11 ஆண்டுகள், 4 மாதங்களாக எந்த முடிவும் எடுக் காமல் தாமதம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசு எந்த விளக்கத்தையும் கூற முடியாது. 5 முறை குடியரசுத் தலைவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பிறகும் கருணை மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கால தாமதமே இவர்களுடைய மரண தண்ட னையை ரத்து செய்வதற்கு அடிப்படையாகும். தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் சிறைச்சாலையிலேயே இருந்துவிட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் மிகவும் கடுமையான மன உளைச்சலுக்கும், பெருந்துயரத்துக்கும் ஆளாகியுள்ளார்கள். இப்போது திடீரெனத் தூக்குத் தண்டனை கொடுப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உணர்வுப்பூர்வ மாக எடுத்துவைத்தார்.
அதையடுத்து, 2011 ஆகஸ்டு 30-ல் தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானியும், யோக்முக் சௌத்ரியும் வாதாடி னார்கள். ஒவ்வொரு அமர்விலும் ராம்ஜெத்மலானி யுடன் வைகோவும் வழக்கில் ஆஜரானார். உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், கருணை மனுக்கள்மீது முடி வெடுக்க கால தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, சந்தன வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதையே உதாரணமாகக் காட்டி, மூவரின் தூக்குத்தண்டனையையும் ரத்து செய்யக்கோரி வாதாடப்பட்டது.
வழக்கு விசாரணையின் இறுதியில், தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்வதாக 2014, பிப்ரவரி 18-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் தொடர்ச்சியாகவே தற்போது பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு வெளியாகி யிருக்கிறது. மூவ ரின் கழுத்துக்கு வந்த தூக்குக் கயிறு அகற்றப் பட்டதில் ராம் ஜெத்மலானி, வைகோ இருவ ருக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு. "நான் வைகோவின் நீண்ட கால நண்பன். தற்போது அவர் மூலமாக தமிழ் மக்களுக் கும் நண்பனாகியிருக்கிறேன்'' என்று வைகோவுட னான நட்பு குறித்து ராம்ஜெத்மலானி பெருமிதத் துடன் கூறியிருந்தார்.
பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள் ளது குறித்து வைகோ தனது அறிக்கையில், "மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவிப்பு வெளியானபோது, ராம்ஜெத்மலானியை சென்னைக்கு வரவழைத்து வாதாடவைத்து தூக்குத்தண்டனைக்கு தடையாணை பெற்றதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், இப்போது, உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைவதாகவும், பேரறிவாளனைப் போலவே மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்' என்று மூவர் விடுதலையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த தோழர் செங்கொடியின் நம்பிக்கையான வார்த்தைகள் நம் நினைவுக்கு வருகின்றன.
-ஆதவன்