"ஜனவரி மாத கடைசியில் தேர்தலுக்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம், தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அழைத்த 12-ஆம் தேதியிலேயே விசாரணைக்கு ஆஜராவோம்'' என விஜய் கூறியதன்பேரில் அவசர அவசரமாக டெல்லியில் தங்கும் விடுதியை "புக்' செய்துவிட்டு விசாரணைக்காக ஆஜராகப் புறப்பட்டார் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்.
குற்றம் நடந்தவிதம், குற்றம் தொடர்பான விஷயங்கள் அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்பதால் பி.என்.எஸ்.எஸ்.79’ பிரிவின்கீழ் "விட்னஸ் சம்மனை' அனுப்பியிருந்தது சி.பி.ஐ. எனினும், வழக்கம்போல் "விஜய் புறப்பட்டுவிட்டார். கறுப்பு உடையில் இருக்கின்றார். தோளில் "பேக்' ஒன்று இருக்கின்றது. இதோ...! அதோ...!'' என சி.பி.ஐ. விசாரணையின்போதும் அவருக்கு ஆதரவான தொலைக்காட்சிகள் போக்குக் காட்டின.
விஜய் டெல்லி செல்லும்போது இலவச இணைப்பாய் நிர்மல்குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமென கட்சிசார்பாக டெல்லி காவல்துறையிடம் கோரிக்கை வைத்திருந்ததால், "விஜய் விசாரணைக்காக லோதி சாலையில் இருக்கும் சி.ஜி.ஓ. காம்ப்ளக்ஸ் செல்லும் வழி, தங்கும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
அதுபோக விஜய்க்கு 'வ' பிரிவு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்தது. இதேவேளையில், தமிழக ஆயுதப்படை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் ஜோஷி நிர்மல்குமார் ஆகி யோரும் சி.பி.ஐ. விசாரணைக்காக அந்நாளில் அங்கிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் சரியாக 11 மணிக்கு விஜய் ஆஜராக, ஸ்பெஷல் ஆபீஸர் அந்தஸ்திலுள்ள அதிகாரி விஜய்யிடம் விசா ரணையைத் தொடங்கினார். அப்போதைய நேரம் காலை 11.15 மணி. விஜய்க்கு 90 கேள்விகள் அடங்கிய ஒரு எழுத்துப்பூர்வ புத்தகப் படிவம் வழங்கப்பட்டது. அவர் அளித்த ஒவ்வொரு பதிலும் சி.பி.ஐ. ஸ்டெனோகிராபர் மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டது. பின்னர் விஜய் அவற்றைச் சரிபார்த்து கையொப்பமிட்டு உறுதி செய்தார்.
சி.பி.ஐ.: கரூர் கூட்டத்திற்கு நீங்கள் திட்டமிட்ட நேரத்தை விடுத்து, தாமதமாக வந்தது ஏன்?
விஜய்: அன்றைய பயணத் திட்டம் மற்றும் பாதுகாப்பு காரணமாக நேரம் மாறியது.
சி.பி.ஐ.: கூட்டம் தொடங்கவேண்டிய நேரத்துக்கும், நீங்கள் வந்த நேரத்துக்கும் இடையிலான இடைவெளியில் என்ன செய்தீர்கள்?
விஜய்: அந்த இடைவெளியை விளக்கி, அந்த காலகட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சி நிர்வாகம் கையாண்டது.
சி.பி.ஐ.: உங்கள் தாமதம் காரணமாக கூட்டம் அளவுக்குமீறி அதிகரித்ததா?
விஜய்: கூட்டம் அதிகரித்தது உண்மை. அதற்கான கூட்ட மேலாண்மை ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சி.பி.ஐ.: நுழைவு, வெளியேறும் பாதைகள், தடுப்புகள், குடிநீர், மருத்துவ வசதிகள் யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?
விஜய்: இந்த ஏற்பாடுகள் த.வெ.க. மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செய்யப்பட்டது.
சி.பி.ஐ.: இந்த நிகழ்ச்சிக்கான போலீஸ் அனுமதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு யாரின் பொறுப்பு?
விஜய்: அனைத்து அனுமதிகளும் கட்சி நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டது.
சி.பி.ஐ.: உங்கள் பிரச்சார வாகனங்களின் நகர்வு கூட்ட நெரிசலை அதிகரித்ததா?
விஜய்: வாகன இயக்கம் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் திட்டமிட்ட வழித்தடத்திலேயே நடந்தது.
சி.பி.ஐ.: கூட்டநெரிசல் ஏற்பட்டபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்ன தகவல் கிடைத்தது?
விஜய்: சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கட்சித் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது
சி.பி.ஐ.: சம்பவம் நடந்த அதே இரவே நீங்கள் சென்னை திரும்பியது ஏன்? அந்த முடிவு யாருடையது?
விஜய்: பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஆலோசனையின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
சி.பி.ஐ.: இந்த நிகழ்ச்சியின் முழு நிர்வாகப் பொறுப்பு யாருக்கு?
விஜய்: நிகழ்ச்சி ஏற்பாடு த.வெ.க. நிர்வாகத்தின்கீழ் நடந்தது; ஆனால் அதிகாரப்பூர்வ அனுமதிகள் அரசு இயந்திரத் துடன் இணைந்து பெறப்பட்டன.
இந்த நிலையில், "இச்சம்பவத்தில் அரசியல் பின்புலம் இருக் கின்றதா? யார் அது? எப்படி அதன்மீது குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்? என விஜய்யை நோக்கி கேள்வி வைக்க, சிறிது அமைதி காத்து "இல்லை... உயிரிழந்த 41 குடும்பத்தினரையும் தனித்தனியே சந்தித்தேன். கூட்ட நெரிசலின்போது "தங்களை யாரோ முதுகில் கையைவைத்து அழுத்தி தள்ளியதாக'க் கூறினார்கள். அதுபோக பலருக்கு முதுகினில் கத்தியால் கீறியது போல் காயங்கள் இருந்த தாகவும் தெரிவித்தார்கள். போலீஸிற்கும் தெரியும்'' என்றிருக்கிறார் அவர்.
"இதனை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்களேன்'' என சி.பி.ஐ. கேட்க,
"இல்லையில்லை மக்கள் கூறியதைக் கூறினேன்'' என்றிருக்கிறார்.
"நீங்கள்தானே, காவல்துறை மிகுந்த பாதுகாப்பு கொடுத்திருக்கின்றது... நன்றி என்றீர்கள்?''” என சி.பி.ஐ. மடக்க,
"இல்லையில்லை. வழக்கமாகக் கூறுவதைத்தான் கூறினேன்'' என்றார் அவர். சி.பி.ஐ.யின் கிடுக்குப்பிடி கேள்விகளால் திணறிய விஜய், இடையிடையே அங்கிருந்த தண்ணீரையும் குடித்து ஆசுவாசப் படுத்திக்கொண்டார். இந்த நிலையில், விஜய்யின் திணறலைக் கண்ட சி.பி.ஐ., "சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்'' எனக்கூற, “"இல்லையில்லை... இங்கேயே இருக்கிறேன்'' என்றார். ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே இருந் திருக்கிறார் அவர்.
இதனிடையே மறுபக்கம், செய்தி யாளர்களைச் சந்தித்து சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கி பேட்டியளித்தது தொடர்பாக தமிழக ஆயுதப்படை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்தினை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மேற்கொண்டு உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்தது குறித்து, அப்போதைய திருச்சி மத்திய மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தவரும், தற்போதைய சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் ஜோஷி நிர்மல்குமாரும் விசாரணையில் கூறியிருக்கின்றனர்.
பின்பு விஜய்யிடம், "பொங்கல் முடித்து வாங்க. அடுத்து விசாரணையைத் தொடங்குவோம்'' என சி.பி.ஐ. கூற, “"தங்கும் விடுதியை புக் செய்துவிட்டோம். மொத்தமாக விசாரணையை முடித்துவிடுங்களேன்'' என விஜய் தரப்பு கேட்க...
"இல்லையில்லை, வருகின்ற 19-ஆம் தேதி வாருங்கள். அதற்குள் சம்மனை அனுப்பு கிறோம்'' என்றுள்ளது சி.பி.ஐ. எனினும், "என்ன கேள்வி கேட்டார்கள்? நாம் என்ன பதில் சொன்னோம்? சி.பி.ஐ.க்கு நம் பதில் மூலம் ஏதாவது பிடி கொடுத்துவிட்டோமா?'' என்கிற மண்டைக் குடைச்சலுடனே சென்னை வந்தடைந்தார் விஜய்.
"விஜய்யின் பதிலை வைத்தும், காவல்துறையின் பதிலை வைத்தும் விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது பா.ஜ.க.' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
__________
எங்க வீட்டு பிள்ளையால் ஜனநாயகனுக்கு சிக்கல்!
நடிகர் விஜய் நடித்த "ஜனநாயகன்' திரைப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் இருப்பதாகக் கூறி தணிக்கைக்குழு சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில்... தற்போது புது சிக்கலில் இப்படம் மாட்டியிருக்கிறது. 1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில், சாணக்யா இயக்கத்தில், விஜயா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது "எங்க வீட்டு பிள்ளை' திரைப்படம். பட்டி தொட்டியெங்கும் அனைவராலும் விரும்பிப்பார்க்கப்பட்ட இப்படத்தில், எம்.ஜி.ஆர். சவுக்கை சுழற்றி நம்பியாரை அடிக்கும் காட்சி பலராலும் பேசப்பட் டது. அதுபோன்ற காட்சியை "ஜனநாயகன்' படத்தில் வைத்ததோடு, "எங்க வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் இடம்பெறும் அதே பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளது "ஜனநாயகன்' படக்குழு. அப்பாடலை பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை. மரியாதைக்காக கூட நன்றி தெரிவிக்கவில்லை. எனவே இதனை கண்டிப்பதாகக் கூறி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதத்தை அனுப்பியிருக்கிறது மறைந்த பி.நாகிரெட்டி மற்றும் சக்ரபாணியின் விஜயா ஃபிலிம்ஸ் நிறுவனம். இதனால் "ஜனநாயகன்' படம் மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/vijay-2026-01-14-16-37-54.jpg)