டெல்லியை ஒட்டியது அரியானா வின் குண்ட்லி. அதை சார்ந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது சிங்கு எல்லை.
பொதுவாக இரண்டு தேசங்களைப் பிரித்து வைக்கும் கோடுகளைத்தான் எல்லை என்று அழைப்பார்கள். சீன எல்லை, பாகிஸ்தான் எல்லை, பங்களாதேஷ் எல்லை என்பதைப் போல இப்பொழுது, சிங்கு எல்லை, டிக்கிரி எல்லை, காஜ்ப்பூர் எல்லை போன்ற புதிய பெயர்கள் வந்துவிட்டன. அர சாங்கம் எல்லை போட்டு ராணுவவீரர்களை நிறுத்தி பிரித்து வைத்துவிட்டது. மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்து, பிரித்து வைத்து, பிரிவினையை யார் உருவாக்கு கிறார்கள்? அரசாங்கமா? மக்களா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை முன் வைத்தே எனது பயணம் சிங்கு எல்லையை நோக்கி செல்கிறது.
சென்னையிலிருந்து அவசரம் அவசரமாக டெல்லி விமானத்தைப் பிடித்து, பயணச் செலவு அதிமாகிவிடக் கூடாது என்பதால், டெல்லியில் மெட்ரோ ரயில் ஏறி, ஜாஹாங்கீர்பூர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து சிங்கு எல்லைக்கு ஷேர் ஆட்டோ பயணம். ஆறு பேர் மூட்டை முடிச்சுகளுடன் திணித்து வைக்கப்பட்டதால் ஆட்டோ மூச்சு விட முடியாமல் திணறியது. ஆனாலும் பயணத்தைத் தொடர்ந்தது.
டெல்லியும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் மிகவும் வேறுபட்டவை. மொழி அறியாதவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் சிரமத்தைக் கொடுத்து விடுகிறது. வித்தியாசமான ஆட்டோப் பயணத்தில் சில மனிதர்கள் பிடித்துப் போனார்கள். அவர்களும் சிங்கு எல்லை போராட்டம் தொடர்புடையவர்களாக இருக்கலாம். புதிய மனிதர்களிடம் வேறுபாடு கொள்ளாது அவர்களின் சிரமங்கள
டெல்லியை ஒட்டியது அரியானா வின் குண்ட்லி. அதை சார்ந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது சிங்கு எல்லை.
பொதுவாக இரண்டு தேசங்களைப் பிரித்து வைக்கும் கோடுகளைத்தான் எல்லை என்று அழைப்பார்கள். சீன எல்லை, பாகிஸ்தான் எல்லை, பங்களாதேஷ் எல்லை என்பதைப் போல இப்பொழுது, சிங்கு எல்லை, டிக்கிரி எல்லை, காஜ்ப்பூர் எல்லை போன்ற புதிய பெயர்கள் வந்துவிட்டன. அர சாங்கம் எல்லை போட்டு ராணுவவீரர்களை நிறுத்தி பிரித்து வைத்துவிட்டது. மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்து, பிரித்து வைத்து, பிரிவினையை யார் உருவாக்கு கிறார்கள்? அரசாங்கமா? மக்களா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை முன் வைத்தே எனது பயணம் சிங்கு எல்லையை நோக்கி செல்கிறது.
சென்னையிலிருந்து அவசரம் அவசரமாக டெல்லி விமானத்தைப் பிடித்து, பயணச் செலவு அதிமாகிவிடக் கூடாது என்பதால், டெல்லியில் மெட்ரோ ரயில் ஏறி, ஜாஹாங்கீர்பூர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து சிங்கு எல்லைக்கு ஷேர் ஆட்டோ பயணம். ஆறு பேர் மூட்டை முடிச்சுகளுடன் திணித்து வைக்கப்பட்டதால் ஆட்டோ மூச்சு விட முடியாமல் திணறியது. ஆனாலும் பயணத்தைத் தொடர்ந்தது.
டெல்லியும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் மிகவும் வேறுபட்டவை. மொழி அறியாதவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் சிரமத்தைக் கொடுத்து விடுகிறது. வித்தியாசமான ஆட்டோப் பயணத்தில் சில மனிதர்கள் பிடித்துப் போனார்கள். அவர்களும் சிங்கு எல்லை போராட்டம் தொடர்புடையவர்களாக இருக்கலாம். புதிய மனிதர்களிடம் வேறுபாடு கொள்ளாது அவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ளும் பார்வை அவர்களிடம் இருந்தது.
காலை 11 மணி என்ற போதிலும் சுற்றியிருப்பவை மங்கலாகக் காணப்படுகிறது. மக்கிய பொருட்களின் நாற்றம், குடலைப் புரட்டுகிறது. இருபுறமும் மலைகள் இருப்பதைப் போலத் தெரிகிறது. அனைத்தும் குப்பை மேடுகள். அழகிய பொருட்கள் நிறைந்த அந்தக் குப்பைமேடுகள் எல்லாமும் கார்ப்பரேட் வாழ்க்கையில் அதன் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, அதனால் குவிந்த குப்பைகள். வானுயர்ந்து நிற்கும் இவை சென்னைக் கொடுங்கையூர் குப்பை மேட்டை ஞாபகப்படுத்துகிறது. மனதுக்குள் ஒருவித கசப்பு.
மங்கலாக சாம்பல் நிற சுற்றுப்புறத்தில் மேலும் ஒரு சிறிய சாம்பல் நிறம் சிறகடித்துப் பறப்பதைப் போலத் தெரிகிறது. உற்றுப் பார்க்கிறேன். புறாக்கள் கூட்டம். மசூதிகளும் குருத்துவாராக்களும் ஆலயங்களும் நிறைந்த டெல்லியில், எல்லா இடங்களிலும் புறாக்களுக்கு பஞ்சம் இல்லை. ஏதோ இங்கு, இந்த வழிபாட்டுதலங்களில் ஒன்று இருக்க வேண்டும். புறாக்கள் அமைதியின் குறியீடு. எனக்கு விபரம் தெரிந்த பள்ளி பருவத்தில் நேரு இந்தியாவின் பிரதம மந்திரி. அவரையும் அவரோடு இணைந்த டெல்லியையும், டெல்லியின் அமைதிப் புறாக்களையும் பாடப்புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். டெல்லியின் குப்பை மேடு தந்த கசப்பு மறைந்து, புறாக்கள் பற்றிய நினைவில் கொஞ்சம் மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த உணர்வு அதிக நேரம் நீடிக்கவில்லை.
கலகலப்பாகவும் உற்சாகமாகவும் ஓடி வந்த ஆட்டோ ஒரு இடத்தில் மௌனமாகி நின்றுவிடுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். முள் கம்பிகள் கண்ணுக்குத் தெரிகின்றன. மனித நடமாட்டங்கள் முழுமையாகக் கண்காணிக்கப்படும் ஒரு பிரதேசம். கான்கிரிட் கட்டைகளால் அமைக்கப்பட்ட வரிசையாக மூன்று அடுக்கு தடைகள். சிறிது தூரத்தில் மிக உயரத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட, கண்காணிப்பு கோபுரம். பெரும் எண்ணிக்கையில் ராணுவ வாகனங்கள். சிறிய எண்ணிக்கையில் வாட்டர் கேன் வாகனங்கள். இயந்திரத் துப்பாக்கிகள் சூழ அச்சசுறுத்தி நிற்கிறது சிங்கு பார்டர். இதுவரை நான் நம் நாட்டின் எந்த எல்லைப்புறத்தையும் பார்த்ததில்லை. தைரியமானவர்களை கூட கொஞ்சம் அச்சுறுத்தி தான் பார்க்கிறது.
இப்பொழுதெல்லாம், எந்தப் போராட்டம் நடந்தாலும் வாட்டர் கேனன் வாகனம் முன் வரிசைக்கு வந்து குறிபார்த்து நிற்கிறது. பனிக்கட்டிகள் தரையில் விழும், குளிர் மிகுந்த காலங்களை போர்குணம் கொண்ட மக்களை அச்சுறுத்தி வைக்க முதன் முதலில், ஹிட்லர் வாட்டர் கேனன் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் மோடி அரசும் குளிர் காலங்களில் போராடும் மக்களை விரட்டி அடிக்க வாட்டர் கேனன்களைப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாட்டர் கேனன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் கோடு கிழித்து போட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தைக் கடந்து விவசாயிகளின் சிங்குப் பிரதேசத்திற்குள் நுழைகிறேன். நான் அங்கு போய் சேர்ந்த நாள் ஜனவரி 13. அன்று தமிழ் மக்களுக்கு போகிப் பண்டிகை. பஞ்சாப் மக்களும் ஒரு கொண்டாட்டத்தில் இருந்தார்கள். குளிர் மிகுந்த அந்த மாலை நேரத்தில் தீ மூட்டி அதை சுற்றி சுற்றி வந்து ஆண்களும் பெண்களும் நடனமாடிக் கொண்டி ருக்கிறார்கள். லோடி என்பது பஞ்சாபிய மக்கள் சூரியனை மையமாகக் கொண்டு வழிபாடு நடத்தும் திருவிழா. இவர்கள் முன்னோர்கள் அறுவடை முடித்து தானியங்களை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்ட அந்த புராதன மகிழ்ச்சி இன்று இவர்கள் முகத்தில் தெரிகிறது. காலங்கள் மாறிக் கொண்டே இருந் தாலும், தங்கள் முன்னோர்களின் கொண்டாட்டம் இவர்களிடம் இன்னமும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது நமது பொங்கலைப் போல.
சிங்கு எல்லையில் லோடி விழா விவசாயிகளின் கோரிக்கையும் மோடியின் எதிர்ப்பையும் தன்னோடு இணைத்துக் கொண்டு விட்டது. புது புது முழங்களோடு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டேயிருக்கிறார்கள். பலர் டிராக்டர் களில் லோடியையும் போராட்டத்தையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இது போராட்டக் களமா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. நின்று நிதானித்து ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன். ஒவ்வொன்றும் அதனதன் எல்லைக் குட்பட்டு தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து செயல்பாட்டிலும் ஒருவித ஒருமை தெரிகிறது. இதுதான் போராட்டம் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான உயிர்ப்பைத் தந்து கொண்டி ருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன்.
நாள் முழுவதும் அலைந்து களைத்து போன உடல் ஓய்வுக்கு, ஒரு டெண்ட் கிடைக்கிறது. ஒருவர் மட்டும் தங்கிக்கொள்ளும் வசதி கொண்டது. வெட்டவெளியில் ஏழடி அடி நீளம், நான்கடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளளது டெண்டு, சிரமப்பட்டு டெண்டில் நுழைகிறேன். கை, கால்களை கூட நீட்ட முடியாமல் இருக்கிறதே என்ற ஒரு சிறு நெருடல் ஏதாவது மனதுக்குள் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்கிறேன். அப்படி எதுவுமே இல்லை. அதுதான் போராட்டங்கள், நம்மை அறியாமல் நம்மிடம் கட்டி எழுப்பியுள்ள மன வைராக்கியம்.
எப்படித் தூங்கினேன்? எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது உடல் கடும் குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கை, கால்களை அசைக்க முடியவில்லை. மெதுவாக கையுறைகளை அகற்றி செல்போனை திறந்து பார்க்கிறேன். அதிகாலை மணி நான்கு. குளிர் மூன்று டிகிரிக்கு கீழே சென்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தவுடன் குளிரின் கொடுமையை கூடுதலாக உணர்கிறேன்.
டெண்டுக்கு அருகில் நெருப்பு மூட்டி, சிலர் அமர்ந்திருப்பதை பார்க்கிறேன். குளிர் தாங்க முடியாமல் டெண்டை விட்டு வெளியே வந்து அங்கு செல்கிறேன். நடக்க முடியாதவாறு உடல் நடுக்கம். கதகதப்பான வெப்பம் நோக்கி செல்கிறேன். குளிர் நடுக்கத்தை கொஞ்சம் குறைக்கிறது தீயின் அனல். .
ஆங்கிலமும் இந்தியுமாக தட்டுத்தடுமாறி அவர்களிடம் பேசத் தொடங்குகிறேன். பேச்சு எங் கெங்கோ சென்று ஒரு இடத்திற்கு வந்து சேருகிறது. முடிவில் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இது என் மனதில் சில நாட்களாக புகைந்து கொண்டிருந்த கேள்வி தான். “சில மாதங்களாக நடைபெறுகிறது போராட்டம். விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வீர்கள்’’என்பதுதான் கேள்வி.
கேள்வியை மிக சர்வ சாதாரணமாக நான் கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கு எனக்கு கிடைத்த பதில் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. நான் இவ்வாறான பதிலை எதிர்பார்க்கவில்லை.
(புரட்சிப் பயணம் தொடரும்)