கவர்னர் மாளிகையில் நடந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி ஏற்பு விழாவில், நீதிபதிகளுக்கு பின்வரிசை இருக்கை ஒதுக்கியதில் ஏற்பட்ட மனக்கசப்பை நீதிபதி ரமேஷ் கவர்னர் மாளிகைவரை கொண்டுசென்றார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது.
குளறுபடிகளுக்கு காரணமான கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., "இதுபற்றி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடலாம்' என கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஆலோசனை சொன்னார். டென்ஷனான கவர்னர், ""உங்களின் ஆலோசனை எனக்கு வேண்டாம். நானே இதை நேரடியாக டீல் செய்து கொள்கிறேன்'' என தொலைபேசியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசினார்.
வருத்தம் தெரிவித்த கவர்னர், "சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும்' என வேண்டுகோள் வைத்தார். அத்துடன், செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.ஸை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு சுதந்திரதின மாலைநேர தேநீர் விருந்துக்கான அழைப்பிதழை கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பி வைத்தார் என்கிறது கவர்னர் மாளிகை வட்டாரம்.
தலைமை நீதிபதி தஹில் ரமணியை, ராஜகோபால் சந்தித்தபோது, பல கேள்விகளை எதிர்கொண்டார். ""நீதிபதிகள் பின்னிருக்கையில் இருக்கும் போது அவர்களுக்கு முதுகு காட்டிக்கொண்டு நாங்கள் அமர முடியாது. மரபு மற்றும் மரியாதைப்படி அது தவறு என போலீஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள்'' என செய்திகள் வருகின்றன. உயர்நீதிமன்றத்தில் மரபு மற்றும் மரியாதையை கவனிக்க ஒரு ரெஜிஸ்டிரார் இருக்கிறார். கவர்னர் மாளிகையிலும் மரபு மற்றும் மரியாதையை கவனிக்க ஒரு அதிகாரி இருக்கிறார்.
இதனை மீறி இந்த தவறு நடந்ததற்கு யார் காரணம் என நீதிபதி ரமேஷ் எழுதிய கடிதத்தில் இருந்த விஷயங்களே கேள்விகளாக வெளிப்பட்டன என்கிறது உயர்நீதிமன்ற வட்டாரம்.
ஒருவழியாக தலைமை நீதிபதிக்கு சுதந்திரதின தேநீர் விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வந்த ராஜகோபால், மற்ற நீதிபதிகளுக்கு கவர்னர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சரவணன் மூலம் அழைப்பிதழ் அனுப்பிவைத்தார்.
அழைப்பிதழை பெற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் தங்களது இருக்கைகளில் ஏற்பட்ட அவமானத்தை பற்றி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் தஹில் ரமணி ""சுதந்திர தின தேநீர் விழா நான் கலந்து கொள்ளும் முதல் விழா. பதவியேற்பு விழாவில் நடந்த இருக்கை பிரச்சினைகள் இங்கு வராது என கவர்னர் மாளிகை சொல்லியுள்ளது. எனவே நான் இந்த விழாவிற்குப் போகிறேன். இந்த விழாவிற்கு நீங்கள் வருவதும் வராததும் உங்கள் விருப்பம்'' என்றார்.
மொத்தம் அறுபத்துமூன்று நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள் தவிர மற்ற யாரும் இந்த விழாவில் கலந்துகொள்ளாமல் புறந்தள்ளினர். நீதிபதிகளுக்கான முன்வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கைகள் காலியாகவே இருந்தன.
"" "சேஞ்ச் இந்தியா' என்கிற அமைப்பைச் சேர்ந்த "பாடம்'நாராயணன், "பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமித்ததில் முறைகேடு நடந்துள்ளது' என கவர்னர் மாளிகைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இப்போதைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது'' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இதுபற்றி நம்மிடம், ""கவர்னருடைய தேநீர் விருந்தில் நீதிபதிகள் கலந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது நியாயமானது. நீதிபதிகள் பல கிரிமினல் வழக்குகளை விசாரிக்கிறார்கள். அதில் பல போலீசாருக்கு எதிரான வழக்குகளாகத் தான் வரும். பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே வரும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த நீதியரசர்களை, போலீஸாருக்குப் பின்னால் அமரவைப்பது சட்டப்படியே தவறு'' என்கிறார்.
முரண்பாடுகளுக்கு பெயர் பெற்றுள்ள ஆளுநர் மாளிகையில், கவர்னரின் செயலாளர் ராஜகோபால் தொடங்கியுள்ள புதிய மோதல் எங்கு போய் முடியுமோ என்பதை கவலையுடன் குறிப்பிடுகிறார்கள் நடுநிலையாளர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ஸ்டாலின்