போதும் போதும்! எல்.ஜி.குடும்பம்!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது கண்ணந்தங்குடி கீழையூர் ஊராட்சி. 1967—லிருந்து 2014 வரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் எல்.கணேசன். எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி போனாலும் உள்ளூர்த் தலைவர் பதவிக்கு இருக்கும் மரியாதையே தனி என்பார் எல்.ஜி. 2011-ல் இவர் எம்.பி.யாக இருந்தபோது, இரட்டைப் பதவி முறைக்கு தடை அமல்படுத்தப்பட்டதால் தனது மனைவி கமலாவை இந்த ஊராட்சியின் தலைவராக்கினார் எல்.ஜி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்ததால், அவ்வூர் மக்களும் எல்.ஜி. குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனால் இந்த முறையோ எல்.ஜி. குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டி யிடாததால் மும்முனைப் போட்டி நிலவியது. இது குறித்து எல்.ஜி.யின் மகன் அண்ணாவிடம் கேட்ட போது ""இந்த ஊர்மக்கள்தான் நாங்கள் சம்பாரித்த சொத்து. ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லாததாலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும்தான் எங்கள் குடும்பத்தினர் போட்டியிடவில்லை'' என்றார்.

Advertisment

-இரா.பகத்சிங்

lb

அ.தி.மு.க. மா.செ.வுக்கு எதிராக சீற்றம்!

தூத்துக்குடி அ.தி.மு.க. தெற்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதனிடம் ஏரல் அருகே இருக்கும் கிராம ஊராட்சித் தலைவி பதவிக்கு சீட் கேட்டிருந்தார் சரஸ்வதி என்பவர். முதலில் சரி என சொன்ன சண்முகநாதன், கடைசி நேரத்தில் மணி என்பவரின் மனைவிக்கு சீட்டைக் கொடுத்துவிட்டாராம். இதனால் டென்ஷனின் உச்சத்திற்குப் போன சரஸ்வதி, நேராக பண்டாரவிளையில் இருக்கும் சண்முகநாதனின் வீட்டு முன்பாக நின்று கொண்டு, வார்த்தைகளால் வெளுத்துக்கட்டிவிட்டாராம். அந்த சரஸ்வதி போகும் வரை வீட்டைவிட்டு வெளியில் வரவில்லையாம் சண்முகநாதன்.

ஜெயிச்சா கார் கிஃப்ட்!

ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தின் சேர்மனாகிவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் வீரபாண்டியபுரம் கோபி. ஸ்டெர்லைட் காண்ட்ராக்ட் மூலம் சில கோடிகளை குவித்து, ம.தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்தவர்தான் இந்த கோபி. சேர்மனாக வேண்டும் என்றால் 4 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்பதால், கார் கிஃப்ட் என அறிவித்து கிறுகிறுக்க வைத்துள்ளார் கோபி.

நமக்கு மட்டும்தான்!

ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய சேர்மன் பதவிக்கு தனது குடும்பத்திலிருந்து யாராவது ஒருத்தர்தான் வரவேண்டும் என்று காய் நகர்த்தியிருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகையா. அது எப்படின்னா, ஏற்கனவே சேர்மன் பதவியிலிருந்த தனது மனைவி சுகிர்தாவை 15—ஆவது வார்டிலும், சகோதரி ஜெயலட்சுமியை 16-ஆவது வார்டிலும், இன்னொரு சகோதரி முத்துலட்சுமியின் மகன் சண்முகையாவை 14-ஆவது வார்டிலும் கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தியுள்ளார் எம்.எல்.ஏ. சண்முகையா.

Advertisment

தி.மு.க.வில் கடும் போட்டி!

இடைத்தேர்தலில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சீட்டைப் பறிகொடுத்தோம். ஆனா இப்ப யூனியன் சேர்மன் பதவியை பிடித்தே ஆகணும் என்ற கணக்கோடு செழிப்பான முனியசாமியையும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான இமானுவேலையும் களம் இறக்கியுள்ளது தி.மு.க. ஜெயித்தபின் கவுன்சிலர்களை வளைக்க 10 "எல்' மற்றும் இதரச் செலவுகள் எல்லாம் சேர்த்து 1 "சி' கணக்குப் போட்டுள்ளார் முனியசாமி. "நாங்களும் கொடுப்போம், எங்ககிட்டயும் பணம் இருக்கு' என கோதாவில் குதித்திருக்கிறார் 13-ஆவது வார்டில் போட்டியிடும் இமானுவேல். "ஏம்பா... கிழக்கு ஒன்றியச் செயலாளரான நான் ஒருத்தன் இருக்கேன்பா' என்கிறார் சின்ன மாரிமுத்து.

-பரமசிவன்

குமுறும் அரசு ஊழியர்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களான அரசு ஊழியர்களுக்கு கடந்த டிச.15 மற்றும் 22 தேதிகளில் பயிற்சி வகுப்பு நடந்தது. 22-ஆம் தேதி பயிற்சி வகுப்பு முடிந்ததுமே, தேர்தல் அலுவலர்கள் வாக்களிப்பதற்காக தபால் வாக்குப் படிவம் தரப்பட்டிருக்க வேண்டும். அப்போது அவர்கள் கேட்டதற்கு "தபால் வாக்குச்சீட்டு இன்னும் அச்சடிக்கவேயில்லை' என சமாளித்திருக்கிறார்கள். இப்போது தேர்தல் நாள்வரை தபால் வாக்குச் சீட்டு தராததால் 29,367 அரசு ஊழியர்களின் வாக்கு என்னாகப் போகிறதோ?

-து.ராஜா

பாட்டில் உனக்கு; ஓட்டு எனக்கு! சுயேச்சை டீல்!

விருதுநகர் அருகிலுள்ள துலுக்கபட்டியில், 8-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார், சுயேட்சை வேட்பாளரான பொன்னுப் பாண்டியம்மாள். இவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சங்கர் என்பவர், வாக்காளர்கள் சிலரின் தேவையறிந்து, மது பாட்டில்கள் விநியோகம் செய்துள்ளார். பலவீனமான போதை ஆசாமிகள், மது மயக்கத்தில் பாட்டிலின் மீதுள்ள விசுவாசத்தால், வாக்குகளைப் பொன்னுப் பாண்டியம்மாளுக்குப் போட்டு விடுவார்களோ என்ற சந்தேகத்தில், அதே வார்டில் போட்டியிடும் ஒருவர், தேர்தல் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து விட, வச்சக்காரப்பட்டி போலீசார் சங்கரைக் கைது செய்து, அவர் வைத்திருந்த 35 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

-ராம்கி

சரக்கு எலெக்ஷன்!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ஐந்து நாட்களுக்கு அரசு மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு வழங்க வேண்டி, மதுபான பாட்டில்களை பண்டல் பண்டலாக புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வருகிறார்கள். வேப்பந் தட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவரை விழுப்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் முன்னெச்சரிக்கையாக மதுபாட்டில்கள் வாங்கும் கூட்டம் அலைமோதுகிறது. செந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் நடுவில் மதுபாட்டில் பண்டல் வைத்துக் கொண்டு இருவர் டூவீலரில் பறக்கிறார்கள். ஒருபக்கம் பரபரப்பாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான செயலில் ஈடுபடுகிறார்கள். மது பாட்டில்களை வயிற்றில் சொருகி வைத்துக்கொண்டு டூவீலரில் சென்று விபத்தில் மோதி மதுபாட்டில் வயிற்றில் குத்தி இறந்து போனவர்கள் பலர். இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.

-எஸ்.பி.சேகர்

ff

ப.சி.க்கு எதிராக எக்ஸ் எம்.எல்.ஏ.!

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவருக்கு ப.சிதம்பரமும், எதிர்ப்போ ருக்கு ப.சி.யின் நெருங்கிய ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரமும் ஆதரவு கொடுத்தது அதிர்வலைகளை உண்டாக்கி யுள்ளது.

கட்சியில் நீண்டகாலமாக இருப்பவர் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி. இப்பொழுது அப்பதவிக்கு தன்னு டைய மனைவியை வேட்பாளராக்கி யுள்ளார். இவருக்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஆதரவிருக்க, அவருக்குப் போட்டியாக, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அய்யப்பன் என்பவரது மனைவியை வேட் பாளராக்கியுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம்.

இது தொடர்பாக ப.சி. வாய் திறக்காத நிலையில், திடுமென சனிக்கிழமையன்று சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் தேவிமாங்குடிக்காக பிரச்சாரம் செய்த ப.சி.., "இங்கு சொந்தத்திற்கும் இடமில்லை, பார்ட்னருக்கும் இடமில்லை'’என முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்தையும், தற்போதைய எம்.எல்.ஏ. கே.ஆர் .ராமசாமியையும் (எதிர் வேட்பாள ரின் உறவினர்) ஒரு பிடி பிடித்தவர், "இந்த தேர்தல் சட்டமன்ற, நாடாளு மன்றத் தேர்தல் இல்லை. உள்ளாட் சித் தேர்தல் என்பது நாம் தேர்வு செய்பவர்கள் நம்முடைய தேவை யை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும். திடீர் என ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் சங்கரா புரத்தை காப்பாற்றுவேன் என சொன்னால் நடக்காது. இங்கே இருப்பவர்கள்தான் காப்பாற்ற முடியும். இவர்கள் உங்களோடு இருப்பார்கள்' என தனது நிலைப் பாட்டை விளக்கினார். இதன் பின்னரும் சுந்தரம் தனது நிலைப் பாட்டில் இருந்து மாறவில்லை என்பதால் தேர்தல் முடிவிற்கு பிறகு அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்கின்றது காங்கிரஸ் வட்டாரம்.

-நாகேந்திரன்