தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த போதும் கோவை மாவட்ட மக்களின் அபிமானம் பெற வில்லை என்பது மூத்த உடன்பிறப்புகள் மற்றும் தி.மு.க. தலைமையின் மனக்குமுறலாக இருந்து வருகின்றது. மேற்கு மண்டலத்தில், குறிப்பாக கோவையில் தங்களது வெற்றியைப் பதிக்க புதுவித கணக்குகளுடன் காய்நகர்த்தி வருகின்றது ஆளுங்கட்சியான தி.மு.க.
கோவை மாவட்டத்தினைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வசம் 9-ம், பா.ஜ.க. வசம் 1-ம் உள்ளன. இதில் ஒன்றைக்கூட தி.மு.க. தன் வசமாக்கவில்லை. வெற்றிபெறக்கூடிய தொகுதி எனத் தெரிந்திருந்தும், உட்கட்சி பிரச்சனையால் கோவை தெற்கை காங் கிரஸுக்கு ஒதுக்கியிருந்தது தி.மு.க. அதுபோக கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் பொள்ளாச்சி தி.மு.க. வசமும், கோவை சி.பி.எம். வசமும் உள்ளன. கோவை எம்.பி.யாக நடராஜன் உள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முன் னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சீரிய முயற்சியால் கோவை மாநகராட்சி தி.மு.க. வசமானது. எனினும், கோவை மாவட்டத்தில் காலூன்ற இயலாத நிலை தி.மு.க.விற்கு. எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் இந்த முறை கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் முழுவதும் தங்கள் வசமாக வேண்டுமென இது தொடர்பாக விரிவான அறிக்கையினை தி.மு.க. தலைமை கேட்க, அறிக்கையை தயார் செய்து அனுப்பியுள்ளனர் சீனியர் தி.மு.க.வினர்.
""2016க்குப் பிறகு ஒரு எம்.எல்.ஏ. சீட்கூட தி.மு.க.விற்கு இல்லை. இதற்கு காரணம் கோவை குண்டுவெடிப்பு சம்பவம்தான் என நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டு அலைகின்றனர் மாவட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள். இது மட்டும்தான் காரணமா.? ஏனென்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடும் தெற்கு தொகுதியில் பிரச்சார நேரத்தில் ஒரு கடையின்மீது பெட்ரோல் குண்டுவீச்சு நடந்தபோதும் அங்கு பா.ஜ.க. கணிச மான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், உண்மையைக் கூறவேண்டு மானால் இங்கு சாதிதான் யார் வெல்லவேண்டும் என தீர்மானிக்கின்றது. குறிப்பிட்ட இந்த சாதிக்காரன் நிற்கின்றான் என்றால் அவனுடைய சமூகத்தில் அவனுடைய மதிப்பீடு எவ்வளவு என்பதை வைத்து, எதிர்த்தரப்பில் பேசி விட்டுக்கொடுக்க சொல்வது இங்கு வழக்கமாக உள்ளது'' என்கிறார் மூத்த உடன்பிறப்பு ஒருவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொண்டமுத்தூர் தொகுதியில் 22,000 வாக்குகள் அ.தி.மு.க.வை விட தி.மு.க. அதிகம் பெற்று தி.மு.க.வின் சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொண்டமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதற்கான காரணத்தை இன்று வரை தி.மு.க. ஆய்வுசெய்ததாக தெரியவில்லை. கவுண்டர்கள் சமூகம் அதிகமாக உள்ள தொகுதியாகக் கருதப்படும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாயுடு சமூகத்தை சார்ந்த அருண்குமார் வெற்றிபெற்றதும், அதுபோல், நாயுடு மக்கள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படும், அதே நாயுடு சமூகத்தை சார்ந்த சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க.வின் நா.கார்த்திக், தனது சொந்த வாக்குச் சாவடியில் மூன்றாம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டு கவுண்டர் சமூகத்தை சார்ந்த ஜெயராமன் வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த அறிக்கையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளது குறிப் பிடத்தக்கது.
இன்னொரு மூத்த உடன் பிறப்பின் கூற்றோ உற்றுநோக்கு வதுபோல் உள்ளது. அவருடைய கருத்திலிருந்து, ""கோவையில் இடை சமூகம் என்று சொல்லக்கூடிய பிள்ளைமார், ஒக்கிலியகௌடர், தேவர், இஸ்லாமியர், முதலியார், பட்டியல் சாதி போன்ற பிரிவினருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டபோது கட்சியின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருந்ததாகவும், மாற்றாக அதிக அளவில் மக்கள் தொகை கொண்டதாகக் கருதி கவுண்டர், நாயுடு, நாயக்கர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்படும்போது கட்சியின் வளர்ச்சி மிகவும் சரிவை சந்தித்து உள்ளதாகக் கூறுகின்றனர். கோவை மாநகர் தொழில் நகரம் என்பதால் இங்கு பலதரப்பட்ட மக்கள் வசித்துவருவது அனைவரும் அறிந்ததே. இங்கு சி.ஏ.ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, மு.இராமநாதன், கா.ரா.சுப்பையன், சி.டி.தண்ட பாணி, நாச்சிமுத்து, அவைத் தலைவர் மு.மா.சண்முகசுந்தரம், சுக்கூர் ஆகியோர் மாவட்ட முக்கிய பதவிகளில் இருந்தபோது, கட்சி சோதனையை சந்தித்த காலமாக இருத்தபோதும் தி.மு.க.வின் வாக்கு வங்கியை மிகவும் பலமாகவே வைத்திருந்தார்கள். காரணம், சமூக பலம் இல்லை என்பதால் கழகத் தொண்டர்களின் பலத்தை நம்பியே கட்சி நடத்தி வந்தார்கள். இதனால் மாவட்ட பொறுப்பாளர்களும் அடிமட்டத் தொண்டர்களுடன் இணக்கமாக இருந்துவந்தனர். தி.மு.க.வும் வெற்றி பெற்றது. கோவை தி.மு.க. வரலாற்றை இரண்டாகப் பிரிப்பதாக இருந்தால் சி.டி.தண்டபாணிக்கு முன், அவருக்கு பின் என பிரிக்கலாம். இதனையும் குறிப்பால் தலைமைக்கு உணர்த்தி யுள்ளோம்'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, அருந்ததியர் சமூக மக்களின் உரிமைக்குரலும் ஓங்கி ஒலிக்கின்றது. அந்த அறிக்கையில்,""தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க தங்களது சமூகத்தின் 68% வாக்குகளை அள்ளியளித்த அருந்ததியர் இன மக்களை கோவை மாநகர், மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக புறக்கணிப்பு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மாவட்ட பொறுப்பாளர்கள், கோவை மாவட்டத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அருந்ததியர் மக்களை புறக்கணித்தபோதும், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அதிக வார்டுகள் கோவை மாநகர் கிழக்கு தொகுதியில் வந்தது. மக்கள் தொகை மற்றும் அதிக வாக்காளர்கள் கொண்ட அருந்ததியர் இன மக்களை புறக்கணித்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கு அனைத்து தொகுதிகளும் தி.மு.க.வில் வழங்கப்பட்டது. இருந்தும் அருந்ததியர் மக்கள், பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் ஆறுதல் வார்த்தைகளால் தி.மு.க.விற்கு வாக்களித்தனர்.
தொடர்ந்து மூன்றுமுறை யாதவ சமூகத்தை சேர்ந்த குறிச்சி பிரபாகரன் கிணத்துக்கடவு சட்டமன்றத் தேர்தலில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். காரணம், சமூகத்தை கட்சிக்குள் கட்டமைப்பு செய்யாததே. எது எப்படியோ, 3 மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட போதும் மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்புகளை வழங்காமல் தொடர்ந்து மா.செ.க்கள் அவர்கள் சார்ந்த சமூகத்தினருக்கு மாவட்ட பொறுப்புகளை வழங்குவது மற்ற சமூக மக்களுக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது'' என்கின்றது.
தற்போது கோவை மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் இங்கு தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கி பொறுப்பு அமைச்சர் இருந்தபோதும், இம்மண்ணின் மைந்தர் ஒருவருக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாய்ப்பு வழங்காவிடில் இன்னும் கால் நூற்றாண்டு கடந்தாலும் கோவையில் தி.மு.க. வெற்றி என்பது கானல் நீர்தான். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போதும், பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி வாரத்தில் ஒருநாள் அல்லது அரசு விழாவில் மட்டும் பங்கேற்றுவரும் சூழலில் அரசுப் பதவியில் உள்ள ஒருவரை பவர்சென்டராக உருவாக்காமல் இருப்பதன் விளைவாக பொது மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தவித்துவருகின்றனர்.
இதனிடையே, ""வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பதற்காக மட்டுமில்லாமல், இனி மேற்கு மண்டலம் முழுமைக்கும் தி.மு.க. கொடி பறக்கவேண்டும் என்பதற்காகத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. உதயநிதி ஸ்டாலினை மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக்கினால் கட்சிக்குள் உள்ள ஆண்டான் அடிமைத்தனமும், அருந்ததி யர்கள் சமூகத்தின் ஏக்கத்திற்கும், இடைச் சமூகத்தினரின் அச்சத்திற்கும் தீர்வு ஏற்படும். "மாமன்னன்' திரைப்படமும் உதயநிதியின் செல்வாக்கை மேற்கு மண்டலத்தில் உயர்த்திப் பிடித்திருப்பதால் கொங்கு மண்டலத்தின் தளபதியாக உதயநிதி ஸ்டாலின் செயல்பட வாய்ப்பு அதிகம் என தி.மு.க. புதுக்கணக்கை போட்டுவருகின்றது'' என்கின்றனர் விவரமறிந்த கட்சி சீனியர்கள்.
மேற்கு மண்டல தி.மு.க.வினர் எதிர் பார்ப்பதும் அதுவே!