YOUTUBE... இன்று பட்டிதொட்டி யெங்கும் பார்க்கப்படும் பொழுதுபோக்குத் தளம். யார் வேண்டுமானாலும் இதில் சேனல் ஆரம்பித்துக் கொள்ளலாம், தங்கள் திறமையை வைத்து வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு இதன்மூலம் பணமும் சம்பாதிக்கலாம் என்பது இதன் சிறப்பு. உலகமெங்கும் 'யூ-ட்யூபர்கள்' என்று ஒரு சமூகமே உருவாகியிருக்கிறது. மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக இது மாறியிருக்கிறது. இதன் நேர்மறை அம்சங்களாக பல விஷயங்கள் இருந்தாலும் எதிர்மறை விளைவுகளுக்கும் குறையில்லை. பொய்ச்செய்திகள் பரவுவது, பக்குவமில்லாத கருத்துகள், பிழையான தகவல்கள் வெளியிடப்படுவது, எந்தவித பயனுமளிக்காத வெற்றுப் பொழுதுபோக்கு வீடியோக்கள் அதிகமாக இருக்கிறது என, பல எதிர்மறை கருத்துக்களும் இந்தத் தளம் குறித்து உள்ளன.
ஆரம்பத்தில் பெரிய அடையாளமில்லாத மக்கள், வீடியோக்கள் வெளியிடும் தளமாக வளர்ந்த யூ-ட்யூபில் நாளடைவில் செய்தி நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், ஆடியோ கம்பெனிகள் என பெரும் நிறுவனங்கள் நுழைந்தன. படங்களின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டன. இப்படி பெரிதாகப் பரவிய யூ-ட்யூப், இந்தியாவில் ஜியோ இணைப்பு வந்ததன் பிறகு பல மடங்கு வளர்ச்சியை அடைந்து, இன்று பெரும் மாற்று ஊடகத்தளமாக உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா முதல்அலை பரவியபோது அனைத்துத் துறைகளையும் போல திரையுலகம், தொலைக்காட்சிப் படப்பிடிப்புகளும் முடங்கின. இதனால் கிடைத்த நேரத்தில் பொழுதுபோக்க, அதையே காசாக்க, டி.வி. பிரபலங்கள் பலரும் யூ-ட்யூபில் இறங்கினர். வனிதா, மா.கா.பா., பிரியங்கா, ஷிவாங்கி என அந்த லிஸ்ட் நீளமானது. ஏற்கனவே பிரபலமாக இருந்த அவர்கள் சேனல் தொடங்கியதுமே மில்லியன் கணக்கில் வியூஸை குவித்தனர். பெரிய மெனக்கிடல் இல்லாமல் தங்கள் வீடு, வளர்ப்பு நாய், பொழுதுபோக்கு அம்சங்கள், சமையல் என எந்த வீடியோ போட்டாலும் மில்லியன் பார்வைகளை கடந்தன.
அதற்கு முன்பு மிகப் பிரபலமான தமிழ் யூ-ட்யூபர்களுக்கே மில்லியன் பார்வைகள் என்பது அவ்வப்போது நிகழ்வதே. இடையில் இந்தியாவில் டிக்-டாக் செயலி தடை செய்யப்பட, டிக்-டாக்கில் பிரபலமான பலரும் யூ-ட்யூபுக்குள் வந்தனர். ஜி.பி.முத்து, ரௌடி பேபி சூர்யா உள்ளிட்ட பலரும் இதில் அடக்கம்.
அடிப்படையில் யூ-ட்யூப் வீடியோக்களில் கொஞ்சமேனும் தகவல், மெனக்கிடல், தரம் இருந்ததாகவும், இந்த டிக்-டாக்கர்கள் மற்றும் டி.வி. பிரபலங்கள் உள்ளே வந்ததால் இது கெட்டதாகவும் யூ-ட்யூபர்கள் கூறிவந்தனர். கடந்த வாரம், 'பிக் பாஸ்' புகழ் அர்ச்சனா தனது சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டார். "அச்சுமா'ஸ் பாத்ரூம் டூர்' என பெயரிடப்பட்ட அந்த வீடியோவில் தனது வீட்டின் குளியலறை எவ்வாறு இருக்கிறது, எப்படி பராமரிக்கப்படுகிறது என்று காட்டியிருந்தார். மிக சொகுசாகவும், உயர் ரகமாகவும் இருந்த அந்த பாத்ரூம் டூர் வீடியோவுக்கு பார்வையாளர்கள் பலர் கிண்டலாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் தரக்குறைவாகவும் கமெண்ட் செய்திருந்தனர். பிறகு கமெண்ட் பகுதி தடைசெய்யப்பட்டது. அந்த வீடியோவை கிண்டல் செய்து பல யூ-ட்யூபர்கள் தங்கள் சேனலில் வீடியோ வெளியிட்டனர். எங்கெல்லாம் அந்த வீடியோவின் பகுதிகள் பயன்படுத்தப்பட்டதோ அந்த சேனல்களுக்கு காப்பி ரைட் ஸ்ட்ரைக் கொடுத்தது அர்ச்சனாவின் சேனல். இதனால் பல யூ-ட்யூபர்கள் பாதிக்கப் பட்ட நிலையில் அர்ச்சனாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னணி யூ-ட்யூபர் கள் பலரும் இதைக் கண்டித்தனர். இப்படி கடந்த இரண்டு வாரமாக யூ-ட்யூப் கலவரமாக இருந்தது. தமிழ் மட்டுமல்ல, ஒவ்வொரு மொழியிலும் இதுபோல ஒவ்வொரு பிரச்சினை.
பார்க்கும் பொதுமக்களில் சிலர் நினைப்பது இதுதான்... "நாட்டில் என்ன நடந்தாலும் கலைஞர்களின் உலகமும் அவர்களின் பார்வையும் தனிதான்.'
-வீபீகே
உதவிக்கரம் நீட்டிய நட்சத்திரங்கள்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாகியிருக்கிறது. ஒருபுறம் உயிரிழப்புகளும் அதிகமாக, இன்னொருபுறம் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் நிர்வகித்து கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் முதல்வர் ஸ்டாலின், முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் முதல்வரை நேரில் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினர். ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா தனது கணவர் விசாகனின் நிறுவனம் வழியாக ஒரு கோடி ரூபாய் வழங்க, நடிகர் அஜித், ஆன்லைன் மூலமாக முதல்வரின் நிவாரண நிதி கணக்கில் 25 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். தனியாக திரைப்பட தொழிலாளர் சங்கமான ஃபெஃப்சிக்கு பத்து லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். இயக்குனர் முருகதாஸ், முதல்வரிடம் 25 லட்ச ரூபாயை அளித்தார். கவிப்பேரரசு வைரமுத்து, முதல்வரை சந்தித்து 5 லட்சம் ரூபாயை தனது பங்களிப்பாக வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு நட்சத்திரங்களும் கொரோனா மீட்புப் பணிகளுக்காக நிதி வழங்கி வருகின்றனர்.