கடந்த மாதம் 18ஆம் தேதி, நெல்லையிலுள்ள தீயணைப்புத்துறை மண்டல அலுவலக துணை இயக்குனர் அலுவலகத்தில், துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகத்தில் இல்லாதபோது, லஞ்ச ஒழிப்புத்துறையின் ஏ.டி.எஸ்.பி. எஸ்கால் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் துணை இயக்குனரின் அலமாரியிலிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம், டிரைவர் செந்தில்குமாரிடமிருந்து 27 ஆயிரத்து 400 என மொத்தம் சுமார் இரண்டரை லட்சத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த சோதனைக்கு முதல் நாள் நள்ளிரவில் பைக்கில் பையுடன் மர்ம நபர் துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் சென்று திரும்பியதாக சி.சி.டி.வி.யில் பதிவான காட்சி சந்தேகத்தை எழுப்ப, தனது நேர்மையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர் களே இந்த சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாமென்று துணை இயக்குனர் சரவணபாபு, மாநகர போலீஸ் கமிசனர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் கொடுக்க, அதனடிப்படையில் நெல்லை மாநகர துணை கமிசனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணையை மேற்கொண்டனர். தனிப்படை யினரின் விசாரணையில், தூத்துக்குடி தீயணைப்புத் துறை வீரர் ஆனந்த், அவரது உறவினர் முத்துச் சுடலை இருவரும் அதில் சம்பந்தப்பட்டது தெரிய வர, இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
தீயணைப்பு வீரர் ஆனந்திடம் நடத்திய விசாரணையில், அவர் தகவலை மறைப்பதையும், பணத்தை வைத்தது யாரென்பதை தெரிவிக்க அச்சப்படுவதையும் அறிந்திருக்கிறார்கள். சி.சி.டி.வி. காட்சியில் வந்தவர், காக்கி பேண்ட் போட்டிருந்ததால் அவர் தீயணைப்புத்துறையைச் சார்ந்தவராக இருக்கலாமென முதலில் சந்தேகப்பட்ட போலீஸ் டீம், பின்னர், விசாரணையை திசைதிருப்பவே அவ்வாறு சென்றது தெரியவந்திருக்கிறது.
பின்னர், மர்ம நபரை செல்போன் சிக்னலை வைத்துக் கண்காணித்தபோது, அந்த நபர் மும்பையிலுள்ள தாராவி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. தாராவியில் பதுங்கியிருந்த மேலப் பாளையத்தைச் சேர்ந்த விஜய் என்ற வாலிபரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.
அவரிடம் நடந்திய விசாரணையில், அவர் தீயணைப்பு வீரர் ஆனந்தின் நெருங்கிய உறவினர் என்பதும், தீயணைப்பு அலுவலகத்தில் பணம் வைப்பதற்காக 50 ஆயிரம் கூலி பேசப்பட்டு, அதில் 40 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆதாரங்களைத் தனிப்படையினர் காட்டிய பிறகே குற்றங்களை விஜய் ஒப்புக்கொண்டாராம்.
தொடர் விசாரணையில், இந்த சம்பவத்தில், நெல்லை தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூரிலுள்ள தீயணைப் புத்துறையின் முருகேஷ் ஆகிய இருவரின் தொடர்பு பற்றியும் தெரியவர, தனிப்படை போலீஸ் அவர்களையும் அள்ளியிருக்கிறது.
சிறையிலிருக்கும் தீயணைப்பு வீரர் ஆனந்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், இந்த சதிச் செயலின் பின்னணி குறித்த அனைத்தும் வெட்டவெளிச்சமாகும் என்கிறார் விசாரணை அதிகாரி! தீயணைப்புத்துறைக்குள் இத்தனை புகைச்சலா?!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/raid-2025-12-12-13-20-15.jpg)