செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தில் இயங்கி வருகிறது. பூமிநாதன் என்பவர் இந்த சுரங்கத்தை ஒப்பந்தம் எடுத்து தோண்டி வருகிறார். அனுபவம் இல்லாத ஆபரேட்டர்களும், லாரி ஓட்டுநர்களும் இந்த சுரங்கத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதே நிரம்பிய சுப்பையன் மகன் வினோன்மணி என்பவர் ஹிட்டாச்சி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென சுரங்கம் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தை மூடியது. இதுகுறித்து தகவலறிந்து மைன்ஸ் மேனேஜர் முரளி அங்குள்ள ஊழியர்கள் மூலம் மற்றொரு ஹிட்டாச்சி எந்திரத்தை கொண்டுவந்து மண்ணைத் தோண்டி மண்ணிற்குள் புதைந்த ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் ஓட்டுநரை மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே வினோன்மணியன் உயிரிழந்துவிட்டார்.
விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் பொக் லைன் ஆபரேட்டர் இறந்துபோனதை அடுத்து அந்த சுரங்கத்தை மாவட்ட ஆட்சியர் தடை செய்துள் ளார். இப்போது அங்கு பணிகள் நடைபெறவில்லை.
அரியலூர் அருகில் ஏற்கனவே அரசு சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இதற்குத் தேவையான சுண்ணாம்புக்கல்லை எடுப்பதற்காக ஆனந்தவாடி என்ற ஊரில் 300 ஏக்கர் நிலத்தை அரசு கையகப் படுத்தி உள்ளது. இங்கு சுரங்கம் தோண்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பினால் கடந்த 3 மாதங்களாக சுரங்கம் தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.
"மக்கள் எதிர்ப்பு இருப்பதால் இங்கு சுரங்கம் தோண்ட முடியாது' என்று ஆட்சியரும் அரசுக்கு அறிக்கை அனுப்பிவிட்டார். இதையடுத்து அமைச்சர் சம்பத், அரசு கொறடா ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம், குன்னம் ராமச்சந்திரன், ஆட்சியர் ரத்தினா ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆனந்தவாடி கிராம முக்கியஸ்தர்களை வரவழைத்து விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஆனந்தவாடி கிராம மக்களை சம்மதிக்க வைத்து, மீண்டும் சுரங்கம் தோண்ட இருக்கிறார்கள். விதிகளை மீறி சுரங்கம் தோண்டினால் விபரீதமாகிவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் ஆனந்தவாடி மக்கள்.
""மாவட்டம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயக்கப் படுகின்றன. இவற்றுக்காக சுண்ணாம்புக்கல் எடுத்துச்செல்ல பல பகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணி இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இதில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தவிர அரசு புறம்போக்கு நிலம், ஏரி, குளங்கள், ஓடைகள் வண்டிப் பாதைகள் என நிறைய ஆக்கிரமிப்புகள் செய்து அவற்றில் சுரங்கம் தோண்டப்படுகின்றன. இவை பற்றி வருவாய்த்துறை ஆய்வு செய்து அவர்களை கண்டறிந்து தடுக்கவேண்டும்.
மேலும் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் என மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. ஆனால் அதற்கான சாலை விரிவாக் கம் செய்யப்படவில்லை.
சுரங்கம் தோண்டுவதற்காக வைக்கப்படும் ராட்சச வெடிகள் வெடிக்கும்போது அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் அந்த அதிர்வினால் விரிசல் விடுகிறது. இரவு, பகல் தூங்க முடிய வில்லை.
அரசு நிர்ணயித்துள்ள விதிகளை மீறி மிகவும் ஆழமாக சுரங்கம் தோண்டப்படுகிறது. சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்ட இடங்கள் அப்படியே கிடக்கின்றன. அவற்றைச் சீர்படுத்த வேண்டும். கனகர வாகனங்கள் செல்வதற்கான நேரங் கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்த வாகன ஓட்டிகள் கடைப்பிடிப்பதில்லை. கண்ட கண்ட நேரங்களில், அதிலும் பள்ளி கல்லூரி அலுவலகம் செல்லும் நேரங்களில் வாகனங்களை இயக்கி, கோவில் அருகே டவுன் பஸ் மீது சிமெண்ட் லாரி மோதி 15-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதேபோல் அரியலூர் அருகே பள்ளி வேன்
மீது லாரி மோதி மாணவர்கள் இறந்தனர். இப்படி பல நூற்றுக்கணக்கான மனித உயிர்களை விபத்துக்கள் மூலம் அவ்வப்போது சாகடிக்கிறார்கள்.
அதேபோல் சிமெண்ட் ஆலைகளில் இருந்து வெளிவரும் மாசுகள் மூலம் இம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. சுற்றுச்சூழல் துறை இதை கருத்தில் கொண்டு முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும்'' என்கிறார் சமூக ஆர்வலர் பொன்பரப்பி ராயர்.
இம்மாவட்டத்தில் சிமெண்ட் ஆலை களால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக் கொள்ள முடியாமல் புதுப்பாளையம், உஞ்சினி, செட்டித் திருக்கோணம், சோழன்பட்டி, கங்கைசேரி... இப்படி பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது மக்கள் போராட்டங்கள், மறியல்கள் என நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ""இதேநிலை நீடித்தால் அரியலூர் மாவட்டத்தில் வாழ முடியாது. வாழ வேண்டும் என்றால் அரசு எங்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்'' என்கிறார்கள் அரியலூர் மாவட்ட மக்கள்.
-எஸ்.பி.சேகர்