செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்ட தி.மு.க.வில் எடுத்த சீரமைப்பு நடவடிக்கை, வரவேற்பையும் எதிர்ப்பையும் கலந்தே வெளிப்படுத்தி வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக கே.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, அறிவாலயத்திற்கே நேரடியாக வந்து ஸ்டாலினிடம் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் மாவட்ட நிர்வாகிகள்.

வருத்தப்படுவோர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்கள் நெல்லை கிழக்கு மாவட்டத்தின் நாங்குனேரி ஒ.செ. வானுமாமலையும் ராதாபுரம் ஒ.செ.வான கேசவனும். முதலில் வானுமாமலை தனது வருத்தத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...

dmk

""கட்சி அறிவிக்கும் எந்த போராட்டமானாலும் சரி, பொதுக்கூட்டமானாலும் சரி எனது சொந்தப் பொறுப்பிலேயே நடத்தி வந்திருக்கேன். ஆனால் எதற்குமே மாவட்டம் ஆவுடையப்பன் வருவது கிடையாது. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பூங்கோதையுடனும் பழைய மாவட்டம் கிரஹாம் பெல்லுடனும் நான் பேசியதைப் பார்த்து, "அவர்களுடன் உனக்கென்ன பேச்சு'ன்னு கண்டிச்சாரு ஆவுடையப்பன். எல்லா கோபத்தையும் மனசுல வச்சிக்கிட்டு, இப்ப என்னைத் தூக்கிட்டு சுடலைக்கண்ணுவை நியமிக்க சிபாரிசு பண்ணிருக்காரு. சுடலைக்கண்ணு கட்சி உறுப்பினரே கிடையாது. நடிகர் கார்த்திக் கட்சியிலிருந்துட்டு, சமீபத்துல டி.டி.வி.அணியில் சேர்ந்து, தினகரன் கையால பரிசெல்லாம் வாங்கிருக்காரு. தளபதியை சந்திச்சு எல்லாத்தையும் முறையிடத்தான் போறோம்''’என கொந்தளித்தார்.

கேசவனோ, ""ஆனைகுடி கிராமத்தில் கனிமொழியம்மாவை வரவச்சு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பொறுக்க முடியாம ஆவுடையப்பன் இப்படி பண்ணியிருக்காரு. இப்ப போட்டிருக்கிற ஜெகதீசன், ராதாபுரம் அ.தி.மு.க. ஒ.செ.வா இருந்தப்ப, அப்பாவு மற்றும் எங்க கட்சிக்காரங்க சேர்ந்து, ராதாபுரத்துல... தலைவரோட தந்தை முத்துவேலருக்கும் தாய் அஞ்சுகத்தம்மாவுக்கும் சிலை வச்சாங்க. அந்த சிலைகளை அப்புறப்படுத்தணும்னு யூனியன்ல தீர்மானம் போட்டு, உடைக்க வந்தவர்தான் இந்த ஜெகதீசன்''’என்கிறார்.

எல்லாவற்றிற்கும் விளக்கம் பெற மா.செ. ஆவுடையப்பனை நாம் தொடர்புகொண்ட போது, ""அவர்களின் செயல்பாடு சரியில்லை என தலைமைக்கு புகார்கள் போனதுதான் காரணமே தவிர, நான் இல்லை''’என்றார்.

இதற்கிடையே, நெல்லை கிழக்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட ஒ.செ.க்களில் மூவர், அணி தாவும் மூடில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, தங்கள் பக்கம் இழுக்க களத்தில் குதித்துள்ளார் அம்பை மாஜி எம்.எல்.ஏ.வும் தினகரனின் ஆதரவாளருமான இசக்கி சுப்பையா.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்