பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரிகத்தின் அடையாளத்தை மாற்றும் முயற்சியை பற்றவைத்தார். அவருடைய முயற்சிக்கு எதிர்ப்பைத் தெரிவித்த சி.பி.எம். கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் இப்போது தான் ஆரிய -திராவிடப் போர் நேருக்கு நேர் தொடங்கியிருப்பதாக கூறினார்.
இதுதொடர்பாக அவரிடம் பேசினோம். ""இம்முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், பொருளாதாரத்தைத் தாண்டி வரலாறு, பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கியுள்ளார். சிந்துவெளி நாகரிகத்தை "சரஸ்வதி சிந்து நாகரிகம்' என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், முடிவுகளையும் முற்றிலும் மாற்றி அமைக்க முயற்சிக்கிறார். வேத பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.
நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால் செங்கல்லையும் பானையையும் செய்பவர்களை அசுரர்கள் என்று ஆரியர்களின் வேதம் வசைபாடுகிறது. பிறகு எப்படி உங்களை "நாகரிகவாதி' என்று உரிமை கொண்டாடுகிறீர்களோ?
சடங்குகள் பற்றிய வேத இலக்கிய குறிப்பில் சதபத பிராமணத்தில், "அக்னி சேனா' என்ற சடங்கில்தான் முதன் முதலில் செங்கலைப் பற்றிய குறிப்பே வருகிறது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்ட செங்கல் பயன்பாட்டினை பார்க்க முடியும்.
அமைச்சர் குறிப்பிட்ட சரஸ்வதி என்ற நதி இந்தியாவில் ஓடியதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரத்தை அவர்களால் இதுவரை காட்டமுடியவில்லை. போகிற போக்கில் சொன்னால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். பின்னர், அதுவே நடை முறைக்கு வந்துவிடும் என்று நினைப்பது என்ன ஒரு மனநிலை என்று புரியவில்லை? சரஸ்வதி நதி எங்கே ஓடுகிறதாம் தெரியுமா? பூமிக்கு அடியில் ஓடுகிறதாம்! கங்கை, யமுனை, சரஸ்வதி கூடுமிடமான அலகாபாத் திரிவேணி சங்கமமாம். அங்கிருந்து கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள ஹரப்பா, மொகஞ்சதாரோவிற்கும் பூமிக்கடியில் அலகா பாத்தில் ஓடும் சரஸ்வதிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், என்ன சொல்வார்கள் தெரியுமா? இது புராணம், மக்களின் நம்பிக்கை என்பார்கள். கழிப்பறை கட்டவும் வடிகால்களை அமைக்கவும் நிதி ஒதுக்க வழியில்லாதவர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவற்றையெல்லாம் கட்டிமுடித்த ஒரு நாகரிகத்தை திருடப் பார்க்கிறார்கள்.
பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரை சொன்னவர், கீழடியை பற்றி ஏன் சொல்லவில்லை? எல்லாவற்றி லும் ஒரு அரசியல் இருக்கிறது. 1998, 2004 வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட காளை முத்திரையை அகற்றிவிட்டு குதிரையை பொருத்தினார்கள். கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த பழமொழி போல, கோயிலை விட்டு தமிழை விரட்டி சமஸ்கிருத கருநாகம் புகுந்தது போன்றதுதான் இதுவும். இப்படியே விட்டுவிட் டால் கீழடியே எங்களது நாகரிகம்தான் என்பார்கள். எங்கே இந்தியாவின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் அது தங்களது கடவுள்கள் இங்கே தோன்றுவதற்கு முன்பே தோன்றிய வரலாறு உலகிற்கு தெரிந்துவிடும் என்பதாலும்தான் அவர்கள் கீழடியைக் கண்டு பயப்படுகிறார்கள்.
இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும் உலக அறிவியலின் ஆதாரமாகவும் சமஸ்கிருதத்தை முன்வைக்கிறார்கள். இதுவும் ஆதாரமற்றது. சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு ராஜஸ்தானில் உள்ள அத்திப்பாராவிலும் குஜராத்தில் திலாவத்திலும் கிடைத் திருக்கிறது. அந்த கல்வெட்டின் காலம் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு. ஆனால் தமிழ் மொழியில் கிடைத்திருக்கிற முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளம் மற்றும் தேனியில் புள்ளிமான் கோம்பை என்ற இடத்திலும் கிடைத்திருக்கிறது. இந்த கல்வெட்டின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு. சமஸ்கிருதத்திற்கு 700 ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழ் ஏன் உங்களுடன் போட்டி போடவேண்டும்?
இதுவரை தமிழில் 60 ஆயிரம் கல்வெட்டுகளும், சமஸ்கிருதத்தில் 4 ஆயிரம் கல்வெட்டுகளும் கிடைத் திருக்கின்றன. இப்படிப்பட்ட சமஸ்கிருதத்தை தேவபாஷை என்கிறார்கள். தமிழ் தேவபாஷை அல்ல. அது மக்களின் மொழி. மக்கள் பேச்சு வழக்கில் புழங்கிய மொழி. சமஸ்கிருதமோ வெறும் சடங்கு மொழி. சமஸ்கிருதத்தில் இலக்கியம் இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால், தமிழ் இலக்கியத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சமஸ் கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளரை காண்பிக்க முடியுமா? இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. சமயச்சார்பற்ற மொழி தமிழ். கீழடியில் கிடைத்த 16 ஆயிரம் பொருட் களில் ஒன்றுகூட மதம் சார்ந்தது இல்லை.
இப்போதுதான் ஆரிய -திராவிட போர் நேருக்கு நேராக வந்திருக்கிறது. அதை திராவிடர்களான நாங்கள் எப்படி எதிர்கொள்வோம் என்பதை பார்க்கத்தான் போகிறது இந்த உலகம்'' என்று கொந்தளித்தார்.
-அண்ணல்