திருச்சி மாவட்டம் திருப் பராய்த்துறை பகுதியில் செயல்பட்டுவரும் இராமகிருஷ்ண குடில் என்று அழைக்கப்படும் தபோவனம், ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்றம் வரை சென்று, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போது இந்த தபோவனத்திற்கு மின்சார வாரியம் தாராளம் காட்டுவதாகவும், ஒரே சர்வே எண்ணில் உள்ள இந்த தபோவனத் திற்கு 6 மும்முனை மின்சார இணைப்பு கொடுத்துள்ளதாகவும் ஒரு விவகாரம் தற்போது பூதாகர மாக வெடித்துள்ளது. அதிலும், மின் வாரியம் தபோவனத்திற்கு வழங்கிய இணைப்புகளில் இரண்டு விவசாய இணைப்பாகவும், சி.பி.எஸ்.சி. பள்ளிக்கு இரண்டு இணைப்பாகவும், அச்சகத்திற்கு இரண்டு இணைப்பு எனவும் மொத்தம் 6 மின் இணைப்புகளை ஒரே ரூமில், ஒரே சர்வே நம்பரில் வைத்துள்ளனர்.
ஒருவர் ஒரு மின் இலவச விவசாய இணைப்பு மட்டும்தான் வைக்க முடியும் என்கிறது மின் சார வாரிய சட்டம். ராமகிருஷ்ண தபோவனமானது, நந்தவனம் என்றிருக்கும் கோயில் இடத்தில் 16 வருடங்களுக்கு முன்பு விவசாயம் செய்து வந்தது. இந்த கோயில் இடம் திருச்சி கரூர் சாலை விரிவாக்கத்தின்போது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் இந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட வில்லை. 16 வருடமாக இலவச மின்சார இணைப்பு என்ற அடிப் படையிலேயே அந்த இணைப்பை இன்றுவரை பயன்படுத்தி வருகின்ற னர். ஆனால் அதே சர்வே நம்பரில் 15 வருடமாக மின்சாரம் இல்லாமல் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மின்சாரம் கேட்டால் கோயில் இடமென்பதால் கொடுக்க முடியாது என்கிறார்கள்.
தற்பொழுது ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் இந்த திருட்டு சம்பந்தமாக மின்சார வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளார். முதலில் அந்த ஊரிலுள்ள மின்சார வாரிய உதவி மின்பொறியாளர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. விமானப்படை அதிகாரி, மின்சாரத் திருட்டு குறித்து விஜிலன்ஸுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் மனு அளித்தார். விஜிலென்ஸிலிருந்து வந்த அதிகாரிகள், பயன்பாட்டிலிருந்த 6 மின் இணைப்புகளில், நான்கு இணைப்புகளைத் துண்டித்து விட்டுச் சென்றனர். அவர் அளித்துள்ள புகாரில், "விவசாயம் செய்வதாகச் சொல்லப்படும் அங்கு விவசாய நிலமே இல்லை. அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிக்கும், அச்சகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இவர்களுக்கு மின்வாரியத்தால் ஒரு ரூபாய்கூட அபராதமாக விதிக்கப்படவில்லை. அதேவேளை, அணலை காந்திபுரத்தில் அநியாயமாக ஒரு ஏழைக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டு வசூலித்த மின்சார வாரியம், அந்த பணத்தை திருப்பித்தர வேண்டும். இந்த ராமகிருஷ்ணா தபோவனத்திற்கு அபராதமாக குறைந்தபட்சம் 35 லட்சம் ரூபாயாவது வசூலிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்சார வாரியம் ராமகிருஷ்ணா தபோவனத்திற்கு சொந்தமான அனைத்து மின்சார இணைப்புகளையும் சோதிக்க வேண்டும். ஏனென்றால், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வீட்டு மின்சார இணைப்புகளை வீடே இல்லாமல், வீட்டு வரியே இல்லாமல், வீட்டு வரி ரசீதே இல்லாமல் வாங்கியுள்ளார்கள். அது எப்படி சாத்தியமானது என்பது முதற்கொண்டு அனைத்தையும் விசாரிக்க வேண்டும்.
இந்த ராமகிருஷ்ண தபோவன தனியார் அறக்கட்டளை, ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கும் ப்ரொபஷனல் டேக்ஸை தவிர எந்தவொரு வரியும் திருப்ப ராய்த்துறை ஊராட்சிக்கு கட்டுவ தில்லை. ஊராட்சி நிர்வாகத்திற்கு இவர்கள் வரி கட்டினால் பழைய பாக்கியும் சேர்த்து பல கோடி ரூபாய் மதிப்பீட்டுக்கு வரும் என்று கூறுகிறார்கள்.
ராமகிருஷ்ண தபோவனம், காவிரி ஆற்றை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. காவிரி கரையையும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஊர் மக்கள் காவிரிக்கு போக முடியாமல் காவிரி ஆற்றங்கரையை. மூடிவிட் டார்கள். முக்கொம்பு ஆற்று பாதுகாப்புப் பிரிவு, இந்த காவிரிக் கரைகளை மீட்க வேண்டும். இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தில் தற்போது எழுந்துள்ள மின்சாரத் திருட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, நிலுவையில் உள்ள தொகைகளை வசூல் செய்ய வேண்டும், அபராதம் விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களையும் மீட்கவேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துவருகிறது.