சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், உழைக்கும் மக்களின் தோழருமான என்.சங்கரய்யா, தனது 102வது வயதில் நவம்பர் 15, புதனன்று காலமானார். சென்னை குரோம் பேட்டை நியூ காலனியில் தனது குடும்பத்தின ருடன் வசித்து வந்த சங்கரய்யா, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப் பட்டுவந்தார். இரு நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். தகவலறிந்ததும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மனைக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபின், குடும்பத்தினரிடமும், கட்சியினரிடமும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

ss

வாழ்க்கை வரலாறு

1921-ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, கோவில்பட்டியில் நரசிம்மலுலிராமானுஜம் தம்பதியினரின் இரண்டாவது மகனாகப் பிறந்த என்.சங்கரய்யா, தூத்துக்குடியிலும், மதுரை யிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின்னர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடி யேட் வகுப்பில் சேர்ந்தார். கல்லூரிக் காலத் திலேயே அரசியலில் ஆர்வங்கொண்டதால், ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட் டத்தில் சங்கரய்யாவும் பங்கெடுத்தார். அப்போது தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தால் அவரால் தேர்வெழுத முடியாமல் போனது.

Advertisment

சிறை வாழ்க்கையில், தோழர் ப.ஜீவானந்தம், தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், காமராஜர் போன்ற பல தலைவர்களைச் சந்திக்கவும் உரையாடவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 1939ஆம் ஆண்டில் மதுரையில் மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, மதுரைக்கு வந்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அதில் பேசவைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

1943ஆம் ஆண்டு, மதுரை மாவட்ட கம்யூனிஸ்டு கட்சி செயலாளராக பொறுப்பேற்று, படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றினார். 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உருவான போதிருந்த 36 முக்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவராவார். 1995- 2002ஆம் ஆண்டு வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார். தனது அரசியல் பொது வாழ்க் கையில் எட்டாண்டு காலம் சிறையில் கழித்திருக் கிறார். மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை யும் வாழ்ந்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1967, 1977, 1980 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழை ஆட்சி மொழியாக மட்டுமின்றி, பாடத்திட்டத்திலும், நீதிமன்றங்களி லும், ஆட்சி நிர்வாகத்திலும் தமிழைக் கொண்டு வர வேண்டுமென்று சங்கரய்யா முன்வைத்த திருத்தத்தை அறிஞர் அண்ணா ஏற்றுக்கொண்டது வரலாறு. தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்ட தோழர் சங்கரய்யாவுக்கு, மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு, தகைசால் தமிழர் விருதை வழங்கி கவுரவித்தது. விருதுக்காக வழங்கிய 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கே வழங்கி அவ்விருதுக்கு பெருமைசேர்த்தார் சங்கரய்யா. ஜெயலலிதா ஆட்சியின் சித்ரவதையால் அய்யா கணேசன் பலியான தருணத்தில், ஜெ. அரசைக் கண்டித்து கலைஞர் தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தோழர் சங்கரய்யாவும் கலந்துகொண்டு நக்கீரனுக்காகக் குரல்கொடுத்ததை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும்விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுப்போம்'' என்று தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சமூகத்துக்கும் தோழர் சங்கரய்யா ஆற்றிய பணி களை நினைவுகூர்ந்து, "பொதுவுடமை அரசியலை யும், கொள்கைகளையும் மக்களுக்கு புரியும்வகையில் விளக்கக்கூடியவர்' என்று இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "இறுதி மூச்சு வரை நெறிசார்ந்து வாழ்ந்து பொதுவாழ் விற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த தோழர் என்.சங்கரய்யா'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisment

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தோழர் சங்கரய்யாவுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நவம்பர் 16, வியாழனன்று காலையில் தி.நகரி லிருந்து தொடங்கிய தோழர் சங்கரய்யாவின் இறுதி ஊர்வலத்தில் செம்படைத் தோழர்கள் அணிவகுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பல்வேறு தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கெடுத்தனர். இவர்களோடு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கெடுத்தனர்.

பெசன்ட் நகர் மின் மயானத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தலைவர்கள், சங்கரய்யாவின் சமூகப்பணிகளை நினைவுகூர்ந் தனர். அதன்பின் முழு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க தோழர் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தோழர் மறைந்தாலும்... அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

-தெ.சு.கவுதமன்