தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது மக்களைத் தூண்டியதாகக் கூறி, ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. போராட்டங்களின் மூலம் அரசுக்கு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்துவந்த மக்கள் அதிகாரம் அமைப்பை முழுமையாக முடங்கச் செய்யும் வேலையாகவே இது பார்க்கப்பட்டது. போராட்டம் நடந்துமுடிந்த சில தினங்களில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலிலூர் ரகுமான், அவரது இரு மகன்கள் முகமது அனாஸ் மற்றும் முகமது இர்ஷத் ஆகியோரை நள்ளிரவு வீடுபுகுந்து கைது செய்தது காவல்துறை. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள். தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் மூலம் தற்போது வெளிவந்திருக்கும் மூவரும் விசாரணை என்கிற பெயரில் நடந்த மிரட்டல்களை விவரிக்கின்றனர்.

case

மக்கள் அதிகாரம் அமைப்பில் நீண்டகாலமாக செயல்பட்டுவரும் கலிலூர் ரகுமான், ""மே 25-ஆம் தேதி நள்ளிரவில் சுவர் ஏறி குதித்துதான் வீட்டுக்குள் புகுந்தனர் காந்திநகர் பேட்டை போலீசார். சட்டரீதியில் கைது நடவடிக்கை இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததால், மறுக்காமல் ஒத்துழைத்தேன். மகன்களும் வரவேண்டும் எனச்சொல்ல, "கல்லூரியில் படித்து வருபவர்களை எதற்காக அழைக்கிறீர்கள்' என்றேன். "மேலிடத்து உத்தரவு' எனச்சொல்லி கூட்டிச்சென்றனர். எல்லாவிதமான நடைமுறைகளையும் மீறும்விதமாகவே அவர்களின் செயல்பாடுகள் இருந்தன. தூத்துக்குடியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட க்யூ-பிரிவு அதிகாரிகள், எங்களைத் தனித்தனியாக விசாரித்தார்கள். "காவல்நிலையத்திற்குள் நீங்கள் வந்து விசாரிக்கலாமா?' என்று கேட்டதற்காக, டேபிள் மேல் துப்பாக்கியை எடுத்துவைத்து, ‘"கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க'’என மிரட்டப்பட்டோம். "எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம். மக்கள் அதிகாரம் என்றால் எந்த சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரியும்...' என உளவியல் ரீதியிலும் அச்சுறுத்தினர். மகன்களுக்கு சிறுவயது என்பதால் பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்''’என நடந்தவற்றை விவரிக்கிறார்.

Advertisment

கலிலூர் ரகுமானின் மூத்தமகன் முகமது அனாஸ், “""ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டையும், அதில் காயமடைந்தவர்களையும் நேரில் பார்த்தேன். அந்த மிரட்சிகுறையாத சில தினங்களில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். மே 25-ஆம் தேதி கைதுசெய்து, 27-ஆம் தேதி ரிமாண்ட் செய்தனர். 144 தடை உத்தரவை மீறியது, வாகனங்களை சேதப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எங்கள்மீது சுமத்தப்பட்டன. இனி போராட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என மிரட்டும் விதமாகவே தேசிய பாதுகாப்புச் சட்டம் எங்கள்மீது போடப்பட்டது. ஆனால், அவர்கள் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது. சிறை மீதான பார்வை இப்போது மாறியிருக்கிறது. படிப்படியாக திறப்பதற்கு தயாராகிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராடத் தயாராகி வருகிறோம்''’என்கிறார் உறுதியுடன்.

19 வயதேயான முகமது இர்ஷத், ""விசாரணையின்போது எங்களை வைத்து வேறு சிலரையும் கைதுசெய்ய முயற்சிகள் நடந்தன. தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன என்றுகூட தெரியாது. நாங்கள் சிறை சென்றதை விடவும் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம்தான் மிகப்பெரியது''’எனக் கூறினார்.

கைது, சிறை, போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு என நெருக்கடியான சூழலில் இருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பினரிடம் இதுபற்றி விசாரித்தபோது, ""ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை ஜாமீனில் எடுத்துள்ளோம்; யாரும் சிறையில் இல்லை. சென்னையில் எந்த இடத்திலும் போராட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அரசு பதில்மனுத் தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கிறது. ஜூலை 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரிய வழக்கில், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. உயரதிகாரிகளோ "மேலிடத்து உத்தரவு, எதுவும் செய்யமுடியாது' என்கின்றனர். சேலம், அரூர், தர்மபுரி ஆகிய மூன்று பகுதிகளில் ஆறு இடங்களில் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகேட்டும் தரவில்லை. சென்னையில் ஆகஸ்ட் 10-ல் பொதுக்குழு நடத்த அனுமதிகேட்டு 5-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தால், 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறார்கள். ‘"உங்க இஷ்டத்துக்கு கேட்டதும் அனுமதி கொடுக்கணுமா?'’என நீதிபதியே கேட்கிறார். எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது ஐம்பது, அறுபது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் சிலர் மீதும் 213 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்தையும் ஒரே வழக்காக மாற்றி வாதாடி, அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மக்களையும் வழக்குகளில் இருந்து விடுவித்திருக்கிறோம். இது எங்கள் சட்டப் போராட்டத்துக்கான வெற்றி''’என்கின்றனர்.

Advertisment

-சி.ஜீவாபாரதி