கேரளாவையே குலைநடுங்க வைத்திருக்கிறது அந்த கொடூர சம்பவம்.
கேரள மாநிலம் திருச்சூர் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் (49) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தர்மபுரி பத்மா (49) ஆகிய இருவரும் எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வந்தனர். ரோஸ்லின் கணவர் விபத்தில் சிக்கி வீட்டோடு இருந்து வருவதால், கணவர் செய்து வந்த லாட்டரிச் சீட்டு தொழிலில் அவர் ஈடுபட்டு வந்தார்.
இதேபோல் பத்மாவும், தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் எர்ணாகுளத்துக்குச் சென்று லாட்டரி சீட்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் அடுத்தடுத்து திடீரென மாயமாக, அவர்களின் குடும்பத் தினர், காவல்துறையிடம் ஓடினார்கள். அதிரடி விசாரணையில் இறங்கிய கேரள காவல்துறையினர், அந்த இரண்டுபேருக்கும் நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து அரண்டு போய்விட்டார்கள்.
இந்த விவகாரத்தில் தனிப்படை மற்றும் சைபர் க்ரைம் போலீசார் களமிறங்கி, குற்றவாளிகளான மண்ணப்புரம் பகவந்த், அவருடைய மனைவி லைலா மற்றும் பெரும்பாவூரைச் சேர்ந்த முகம்மது ஷாபி ஆகியோரைக் கைது செய்திருக்கிறார்கள்.
இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் சிட்டி கமிஷனர் நாகராஜ், இந்த விவகாரம் குறித்துச் சொல்லும்போது....
"ரொம்பவும் சிக்கலான வழக்கு இது. நீண்ட தேடல்களுக்குப் பிறகு, காணாமல் போன இருவரும், தினமும் சாப்பிடும் ஓட்டலில் விசாரித்தோம். அது, முகம்மது ஷாபி என்பவரின் மனைவி நடத்திவரும் ஓட்டல். அங்குதான் துப்பு கிடைத்தது. இங்கு சாப்பிட வரும்போதெல்லாம், அந்த இருவரும் முகம்மது ஷாபியிடம், எங்க பண நெருக்கடி தீருகிற மாதிரி, எதாவது ஒரு நல்ல வேலையிருந்தால் சொல்லுங்கள் என்று கேட்பார்களாம். இதையறிந்ததும், அந்த ஷாபியைக் கண்காணிக்க தொடங்கினோம். உடனே அவர், தன் ஓட்டலைப் பூட்டிவிட்டுத் தலைமறைவானார். இதனால் விசாரணையை வேகப்படுத்தினோம்.
அதேநேரம் காணாமல் போன ரோஸ்லின் மற்றும் பத்மாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர்கள் கடைசியாக இருந்த இலந்தூர் பகுதியைக் காட்டியது. அந்த ஸ்பாட்டுக்குப் போனபோது, அங்கே ஒரு மர்ம பங்களா இருந்தது. அதில் வசித்துவந்த பகவந்தையும் லைலாவையும் பிடித்து விசாரித்தபோதுதான், அந்த பகீர் உண்மைகள் வெளியாயின''’என்றவர், அடுத்து கிடைத்த தகவல்களையும் அடுக்கினார்.
"பகவந்தும் அவர் மனைவி லைலாவும் ஆயுதவேத மசாஜ் தொழிலை நடத்தி வந்திருக்கிறார்கள். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்நேரத்தில் ஸ்ரீதேவிங்கிற பெயரில் ஷாபி, ஒரு முகநூல் கணக்கைத் தொடங்கி, மாந்த்ரீகம் முறையில் செல்வம் பெருக வழி ஏற்படுத்தி தரப்படும்னு விளம்பரம் செய்திருக்கிறார். அவரது மோசடி வலையில் பங்களாவாசிகளான லைலாவும் பகவந்தும் விழ, உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கொட்ட, சீக்ரெட்டாக ஒரு நரபலி பூஜை சேய்யவேண்டும் என்று ஆசை காட்டி, 16 லட்ச ரூபாய் ரேட் பேசி, 5 லட்ச ரூபாயை அட்வான்ஸாகவும் வாங்கி இருக்கிறார் ஷாபி.
நரபலிக்கு ரோஸ்லினைத் தேர்ந்தெடுத்த ஷாபி, அவரைத் தொடர்புகொண்டு, "கை நிறைய சம்பாதிக்க வழி இருக்கு, என் நண்பன் ஒருவன் பலான படம் எடுக்கிறான். முகம் தெரியாது, நீ நடித்தால் ஏகத்துக்கும் பணம் கிடைக்கும்'' என்று ஆசை காட்டி, அந்த பங்களாவுக்கு வரவழைக்கிறான் ஷாபி. அப்படி வந்த ரோஸ்லினை நிர்வாணமாக்கி, கை, காலைக் கட்டி வைத்து, பூஜை செய்து, லைலா, பகவந்துடன் சேர்ந்து 40 துண்டுகளாக வெட்டி ரோஸ்லினை நரபலி கொடுத்திருக்கிறான் கொடூரனான ஷாபி. வழிந்த ரத்தத்தை பங்களாவில் தெளித்திருக்கிறான். இதன்பின் இரண்டு குழி வெட்டி, தலா 20 துண்டுகளாக உப்பு தடவி ரோஸ்லின் உடலைப் புதைத்துவிட்டு, அதன்மேல் மஞ்சள் செடியை நட்டிருக்கிறார்கள்.
இதன் பிறகும் பகவந்துக்கு வருமானம் பெருகாததால், கொடுத்த பணத்தை பகவந்த் திருப்பிக் கேட்க, "உங்களுக்கு சாபம் இன்னும் தீரவில்லை. அதனால் மீண்டும் ஒரு பெண்ணை நரபலி கொடுக்கலாம்'' என்று ஷாபி கதை விட்டிருக்கிறான். இதைத் தொடர்ந்து பத்மாவையும் "சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்றும், அட்வான்சாக 5 லட்ச ருபாய் வாங்கித் தருகிறேன்' என்றும் ஆசைகாட்டி, அந்த பங்களாவுக்கு வரவழைத்திருக்கிறான் ஷாபி. பழைய பாணியிலேயே பத்மாவும் துடிக்கத் துடிக்க நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார். அவரையும் அதே பாணியில் புதைத் திருக்கிறார்கள்'' என அந்த நரபலி திகில் கதையைச் சொல்லி, அவர் நம்மையும் சில்லிட வைத்தார்.
இந்த நரபலி வழக்குதான், இப்போது கேரளாவையே உலுக்கிவருகிறது.
___________
திகில் பட்டியல்
ஏற்கனவே கேரளாவில் 1955, ஏப்ரல் 23-ம் தேதி காட்டாகடையில் 15 வயது சிறுவனை, அவனுடைய தாத்தா நரபலி கொடுத்து திகிலூட்டினார். இதேபோல் 1956 செப்டம்பர் 29-ம் தேதி குருவாயூரில் யானைக்கு நோய் தீர வேண்டி, கோவில் பின்வாசலில் உறங்கிய காசி என்பவரை, அப்பாசாமி என்ற கிருஷ்ணன்குட்டி கழுத்தை அறுத்து நரபலி கொடுத்து, கேரளாவையே வியர்க்க வைத்தார். இதன்பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தன.
1973, மே 29-ம் தேதி கொல்லம் எல்.பி. பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த தேவதாசை, பெற்றோர்களே நரபலி கொடுத்தனர். 1983 ஆகஸ்ட் மாதம் வயநாட்டில் பள்ளி ஆசிரியர் கேளப்பனைக் கடத்திச் சென்று, லெட்சுமி மற்றும் ராமச்சந்திரன் என்னும் இருவர் கோயிலில் வைத்து, உடலை இரண்டு துண்டாக்கி நரபலி கொடுத்தனர். 1996 டிசம்பர் 31-ம் தேதி காயங்குளத்தில் 6 வயது சிறுமி அஜிதாவை கடத்திச் சென்று ஒரு தம்பதியினர் நரபலி கொடுத்தனர். 2004 -ல் பட்டாம்பியில் ரயில் நிலையத்தில், இரவு பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையைக் கடத்திச் சென்று, ஒரு தம்பதிகள் சேர்ந்து நரபலி கொடுத்தனர். 2021 பிப்ரவர் 5-ம் தேதி பாலக்காடு புதுப்பள்ளியில் 6 வயது மகன் அமலினை தந்தை ஷாஹிந்த், பாத்ரூமியில் வைத்து கை கால்களைத் துண்டாக்கி, நரபலி கொடுத்தார். இவையெல்லாம் மூட நம்பிக்கையின் அடிப்படையிலேயே நடந்திருக்கின்றன.
2014-ல் கேரள டி.ஜி.பி.யாக இருந்த ஹேமசந்திரன், நரபலிக் கொடூரங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளோடு கூடிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பாக அப்போதைய உள்துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதாலாவிடம் ரிப்போர்ட் ஒன்றைச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.