சாத்தான்குளம் இரட்டை படுகொலை வழக்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ராஜராஜனிடம் நாம் பேசியபோது, ’""சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பெனிக்ஸின் மரணம் மிகப் பெரிய மனித உரிமை மீறல். காவல்துறையின் இந்த குற்றத்தை மறைப்பதற்காக அரசு இயந்திரம் செயல்பட்டிருக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் அநீதி இழைத்திருக்கிறது. காவல்துறையை கட்டுப்படுத்தும் உள்துறையை கையில் வைத்திருக்கும் போலீஸ் அமைச்சரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘இந்த சம்பவத்தில் நேர்மையாக விசாரணையின் முடிவுகளை தெரிந்துகொண்டு விரிவான அறிக்கை தரப்படும்’என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
இதற்கு மாறாக, மூச்சுத் திணறலால் அவர்கள் இறந்துள்ளனர் என அழுத்தமாகச் சொல்கிறார் முதல்வர். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் கடந்த 24-ந்தேதி இந்த மரணம் தொடர்பாக எந்த இன்வெஸ்டி கேஷனும் ஃபீல்டில் நடக்கவில்லை. கிரவுண் ரியா லிட்டிப்படி இது தொடர்பாக யாரிடமும் எந்த கோப்புகளும் சட்டரீதியாக அன்றைக்கு கிடையாது. போஸ்ட்மார்ட்டமும் நடக்கவில்லை. அப்படியிருக்கையில், எந்த தகவல்களின் அடிப்படையில் இயற்கை மரணம் என்பதாக முதலமைச்சர் அறிவித்தார்? அப்படி அவர் அறிவித்து விட்டபிறகு, புலனாய்வு செய்யும் காவல்துறையினர் முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக உண்மைகளை நிலை நிறுத்திவிட முடியுமா? குற்றத்தை மறைக்கவும் குற்றவாளிகளை காப்பாற்றவும் முதல்வர் முயற்சிக்கிறார் என கருத வேண்டியுள்ளது. தனது கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையினரால் ஆட்சிக்கு ஏற்படும் கெட்ட பெயரை தடுப்பதற்காக அவர் அப்படி சொல்லியிருக்க வேண்டும்.
அப்படி சொல்லியிருந்தால் அது கிரிமினல் குற்றம். அதுவும் அதிகப்பட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடிய குற்றம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் இப்படித்தான் பேசினார். சாத்தான்குளம் இரட்டை மரணத்தில் முன்னுக்குப் பின் முரணாக பொய்யான தகவல்களைச் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முதலமைச்சர் முயற்சிக்கிறார் என்கிற அடிப்படையில்தான், அவரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணை நேர்மையாக நடந்து முடியும்வரை காவல் துறையை கட்டுப்படுத்தும் உள்துறை இலாகா எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கக்கூடாது. நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே வழக்கு விசாரணை நடக்கும் வகையில் எனது மனுவை அவரச வழக்காக எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்திருக்கிறேன்'' என்கிறார் ராஜராஜன்.
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு எடப்பாடியையும் அவரது அமைச்சரவையையும் திடுக்கிட வைத்துள்ளது. அரசின் தலைமை வழக்கறிஞரிடமும், குற்றவியல் வழக்கறிஞர்களிடமும் தனக்கு எதிரான வழக்குப் பற்றி விவாதித்துள்ளார் எடப்பாடி. அவர்களும், நீங்கள் பேசியது சட்டப்படி தவறு என்றாலும், உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியுள்ளனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் என்பவர் அரசு ஊழியர். அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிபிரமாணம் எடுத்துக்கொள்ளும் அவர், உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லக் கூடாது. அரசின் நன்னடத்தை விதிகளின்படி நடந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்த இரண்டையும் சாத்தான்குளம் இரட்டை மரணம் விசயத்தில் மீறிவிட்டார். இதனால் முதலமைச்சர் பதவி வகிக்கும் தகுதியை அவர் இழந்துள்ளார் என இந்திய அரசு அங்கீகரித்திருக்கும் உலக மனித உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர்கள், இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை 3-ந்தேதி சந்தித்தார் முதல்வர் எடப்பாடி. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடந்த அந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, ’சந்திப்பில் சாத்தான்குளம் விசயம்தான் தீவிரமாக பேசப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான நீதிபதி தத்து, சாத்தான்குளம் விவகாரம் குறித்து தங்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கான விளக்கத்தை அறிக்கையாக தருமாறு கவர்னர் பன்வாரிலாலுக்கு உத்தரவிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதனடிப்படையில்தான் முதல்வர் எடப்பாடியை ராஜ்பவனுக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் கவர்னர். அவரிடம், மருத்துவமனையில்தான் இருவரும் இறந்தனர் என முதல்வரும் டி.ஜி.பி.யும் சொல்ல, அதற்கு காரணம் போலீஸ் தானே என கவர்னர் கேட்டதில் இருவரும் அமைதியாகி விட்டனர்.
போலீஸ் ஸ்டேசன்களில் நடக்கும் குற்றங்கள்-மாவட்ட அமைச்சர்களின் ஆதிக்கம் எனப் பலவற்றையும் அறிந்தே வைத்திருக்கிறார் கவர்னர் என சுட்டிக்காட்டுகிறார்கள்.
எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை பல திருப்பங்களுக்கு வழி வகுக்கும் என்றும், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதால் சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் தோல்வியடைந்திருப்பதாக கவர்னர் மூலம் ரிப்போர்ட் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தமிழக அரசியல் மேலிடங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
-இரா.இளையசெல்வன்