டிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாநாட்டுக்கு மதுரையைத் தேர்வுசெய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே அக்கட்சியினரும் நிர்வாகிகளும் ஏற்பாடுகளில் தீவிரமாயிருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலை முதலே த.வெ.க. தொண்டர்களால் நிறையத் தொடங்கியது மதுரை.

மதுரை மாநாட்டு கூத்துகள்...

Advertisment

* மாநாட்டுக்காக மதுரை -தூத்துக்குடி நெடுஞ்சாலையிலுள்ள பாரபத்தி பகுதியில் விஜய்க்கு நெருக்கமான ஒருவரின் 506 ஏக்கர் அளவுள்ள பிரம்மாண்டமான இடத்தில் மாநாட்டு மேடை முதல் இருக்கைகள் வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு மேடையின் உச்சியில் அண்ணா, எம்.ஜி.ஆரோடு, விஜய் இடம்பெற்றிருக்க, "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என த.வெ.க.வினர் எதிர்பார்த்து தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டிற்கு முந்திய நாளே த.வெ.க.வின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் வந்துவிட்டனர். அவர்களுக்கு மாநாடு நடக்குமிடத்துக்கு அருகிலுள்ள நட்சத்திர விடுதியில் அறை ஒதுக்கியிருந்தனர். 

* மாநாட்டுக்கு முந்தைய நாள், விஜய் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பம் நடும் பணி நடைபெற்றது. ஆனால் கொடிக்கம்பத்துக்கான தரைத்தள கான்கிரீட் பணி முன்கூட்டியே செய்யப்படவில்லை. சரிவரக் கான்கிரீட் காயாத நிலையில், முறையான, திட்டமிடலின்றி நடப்பட்ட கொடிக்கம்பம் அப்படியே சரிந்து, அங்கிருந்த காரை நசுக்கியது. அதிர்ஷ்டவசமாக காரிலும், கொடிக்கம்பம் விழுந்த இடத்திலும் யாரும் இல்லாததால் காயமோ, உயிராபத்தோ ஏற்படவில்லை. இதையடுத்து த.வெ.க. தலைவர் கொடியேற்றுவதற்காக மறுநாள் 40 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.

vijay1

Advertisment

* மாநாட்டிற்கு இதற்காகத்தான் வந்தோம் என்பதுபோல "இதே இடத்தில்தான் இங்கதான் கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது' என மாநாட்டுக் கொடியின் மரம் கீழே விழுந்து எழுந்த இடத்தை வீடியோவாக, புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

கொடிக்கம்பம் விழுந்ததை, புஸ்ஸி ஆனந்த் சம்பவ இடத் திற்கு வந்து பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போதே விஜய் அவரின் லைனில் வந்து, "கவலைப்படாதீர்கள் டி.வி.யில் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன். உயரம் குறைவாக வேறொரு கொடிக்கம்பம் நட்டுவைக்கவும்'’என்று சொல்லி போனை கட் செய்தார். த.வெ.க. மாநாட்டுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வரவேற்பு பேனர் வைத்த காளீஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் வர, அதிர்ச்சியானார் ஆனந்த். அடுத்து, மாநாட்டுக்கு 1,50,000 இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டதாக த.வெ.க. தரப்பில் கூறப்பட்ட நிலையில், வெறும் 48,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாம். இப்படி சில விஷயங்கள் எதிர்மறையாகவே நடந்தது நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சகுனம் சரியில்லையோ என யோசிக்கவைத்தது.

இதுதவிர மாநாட்டு பாதுகாப்பு பணிகளில் 3500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பவுன்சர்களும், பெண்கள் பாதுகாப்புக்காக 500 பெண் பவுன்சர்களும் இருந்தனர். மாநாட்டு அரங்கத்திற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 600 டாக்டர்கள், 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. 

Advertisment

* ஏறக்குறைய 1 லட்சம் தொண்டர்களுக்கு மேலாக சாரை சாரையாக வந்துகொண்டிருப்பவர்களில் மாணவ, மாணவியரே அதிகம். கட்சித் தொண்டராக வருவது என்பதைக் காட்டிலும்           ஏதோ பிக்னிக் வந்ததுபோல் மாநாட்டுத் திடலில் சுற்றி வருகின்றனர்.

* மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில், மிக்சர் குளுக்கோஸ் டப்பா கொடுக்கப்பட்டன. அனைத்தும் தயாராக இருந்த நிலையில் விஜய் வந்துவிட்டார் என்ற பரபரப்பு தொற்றிக்கொள்ள, அனைவரும் அருகிலிருக்கும் நட்சத்திர விடுதியை நோக்கி படையெடுக்க, ஆனந்த் மட்டும் மாநாட்டுத் திடலிலேயே இருந்தார். 

* விஜய்யோடு, புஸ்ஸி போனில் பேசிகொண்டிருக்க... விஜய் எங்கு இருக்கிறார் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. அப்போது மாநாட்டு திடலுக்குப் பின்புறம் வரிசையாக 6 கேரவன்கள் நிற்க, அதைச்சுற்றி பவுன்சர்கள் குவிக்கபட்டிருந் தனர். நாம் அங்கு செல்ல முற்பட, நம்மை விட மறுத்தனர். கேரவனில் விஜய் இருப்பதாக தகவல் வந்தது. அங்கிருந்தபடியே சி.சி.டி.வி. மூலம் பார்த்துக்கொண்டு ஆனந்திற்கு உத்தரவுகள் பிறப்பித்தார். மாநாட்டிற்கு அருகிலுள்ள நட்சத்திர விடுதிக்கு இரவு 1 மணிக்குச் சென்றவர், மறுநாள் காலை 5.30க்கே மாநாட்டுப் பந்தலைப் பார்வை யிட்டுவிட்டு மறுபடியும் கேரவனிற்குள் சென்றுவிட்டார். இதற்கிடையே விஜய்யின் அம்மாவும் அப்பா சந்திரசேகரும் முந்தைய நாளே மதுரைக்கு வந்து மாநாட்டுக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கினர். 

vijay2

* மறுநாள் 21-ஆம் தேதி காலையி லேயே மாநாட்டை நோக்கி தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். மாநாட்டு மேடைக்குச் செல்லும் வழியில் போட்டிருந்த இரும்புத் தடுப்புகளை பிய்த்தும், அவற்றின் மேல் ஏறியும் குறுக்கு வழியாக தொண்டர்கள் உள்ளே நுழைந்தனர். ஆனந்த் எவ்வளவோ சொல்லியும் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இதனை யடுத்து இதனைத் தடுக்க கம்பி வேலியில் கிரீஸைத் தடவி ஏறிக் குதிப்பவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

மாநாட்டு மைதானத்திலிருந்த பனை மரத்தில் தொண்டர்கள் ஏற முயற்சித்த தால், "மரத்துல யாரும் ஏறாதீங்க' என புஸ்ஸி ஆனந்த் எச்சரித்தும் கேட்காததால், மரத்தைச் சுற்றி தகரத்தால் மூடி, ஏற முடியாதபடி செய்தனர்.

* விஜய்யை கவருவதற்காக மாநாட்டிற்கு ஸ்கேட்டிங்கில் ஒரு பெண் ணும், குட்டி சைக்கிளில் நாகப்பட்டினம் சந்துருவும் வருகை தந்துள்ளர்.

* மாநாட்டின் சிறப்பம்சமாக த.வெ.க.வின் புதிய தீம் பாடல் ஒன்றும் இந்த மாநாட்டையொட்டி வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இப்பாடலை, விஜய் வெளியிடவுள்ளார். பிரம்மாண்டமான நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்துவிடுவ தில்லை. திட்டமிடாத சில நிகழ்ச்சிகளும் சேர்ந்தே நடக்கும். மாநாட்டுக்கு முந்தைய இரவே வந்தவர்கள் மாநாட்டுப் பந்தலில் இடம்பிடிக்க அலைமோதியதையும், அவர்களைக் கட்டுப்படுத்த நிர்வாகிகள் திணறியதையும் பார்க்க முடிந்தது.

* மாநாட்டில் போதுமான தண்ணீர் வசதி, இருப்பிட வசதி எதுவும் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகிய தொண்டர்கள், மாநாட்டில் கொடுக்கும் ஒரு பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் கேனுக்காக கையேந்தியது குறிப்பிடத்தக்கது.

* மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்களை வழிமறித்து அங்கு நின்ற பெண்கள் மோர் வழங்கினர். அவர்கள் அதைக் குடித்தபிறகு மோருக்கு 50 ரூபாய் வரை கேட்க, இலவசம் என நினைத்துப் பருகிய தொண்டர் களுக்கும் மாநாட்டில் மோர் விற்பனை செய்த பெண்களுக் கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பசியோடு காத்திருந்த தொண்டர்கள் அங்கிருந்த தற்காலிக உணவுக் கடைகளை நாட... சாப்பாடு ரூபாய் 70-க்கும், மோர் இல்லா கூழ் கிளாஸ் 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

* மாநாட்டில் மது அருந்தக் கூடாது என்ற உத்தரவையும் மீறி, மாநாட்டுக்கு வந்தவர்கள், கண்மண் தெரியாத உற்சாகத்தில் கார் நிறுத்து மிடத்தையே பாராக மாற்றி, கையோடு கொண்டுவந்த மதுப் பாட்டிலைத் திறந்து கிளாஸில் நீர் கலந்து மது அருந்தும் காட்சிகளையும் தாராளமாகப் பார்க்க முடிந்தது. இதில் ஆவியூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது தனிக்கடை.

* மதுரையில் மாநாட்டு தினத் தில் வெயில் கொளுத்திய காரணத்தால் பலர் வெயில் தாளாமல் மயங்கிவிழுந் தனர். மாநாட்டில் மதியம் 12:00 மணி வரையில் மட்டும் 178 பேர் மயங்கி விழுந்து, அவர்களுக்கு சிகிச்சையளிக் கப்பட்டது. மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் நிழலைத் தேடி ஒதுங்கத் தவித்தனர். ஆம்புலன்ஸ் செல்லமுடியாத பகுதியில் ட்ரோன்கள் மூலம் முதலுதவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

* "உன் வெற்றிக்கு வானமே எல்லை. நீ அரியணை ஏறும் நாள் வரும்'’என விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், த.வெ.க. மாநில மாநாட் டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

* த.வெ.க. மாநில மாநாட்டுப் பந்தல் மேடையில் எம்.ஜி.ஆரின். உருவம் இடம்பெற்றுள்ளதை சூசகமாகக் குறிப்பிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “"புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கும் நமது தலைவர் தேவைப்படுகிறார்'” என விமர்சித்திருந்தார். இதையடுத்து பந்தலில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின். உருவத்தை அகற்றப்போவதாக ஒரு பேச்சு கிளம்பியது.

vijay3

* மதுரை -விருதுநகர் மாவட்ட எல்லையையொட்டி த.வெ.க. மாநாடு நடைபெறுவதால், அப்பகுதியிலுள்ள ஆவியூர் கிராமத்திற்குள் பேருந்துகள் வருவது தடைபட, பள்ளிக்குச் செல்லும் மாணவ -மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

* மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் பந்தல் அருகே செல்ல முயல, அவர்களைப் போலீசார் தடுத்துநிறுத்தினர். இதனால் கட்சித் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல மாநாட்டுத் திடலுக்குள் நுழைய வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப் படுவதால், ஆம்புலன்ஸைக் கொண்டுவருவதுபோல அதற்குள் தொண்டர்கள் ஏறிவர... அவற்றையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சில இடங்களில் வேனில் வரும் தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் டோல்கேட் தடுப்புகளையும் இடித்துச் செல்வதாக புகார் எழுந்தது. இன்னும் சில தொண்டர்கள் மதுரை அரசுப் பேருந்துகளின் உச்சியில் ஏறி நின்று, உற்சாகத்தில் அத்துமீறியதையும் பார்க்க முடிந்தது.

* அனுமதியின்றி பல இடங்களிலும் விஜய் தரப்பினர் பேனர்களை வைத்ததோடு,  மதுரை -தூத்துக்குடி நெடுஞ் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை எல்லாம் அவர்கள் உற்சாக மிகுதியில் உடைத்தெறிந்து, ஏரியாவாசிகளைப் பதற வைத்தனர். இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை புகார் சொன்னதால், நடிகர் விஜய் மீது வழக்கைப் பதிவு செய்ய காவல்துறை தயாராகிவருகிறது.

* மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் அருகிலுள்ள மீனாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்ல முயல, மது அருந்தியது காரணமாக அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் விஜய்யின் ரசிகர்களாகவே வந்தனர்... தொண்டனாக வரவில்லை என்பதே நிதர்சனம்!


________________
முதலமைச்சருக்கு நன்றி!

vijaybox

நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் சக்திவேல், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி பணியிலிருக்கும்போதே உடல்நலக்குறைவால் இயற்கையெய்தி னார். “"எழுத்தாற்றல் மிக்க தம்பியை இழந்தது நக்கீரன்!'”என்று நக்கீரன் ஆசிரியரும், நக்கீரன் குடும்பத்தினரும் கலங்கி நின்றதோடு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர். கவிஞரும் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான இரா.த.சக்திவேல் மறைவுக்கு "ஆர்.டி.சக்திவேல் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகையுலக நண்பர்கள் அனை வருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள் கிறேன். மறைந்த பத்திரிகையாளர் ஆர்.டி.சக்திவேல் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்' என ஆறுதல் அறிக்கை வெளியிட்டு, சக்திவேல் குடும்பத்தினருக்கு             நிதியும் அளித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்து என்ன என்று அக்குடும்பம் திகைத்து நிற்கையில், காலமறிந்து உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நக்கீரன் குடும்பம் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறது.