வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் சிக்கிய முன்னாள் இந்திய வனப்பணி அதிகாரி வெங்கடாச்சலம் மீது, வனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
நடந்த முறைகேடுகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மட்டு மல்லாது, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் கருப்பண்ணனுக்கும் வேறுசில முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை யூகிக்கிறது.
1983-ஆம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு நேரடியாகத் தேர்வாகி தமிழ்நாடு வனத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பதவிவகித்த வெங்கடாசலம்,
கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற பின்னர் இவர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கடந்த ஆட்சியில் நியமிக் கப்பட்டார். தலைவராக நிய மிக்கப்பட்ட வெங்கடாசலம், தனது பதவியைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 13.5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுமார் 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தனக்கட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வெங்கடாசலத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்த 15.25 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை சென்னை வனச்சரக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
வனத்துறை சட்டத்தின்படி உரிய அனுமதி பெறாமல் சந்தனக் கட்டையை வைத்திருந்தால் அது குற்றமாகும். குறைந்தபட்சம் ஒருவர் ஐந்து கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட கலைப்பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த சட்டம் அனுமதியளிக்கிறது. எனவே வனத் துறையில் பணிபுரிந்து, உயர் பதவிகளுக்குச் சென்ற வெங்கடாசலம் மீது வனத்துறை, சந்தனமர பாதுகாப்பு உள்பட மூன்று சட்டங்களின்கீழ் வழக்குபதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர் அதிகாரிகள்.
இந்நிலையில் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களில் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனுக்கு தொடர்பு இருப்பதாக, சிக்கியுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எடப்பாடிக்கு ஆல் இன் ஆலாக இருந்துவந்தவர் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் வெங்கடாசலம் வனத்துறையில் இருந்தபோது பல விசயங்களில் இளங்கோவனுக்காக கனகச்சிதமாக காரியங்கள் செய்துகொடுத்திருந்தார். மேலும் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் அதிகமான நிறுவனங்கள் இருந்துவரும் சூழ் நிலையில், அங்கு சில விசயங்களை சாதித்துக் கொள்ள தோதான நபரை இ.பி.எஸ். எதிர் பார்த்திருந்தாராம். அந்த நேரத்தில் வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் பணி ஓய்வுபெறவே, இளங்கோவனும், வெங்கடாசலமும் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இளங்கோவனிடம் ஏற்கனவே நம்பகத்தன்மையாக இருந்தவந்த காரணத்தாலும், வெங்கடாசலத்தை ஈ.பி.எஸ்.ஸிடம் அழைத்துச்சென்று அறி முகப்படுத்தி அவருக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பொறுப்பை வாங்கித் தந்துள்ளார் இளங்கோவன்.
அதுமுதல் இவர்களின் சதுரங்க வேட்டை தொடங்கியுள்ளது. தொழிற்சாலைக்கான சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்று வழங்க, ஒரு நிறுவனத்திற்கு 20 லட்ச ரூபாய் தொடங்கி ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் வாங்கிக் குவித்துள்ளனர். அப்படி அவர் செய்தது எல்லாமே இளங்கோவனின் தலைமையிலும் மேலிடத்து ஆசியோடும் நடந்துள்ளதாம். அதற்கு கிடைத்த சன்மானம்தான் தற்போது லஞ்சஒழிப்புத் துறையால் சென்னை வேளச்சேரி தொடங்கி 5 இடங்களில் அதிரடி சோதனையின்போது சிக்கிய பலகோடி மதிப்பிலான சொத்துகளும் ஆவணங்களும்.
முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், வெங்கடாசலத்துக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளதை ஆவணங்களின் வழி கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தகட்ட மாக முன்னாள் அமைச்சர் மீது அழுத்தமாக கண்பதித் துள்ளது. கொடநாடு விவகா ரத்தில் கனகராஜ் கொலை வழக்கில் கனகராஜ் ஓட்டிச் சென்ற காரின் உரிமையாளர் இளங்கோவின் நண்பர் என்பதால் அவரும் விசாரணை வலையில் சிக்கியுள்ள நிலையில், அதில் தன் பேர் அடிபடாமல் சமாளிக்கவே இ.பி.எஸ். படாதபாடு படும் நிலையில்... அடுத்தடுத்து பிரச்சினையை இழுத்துவிடுகிறார்களே என்ற கோபத்தில் இருக்கிறாராம் எடப்பாடி.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரை தனியாக சந்தித்துப் பேசிய அவர், உஷாராக இருந்துகொள்ள ஆலோசனை வழங்கி யுள்ளதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கின்றனர். லஞ்சஒழிப்புத் துறையோ, விசாரணையை வேகப்படுத்தியுள்ள நிலையில்... வரும் நாட்களில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் சிக்கலாம் எனத் தெரிகிறது.