கும்பகோணத்தில் நிதி நிறுவனம் என்ற பெயரில், ஒருகோடி ரூபாய் கொடுத்தால் 3 கோடி ரூபாய், 2 கோடி ரூபாய் கொடுத்தால் ஆறு கோடி ரூபாய் என பணத்தை மும்மடங்காக்கித் தருவதாகக் கூறி ஏமாற்று வேலையில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர்களான ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடி குறித்து ஏற்கனவே நம்முடைய நக்கீரன் இதழில், "ஒரு கோடி கொடுத்தால் 3 கோடி! பா.ஜ.க. தயவில் ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என்ற கட்டுரை எழுதியிருந்தோம். அதையடுத்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய நிலையில், அந்த விசாரணையில் சுணக்கம் இருப்பதாகத் தெரிந்ததால், கடந்த ஆகஸ்ட் 04-06 நக்கீரன் இதழில், 'ஹெலிகாப்டர் சகோதரர்களை தப்ப விடுகிறதா காவல்துறை?' என்ற தலைப்பில், ஹெலிகாப்டர் சகோதரர்களைத் தப்பவைப்பதற்காக மெத்தனமாக நடக்கும் விசாரணை குறித்து எழுதியிருந்தோம். அதை யடுத்து தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதனைத் தேடும் படலம் வேகமெடுத்தது. இறுதியாக, தலைமறைவாகத் திரிந்த சகோதரர்களை, சுற்றிவளைத்து போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் தீட்சிதர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்களையும், வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு மூன்று இடங்களில் பால் பண்ணையும் நடத்திவந்தனர். அதைவிடப் புதிதாகவும், பிரமாண்டமாகவும், ஹெலிகாப்டரை வாடகைக்கு விடும் தொழிலிலும் ஈடுபட்டுவந்தனர். அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் எங்கு செல்வதென்றாலும் தங்களது ஹெலிகாப்டரில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். எனவே, இவர்களுக்கு கும்பகோணம் பகுதியில், ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றே பெயராகிப்போனது.
இவர்களது நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் மூன்று என்பது போல அதிரடியான கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்தனர். பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்ட தால், பா.ஜ.க. முக்கிய பிரமுகர்களின் பினாமிகள் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்ட னர். பினாமிகளாக இருப்பதால், கறுப்பை வெளுப் பாக மாற்றுவதற்காக ஒரு கோடி கொடுத்தால் மூன்று கோடி ரூபாய் என்று இரண்டு மூன்று மடங்குகளாக பணத்தைத் திருப்பித்தருவது இவர் களுக்கு எளிது என்பது போன்ற எண்ணத்தைப் பரவ விட்டனர். எனவே இவர்களை நம்பி சாதாரண மக்களிலிருந்து, தொழிலதிபர்கள்வரை நம்பிக்கையோடும், பெரிய எதிர்பார்ப்போடும் கோடிக்கணக்கில் முதலீடாகக் கொடுத்தனர்.
லட்சமும், கோடியுமாக மக்கள் கொடுக்கும் பணத்திற்கு ஒரு அட்டை மட்டுமே உத்தரவாதமாக (ள்ன்ழ்ங்ற்ஹ்) அளித்துள்ளனர் மோசடியாளர்கள். இந்த பண மோசடி வேலையில் அவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டுள்ள னர். மோசடி சகோதரர்களிடம் பணியாற்றிய ஏஜெண்டுகளே கோடிக்கணக்கில் கமிஷனாகப் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில், கொடுத்த வாக்குறுதி களுக்கு ஏற்றவாறு திருப்பிக் கொடுத்தனர். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் ஆசையைத் தூண்டியுள்ளனர். இப்படியாக தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு குறளி வித்தைகளைச் செய்தவர்கள், வாடிக்கையாளர்கள் மிகுந்த நம்பிக்கையோடு அள்ளியள்ளிக் கொடுத்து முதலீடு செய்யத் தொடங்கியதும், வாங்கிய தொகைக்கு உரியஅளவு பணத்தைத் திருப்பித் தராமல் இப்போது, பிறகு என இழுத்தடிக்கத் துவங்கினர்.
இதற்கிடையில், பாதுகாப்புக்காக பா.ஜ.க.வில் ஐக்கியமாகி பல கூட்டங்களில் கலந்துகொண்டதோடு, வேல் யாத்திரை வந்த அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவர் முருகனுக்கு உபசரிப்பு செய்தனர். அந்த உபசரிப்பின்போது அவருக்கு லட்சக் கணக்கான நிதியும் கொடுத்ததாக அப்போது பா.ஜ.க.வில் பேசப்பட்டது. அதேபோல், கருப்பு முருகானந்தம், எச்.ராஜா உள்ளிட்டவர்களும் இரு சகோதரர்களோடு நெருக்கமாக இருந்தனர். இந்த நிலையில், பணம் கொடுத்து ஏமாந்தவர்களுள் ஒருவரான ஜபருல்லா-பைரோஸ்பானு தம்பதியினர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி. என பல அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையைத் துவங்கினர். இதற்கிடையில் இரு சகோதரர்களும் தலைமறைவாயினர். கணேஷின் மனைவி அகிலாண்டேஸ்வரி, கணக்கராக இருந்த வெங்கடேஷ், மேனேஜராக இருந்த ஸ்ரீதரன், அவரது சகோதரி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு வீட்டிலிருந்த 11 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடிவந்தபோதும், ஹெலிகாப்டர் சகோதரர்கள் வெளிநாடு தப்பிவிட்டனர், தனித்தீவுக்குச் சென்றுவிட்டனர் என்கிற வதந்தியான செய்திகளும் பரபரப்பாகப் பேசப்பட்டன. ஆனால், நமது நக்கீரனில், "இந்த விசாரணையில் எங்கோ தவறு நடக்கிறது, இருவரும் வெளிநாடு செல்ல வாய்ப்பே இல்லை... தஞ்சை மாவட்டச் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் தலை மறைவாக இருக்கின்றனர்'’என எழுதியிருந் தோம். நாம் சொன்னது போலவே புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்களையும், கடந்த 6-ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இப்போது இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் போலீசில் புகாரளிக்கத் தொடங்கியுள்ளனர்.