"ஆணையரும் உதவி ஆணையரும் கூட்டு சேர்ந்து தொழிலாளர் நலத்துறையையே லஞ்ச ஊழல்களால் சீரழித்து விட்டார்கள். அதுவும், நிழல்’ ஆணையராக ஆட்டம் போட்ட உதவி ஆணையர் வளர்மதியை நீதிமன்றமே கண்டித்தும்கூட 100-க்கு மேற்பட்ட புகார்கள் குவிந்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று குற்றஞ்சாட்டி குமுறி வெடிக்கிறார்கள் தொழிலாளர் நலனில் அக்கறைகொண்ட துறை அதிகாரிகள்.
மீட்டிங் சீட்டிங் வளர்மதி!
10 மணியிலிருந்து 6 மணிவரை மீட்டிங்கில் இருந்த நேரங்களில்கூட கடைகளில், அலுவலகங்களில் சென்று ஆய்வு செய்ததுபோல் திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் வளர்மதி லஞ்சம் வாங்கிக்கொண்டு சான்றிதழ் கொடுத்ததாக கண்டுபிடித்த அப்போதைய தொழிலாளர் துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ், 17-பி சார்ஜ் மெமோ (ஒழுங்கு நடவடிக்கை) கொடுத்து வேலூர் மாவட்டத்திற்கு வளர்மதியை மாற்றிவிடுகிறார். இந்நிலையில், வளர்மதியின் ஆதரவாளர் சேதுமாதவன் என்கிற ஸ்டாம்பிங் இன்ஸ்பெக் டர் (முத்திரை ஆய்வாளர்) " முத்திரை போட வந்த கடைக்காரர்களிடம் வசூலித்த கட்டணத்தொகை மற்றும் வீக்லி ரிப்போர்ட்களை அனுப்பாமல் அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்' என்று கண்டு பிடித்த துணை ஆய்வாளர் ராஜ்குமார், அனுப்பச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்துகிறார். காதில் வாங்கிக்கொள்ளாத தால் வளர்மதிக்குப் பதிலாக வந்த உதவிஆணையர் சிவக்குமாரிடம் சேதுமாதவன் மீது ரிப்போர்ட் அனுப்புகிறார் துணை ஆய்வாளர் ராஜ்குமார். இதனால், சேதுமாதவனுக்கு 17ஏ சார்ஜ் கொடுத்ததும், உதவி ஆணையர் சிவக்குமார் மாற்றப் பட்டு அதே இடத்தில் மறுபடியும் வளர்மதியே வந்துவிட்டார்.
கமிஷனருடன் நட்பு!
ஆரம்பத்தில், ஆணையர் நந்தகோபால் தெரிந்தவர்களிடம் மட்டுமே கைவரிசை காட்டிவந்தார். இதற்கு, துணையாக இருந்தவர் ஸ்டெனோ கண்ணன். பிறகு, டி.சி.எல். எனப்படும் தொழிலாளர்துறை துணை ஆணையர் கமலக்கண்ணன் மூலம் லஞ்சக்கொள்கை கொண்ட உதவி ஆணையர் வளர்மதியின் நட்பு கிடைத்த பிறகுதான் ஆட் டம் அதிகமானது. அனைத்து அதிகாரிகளையும் நந்த கோபாலை வைத்து மிரட்ட ஆரம்பித்தார் வளர்மதி. யார், யாரெல்லாம் புரமோஷன் ஆகப்போகிறோர்களோ ஓய்வுபெறப் போகிறார்களோ, அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நந்தகோபால்+வளர்மதி லஞ்சக்கூட்டணி ஒரு மொட்டை பெட்டிஷனை தயார் செய்து அனுப்பிவிடும். பிறகு, ஆணையர் நந்தகோபாலே அழைத்து, மிரட்டி டீல் பேசி புகார் க்ளோஸ் செய்யப்பட்டுவிடும். உதவி ஆய்வாளர் வேலாயுதம், அசோக்குமார் என்கிற முத்திரை ஆய்வாளர்கள் என பலரும் இவர்களது பொய்ப் புகார்களால் பாதிக்கப்பட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், தமிழகம் முழுக்க போடப்பட்ட பல டிரான்ஸ்பர்களிலும் நந்தகோபால் + வளர்மதியின் பங்கு உள்ளது என்கிறார்கள்.
ஊழலை கண்டுபிடித்தவர் மீதே நடவடிக்கை!
இந்நிலையில், ராஜ் குமார் மீது பணிமாறுதலின் போதே கடுப்பில் வளர் மதிக்கு அதே திருவள்ளூர் மாவட்டத்திற்கு உதவி ஆணையர் பதவி கிடைத்த தும், லஞ்சம் வசூலித்து கொ டுக்காததால் துணை ஆய்வா ளர் ராஜ்குமார் மீது கோபம் இன்னும் அதிகமானது. முத்திரை ஆய்வாளர் சேது மாதவன் வீக்லி ரிப்போர்ட் அனுப்பாமல் லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்தியதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அதைக்கண்டுபிடித்து உயரதிகாரிக்கு தெரியப்படுத்திய துணை ஆய்வாளர் ராஜ்குமார் மீதே பழியைப்போட்டு அவர் கவனிக்கவில்லை என்று 17பி சார்ஜ் மெமோ கொடுக் கிறார் வளர்மதி. இதற்கு, ராஜ்குமாரின் விளக்கத்தைப் பார்த்த இணை ஆணையர் பொன்னுசாமியோ, இந்த நிதியிழப்புக்கும் துணை ஆய்வாளர் ராஜ்குமாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதை, உதவி ஆணையர் வளர்மதிதான் கவனித்திருக்கவேண்டும் என்று ரிப்போர்ட் கொடுத்ததோடு ராஜ்குமார் மீதான கடுமையான 17-பி தண்டனையை 17 ஏ-வாக குறைத்துவிட்டார்.
இதுகுறித்து, உதவி ஆணையர் வளர்மதியிடம் டி.சி.எல். பொன்னுசாமி விளக்கம் கேட்டதால் கமிஷனர் நந்தகோபாலிடம் போட்டு கொடுத்துவிட்டார் வளர்மதி. "பொன்னுசாமியை அழைத்து, டென்ஷன் ஆனதோடு வளர்மதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்' என்று சொல்லிவிட்டார் ஆணையர் நந்தகோபால். வளர்மதியின் அன்புக்கட்டளையால், "ராஜ்குமார் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்' என்று உஷாராக ஆர்டர் போட்டுவிட்டார் நந்தகோபால்.
இதனை வைத்து, 17ஏ-வில் விளக்கம் கேட்ட வளர்மதி, ராஜ்குமார் கொடுத்த விளக்கத்தை கண்டுகொள்ளாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டார் "தண்டனை வழங்குகிறேன்' என்று ஆர்டர் போட்டுவிட்டார்.
நீதிமன்றத்தை மதிக்காத ஆணையர்கள்!
இதனால், துறைரீதியான மேல்முறையீடு செய்தாலும் ஆணையர் நந்தகோபால் இருக்கும்வரை நியாயம் கிடைக் காது என்பதால் 2020 பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தார் ராஜ்குமார். "8 வாரத்தில் இவரது அப்பீலை க்ளோஸ் செய்யவேண்டும்' என்று தொழிலாளர் துறை இணை ஆணையர் 2-வுக்கு உத்தரவிடுகிறார் நீதிபதி ஆனந்த்வெங்க டேஷ். ராஜ்குமாரிடம் இணை ஆணை யர் வேல்முருகன் "கொஞ்சம் பொறுமை யாக இருங்கள்' என்று சொல்லிவிட்டு, 8 வாரத்திற்கு 20 வாரம் ஆனபிறகு "இவருக்கான தண்டனை உறுதிசெய்யப் பட்டது' என்று வேண்டுமென்றே ஆணையர் நந்தகோபாலின் நிர்பந்தத் தால் ஆர்டர் போட்டுவிட்டார் இணை ஆணையர் வேல்முருகன். இந்நிலையில்தான், ராஜ்குமாருடன் இருந்த 14 துணை ஆய்வாளர்கள் உதவி ஆணையர்களாக பதவிஉயர்வு பெற்றுவிடுகிறார்கள். ஆனால், இவரது பதவி உயர்வு நந்தகோபால்+வளர்மதி கூட்டணியால் திட்டமிட்டு பறிக்கப்பட்டது.
லஞ்சவேட்டை வளர்மதி!
எடை எந்திரங்களுக்கு முத்திரை பெற்றுத் தரும் டீலருக்கான லைசென்ஸை புதுப்பிக்க சென்னை முகப்பேரைச் சேர்ந்த பரதனிடம் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் 2020 மே மாதம் சிக்கினார் உதவி ஆணையர் வளர்மதி. இவருக்கு, லஞ்சம் வாங்கிக் கொடுத்த அம்பத்தூர் சரக தொழி லாளர்துறை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் அதிரடியாக கைது செய் யப்பட்டார். இதற்குமுன் இருந்த உதவி ஆய்வாளர் ஜான் ஜெயப்பிரகாசம் மூலமும் பலரிடம் பல்லா யிரக்கணக்கில் லஞ்சம் வசூலித்தது தெரியவந் தது. மேலும், லஞ்ச ஒழிப்பு போலிஸார் தேடியதால் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறை வாகிவிட்டார் உதவி ஆணையர் வளர்மதி. பூட்டை உடைத்து பல் வேறு ஆவணங்களை கைப்பற்றியபோது வளர்மதி தவறான வயது சான்றிதழைக் காண்பித்து பணியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய லஞ்சப்பட்டியல் டைரி!
இந்நிலையில் கடைகள், பெட்ரோல் பங்குகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் என லஞ்சம் வசூலித்து கொடுக்க வளர்மதியால் நியமிக்கப்பட்ட கணேஷ்குமாருக்கும் இவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதால், தொழிலாளர்துறை ஆணையர் நந்தகோபால் ஐ.ஏ.எஸ். பெயரைச் சொல்லி மிரட்டுகிறார் வளர்மதி. மேலும், வணிகவரித் துறையில் டி.சி.யாக இருக்கும் தனது மருமகனுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளை தெரியும் என்றும் மிரட்டியிருக்கிறார். கணேஷ்குமாரை பினாமியாக வைத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள சொத்தையும் வாங்கியிருக்கிறார் வளர்மதி. இருவருக்குமான பிரச்சனையால் வளர்மதியின் 150 பக்க லஞ்சப்பட்டியல் அடங்கிய டைரியை கொண்டுசென்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான நஜிமுதின் ஐ.ஏ.எஸ்.ஸிடம் புகாராகக் கொடுத்துவிட்டார் கணேஷ்குமார். அவரது தலைமையிலான, விசாரணையில் வளர்மதி எந்தெந்த கடைக்கு போனார்? எந்தெந்த கடைகளில் யாரை சந்தித்து, யாரிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்? என்ற பட்டியல் அந்த பர்சனல் டைரியில் இருப்பது இணைச்செயலாளர் அமிர்தஜோதி ஐ.ஏ.எஸ். விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், திருவண்ணாமலைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் வளர்மதி.
செயலாளரையே மதிக்காத உதவி ஆணையர்!
பணிக்கு போகாமல் கோர்ட்டில் தற்காலிக ஸ்டே வாங்குகிறார் வளர்மதி. அரசுத்தரப்பு விளக்கத்தைப் பார்த்த நீதிமன்றம் வளர்மதியைப் பார்த்து, ‘"தூய உள்ளத்தோடு இந்த நீதிமன்றத்தை அணுகவில்லை. உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவை, ஆதாரத்துடன் அரசால் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. எனவே, பணிமாறுதல் செய் யப்பட்ட இடத்திற்கு சென்று பணியில் சேருங்கள்' என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனாலும் "எனக்கு ஆளுங்கட்சி மதுசூதனனைத் தெரியும், சைதை துரைசாமியைத் தெரியும் செங்கோட்டையனைத் தெரியும்' என்று சொல்லிக்கொண்டு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மெடிக்கல் போர்டில் போலியாக சர்டிஃபிகேட்டை வாங்கிக்கொண்டு நீதிமன்றத்தை ஏமாற்றப் பார்த்தார். ஆனால், ஆணையர் நந்தகோபால் தற்போது பணிமாறுதல் ஆகிவிட்டதால் வேறு வழியில்லாமல் பணியில் சேர்ந்துள்ளார். ஆனாலும் அவர் செய்த லஞ்ச ஊழல்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
குற்றச்சாட்டுகள் குறித்து, உதவிஆணையர் வளர்மதியை தொடர்புகொண்டு நாம் கேட்ட போது, அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தவர், “""எனது டைரியில் கணேஷ்குமாரே லஞ்சம் வாங்கியதாக எழுதிவிட்டார். கணேஷ்குமாரை பினாமியாக வைத்து நான் எந்த சொத்தும் வாங்க வில்லை'' என்றார் அவர் தரப்பில். (ஆனால், கணேஷ் குமார் பெயரில் வளர்மதி சொத்து வாங்கியதற்கான ஆடியோ உரையாடல் ஆதாரம் உள்ளது)
குற்றச்சாட்டுகள் குறித்து அப்போதைய தொழிலாளர் துறை ஆணையரும் தற்போதைய ஆவின் துறை ஆணையருமான நந்தகோபால் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு கேட்டபோது, தன்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
தொழிலாளர் நலத்துறையின் சீரழிவு அனைத்து தொழிலாளர்களுக்குமான பேரழிவு. விசாரணை தேவை.