"பணியிட மாறுதல் விஷயத்தில் எல்லாமே தாறுமாறாக நடக்கிறது...'’என்று புலம்பினார் ஒரு சிறைத்துறை ஊழியர். அவரது ஆதங்கம் இதோ...

"சிறைத்துறையைப் பொறுத்தமட்டிலும், பொதுவான இடமாறுதல் என்பதே கிடையாது. ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு பெறுபவர்களை, காலியிடம் எங்கிருக்கிறதோ, காலியிடம் எத்தனை இருக்கிறதோ, அதற்கேற்றாற்போல் இடமாற்றம் செய்வார்கள். இவர்களில் சீனியாரிட்டி உள்ளவர்களை அவர் பணியாற்றும் ஊரிலும், மற்றவர்களை வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்வார்கள். ஒருவர் மத்திய சிறைச்சாலை ஒன்றில் 5 வருடங்கள் பணியாற்றுபவராக இருந்தாலும், மேலும் 5 வருடங்களுக்கு பதவி உயர்வு பெற்று வேலை பார்த்தாலும், துறை ரீதியாக எந்தக் கேள்விக்கும் அவர் ஆளாவதில்லை. இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது.

jail

தமிழக காவல்துறையில் ஒருவர் இரண்டாம் நிலைக் காவலராகி, 10 வருடங்களில் அடுத்தடுத்த பதவி உயர்வுகளைப் பெறுவார். அந்த 10 வருடங்களில், குறைந்தது 5 காவல் நிலையங்களுக்காவது இடமாற்றம் செய்யப்படுவர். காவல்துறையில் பணியாற்றுபவர்களை 3 வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வார்கள். தேர்தல் நேரத்திலும் இடமாற்றம் செய்வார்கள். சிறைத்துறையில் அப்படி கிடையாது. ஒரு இடத்தில் ஒருவர் நியமிக்கப்பட்டால், திரும்பத் திரும்ப அதே இடத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு பெறும் அனைவரும் ஒரே இடத்தில் பணியாற்றுவது இயலாதது. அதனால், காலியிடம் உள்ள ஊரில் உயர் பதவியில் பணியாற்றக்கூடிய உத்தரவை வழங்குவார்கள்.

Advertisment

காவல்துறையில், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இடமாற்றம் செய்வார்கள். யார் யாருக்கு எங்கே இடமாற்றம் வேண்டுமென்ற விருப்பத்தை அறிந்து, இடமாற்ற உத்தரவு வழங்குவார்கள். தற்போது, சிறைத்துறையில் அதிகாரம் செலுத்தும் உச்ச பதவியில் இருப்பவரைச் சந்தித்து, இடமாற்ற விருப்பத்தைத் தெரிவித்து ‘மூன்றிலிருந்து 5 வருடங்கள் நாங்கள் ஒரே இடத்தில் பணியாற்று கிறோம். விரும்பும் இடத்துக்கு இடமாற்றம் செய்யுங்கள்..’ என்றெல்லாம் கோரிக்கை வைப்பதற்கான வாய்ப்பு தரப்படுவதில்லை.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை இடமாற்றம் செய்தால்தான் ஒளிவு மறைவற்ற நிலைப்பாடு இருப்பதாக அர்த்தம் கொள்ளமுடியும். மூன்று வருடங்களுக்கும் மேலாக சிறைத்துறை அதிகாரி ஒருவர், அதே இடத்தில் பணியாற்றினால், தான் செய்த முறைகேடுகளை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள முடியும். குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் நடந்துகொண்டே இருந்தால், குறிப்பிட்ட பொறுப்புக்கு வருபவர்கள், முந்தைய அதிகாரிகள் ஒப்படைக்கும் ஆவணங்களைச் சரிபார்ப்பார்கள். அதனால், முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.

இன்றைய நடைமுறை எப்படி இருக்கிறதென்றால், 10 வருடங்கள் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களைக் கண்டு கொள்வதில்லை. மூன்றிலிருந்து 5 வருடங்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களால், உச்ச பதவியில் இருப்பவரை கவனித்துவிட்டு, விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் பெற முடிகிறது. அதனால், கவனிக்கும் அளவுக்கு செழிப்பு இல்லாதவர்களை ஏதோ ஒரு இடத்துக்கு இடமாற்றம் செய்வது, சாதாரணமாக நடக்கிறது.

Advertisment

பொது இடமாற்றம், ஒளிவுமறைவற்ற நேர்மையான இடமாற்றம் என்றால், பக்கத்து ஊர்களிலேயே பணியாற்றக்கூடிய வாய்ப்பு அமையும். இடமாற்ற விஷயத்தில் பணம் விளையாடுவதால், சாதாரண நிலையில் இருப்பவர்களை, அவர்களைக் கேட்காமலேயே தூரமான இடங்களுக்கு இடமாற்றம் செய்துவிடுகின்றனர். அதனால், சிறைத்துறை ஊழியர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.

சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு இருந்தபோது, பதவி உயர்வு பெற்றோருக்கு, வெளிப்படையான பொது இடமாறுதல் கிடைப்பதற்கு வழிவகை செய்தார். எந்தெந்த ஊர்களில் காலியிடம் இருக்கிறது என்பதை தெரிவித்தார். சிறைத்துறை ஊழி யர்களும், நியாயமான முறையில் அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கப்பெற்றனர். தற்போது உயர் பதவியில் உள்ள சிறைத்துறை அதிகாரியோ, ‘என் கையில் அதிகாரம் எதுவும் இல்லை..’ என்று கைவிரிக்கிறார்.

சிறைத்துறை முறைகேடுகளால், கட்டாய இடமாற்றம் தாராளமாக நடக்கிறது. அதே நேரத்தில், உயரதிகாரிகள் மட்டத்தில், இத்தகைய இடமாற்றம் செய்வதில்லை. உதாரணத்துக்கு, மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளரால், 5 வருடங்கள் ஒரே இடத்தில் நங்கூரம் பாய்ச்சி பணியாற்ற முடிந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பாகத்தான் மாற்றலாகிப் போனார். பணியிட மாறுதல் விஷயத்தில், பாரபட்சமாக நடந்து கொள்கிறது சிறைத்துறை.

எப்ரல், மே மாதங்களில் இடமாற்றம் செய்தால், சிறைத்துறை ஊழியர்களின் குழந்தைகளுடைய படிப்புக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை சிறைத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்''’என்று முடித்தார், அந்த சிறைத்துறை ஊழியர்.

அதிகார வர்க்கத்தின் முறைகேடான செயல்களால், சிறைத்துறை ஊழியர்களும், சுதந்திரக் காற்றை சுவாசிக்காதவர்களாகவே உள்ளனர்.