""விளையிற நிலத்த நாசம் செய்யாதீங்க. இருக்குற சாலைகளே போதும். எங்க உசுரு இருக்கும்வரை எட்டு வழிச்சாலையை அமைக்கவிடமாட்டோம்'' என உயிரைக் கொடுத்து கத்தும் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு, மக்கள் பயன்பாட்டில் இருக்கும் தஞ்சை- நாகை சாலைப்பணியை கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது.
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் வரை 80 கி.மீ. தூரத்திற்கு நான்குவழிச்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. பிறகு நான்கு வழியானது இரண்டு வழிப்பாதையாக குறைந்தது. மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சாலைப்பணிக்காக ரூ.396 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2017 டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என அறிவித்ததோடு, வேலைகளையும் துவக்கிவைத்தார். ஆனால், காலக்கெடு முடிந்தும் சாலைப்பணிகள் கிடப்பில் இருப்பதால், கடந்த ஆறு மாதங்களாக நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூரைச் சேர்ந்த பொதுமக்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சாலைப்பணிகளைத் தொடர்வதில் என்ன சிக்கல் என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விசாரித்தபோது, ""2017 டிசம்பர்-31ஆம் தேதிக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என ‘மதுக்கான்’ என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 30 சதவீத பணிகள்கூட இதுவரை நிறைவடையவில்லை. கடந்த சில மாதங்களாக பணிகளும் நடக்கவில்லை. பள்ளமேடுகளான சாலைகளும், முழுமையடையாத பாலப்பணிகளுமாக இருக்க, மணல் பற்றாக்குறையையும், ஜி.எஸ்.டி.யையும் காரணம்காட்டி அமவுண்ட் பத்தாது என்று கைவிரித்தனர். இதற்காக திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் 7 இடங்களில் 3 மாதம் மணல் எடுக்கக் கிடைத்த அனுமதியையும் அ.தி.மு.க.வினர் சிலர் கெடுத்துவிட்டனர். கமிஷன் கொடுத்து மணல் எடுத்தும் பயனில்லை. அரசு ஒதுக்கிய நிதியில் அமைச்சர்கள் 30 சதவீதம் கமிஷன் வாங்கிவிட்டனர். பொதுமக்களின் போராட்டங்களால் ரூ.124 கோடி கூடுதலாக நிதியை அதிகரித்தும், 18 மாதங்கள் கூடுதல் அவகாசமும் கொடுத்தே மூன்றுமாதம் ஆகிறது'' என விளக்குகிறார்.
போராட்டங்களின் மூலம் சாலைப்பணிகளைத் தொடங்க வலியுறுத்தும் பாரதி மக்கள் மன்றத்தின் மடப்புரம் ராஜ்குமார் நம்மிடம், ""நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இருந்து மீன், நிலக்கரி மற்றும் பெட்ரோலியப்பொருள்கள் இந்த வழியாகத்தான் எடுத்துச்செல்லப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் இந்த சாலையில் பணிகள் துவங்கியதில் இருந்து 170க்கும் அதிகமான விபத்துகளும், கணிசமான உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதோடு வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட மூன்று மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் திருவாரூருக்கு வராமல் மாற்றுவழியில் செல்வதால் வர்த்தகமும் பாதிக்கப்படுகிறது. சாலைப்பணிகளை விரைந்து தொடங்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்'' என்கிறார் ஆயத்தமாக.
திருவாரூர் தி.மு.க. மாவட்டச்செயலாளர் பூண்டி கலைவாணனிடம் பேசுகையில், ""நீடாமங்கலத்திலிருந்து திருவாரூர்வரை வளைவுகளோடும், வெட்டாறு, ஓடம்போக்கியாறு கரையோரத்திலும் செல்லும் இந்த சாலை பிரதானமானது மட்டுமின்றி ஆபத்தானதும்கூட. காரைக்காலில் இருந்து நிலக்கரி போன்ற பொருட்களைக் கொண்டுசெல்லவும், அவசர சிகிச்சைக் காலங்களிலும் அத்தியாவசியமானது. ஆனால், முழுமையடையாத சாலைப்பணியால் இதில் விபத்து நடக்காத நாளே கிடையாது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வந்த முதல்வர் இ.பி.எஸ் சாலைப்பணிகள் விரைவில் முடியும் என்றார். ஒப்பந்த நிறுவனமோ பணம் வரவில்லை என்று கையை விரிக்கிறது'' என்கிறார் கோபத்துடன்.
நான்கு இரண்டாகத் தேய்ந்து மூன்றாண்டுகள் ஆகியும் 30 சதவீதம் வேலைகள்கூட நடக்கவில்லை என்ற ஆர்.டி.ஐ. தகவலைச் சொல்லும் இந்திய வர்த்தக தொழிற்குழுமத் தலைவர் ராமச்சந்திரன், ""எட்டு வழிச்சாலை பெயரில் அடாவடி செய்யும் அரசு, நாகை - தஞ்சை சாலைப்பணியை விரைந்து முடிக்காவிட்டால், வர்த்தக சங்கத்தினர் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்துவோம்'' என்கிறார்.
திருவாரூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது எனச்சொல்லும் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், ""வேலையை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தியுள்ளதாகவும், குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்படும்'' என்றும் உறுதியளிக்க, ""நாடாளுமன்றத்திலும், நெடுஞ்சாலைத்துறையிடமும் பேசியிருக்கிறேன். பணிகள் துரிதமாக நடக்கும்'' என்கிறார் நாகை எம்.பி. கே.கோபால்.
""டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, பிறகு கிடப்பில் போடப்பட்டது. நாகை எம்.பி.யாக இருந்த ஏ.கே.எஸ்.விஜயனின் முயற்சியால் காங்கிரஸ் ஆட்சி முடியும் தறுவாயில், இரண்டு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. மத்திய-மாநில ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சாலைப்பணிகள் தொடங்கின. மூன்று மாவட்டங்களை இணைக்கும் இந்த சாலைத்திட்டத்தில் துரைக்கண்ணு, காமராஜ் மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகிய மூன்று அமைச்சர்கள் பங்குகேட்டனர். அவர்களில் காமராஜ் மட்டும் கமிஷனை வாங்கிவிட்டு சைலண்டாகிவிட்டார். மற்ற அமைச்சர்கள் ஒன்றும் கிடைக்காத கோபத்தில் வேலையை நடக்கவிடாமல் தடுக்கின்றனர்'' என சமூகஆர்வலர் ஒருவர் நம்மிடம் கிசுகிசுத்தார்.
எட்டுவழிச்சாலையோ, தஞ்சை- நாகை இரண்டு வழிச்சாலையோ அரசு போடும் நெளிவு சுளிவு கணக்குதான் எல்லாமே. மக்கள்நலன் மட்டும் எப்போதும் கழித்தலில்.
-க.செல்வக்குமார்