ஒலிம்பிக் போட்டியில் திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி, 4 ல 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர், இவரது தாய் உஷா மற்றும் இரண்டு அக்காக்கள் தந்த ஊக்கத்தால்தான் இவரால் ஒலிம்பிக் வரைக்கும் வரமுடிந்திருக்கிறது. ஒலிம்பிக்வரை சென்று சாதித்த இவரது வாழ்க்கையின் இன்னொரு பக்கம் துயரங்களால் நிரம்பியிருக்கிறது.
தனது ஒலிம்பிக் பயணம் குறித்து அவர் கூறுகையில், "சர்வதேச தடகள வீரரான மணிகண்ட ஆறுமுகம் எனக்கு பயிற்சி வழங்கிவருகிறார். அவருடைய பயிற்சிதான் நான் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியாலாவில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஜூலை 4-ஆம் தேதி 4 ல 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்தேன். நான் அங்கு 3-வது இடத்தை பிடித்ததுதான் எனக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
நான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த நிலையில், எனக்கு கலினா என்ற வெளிநாட்டு தடகள பயிற்சி யாளர் ஒருமாத காலமாக பயிற்சி கொடுத்தார். அங்கிருந்து, ஜூலை 23-ஆம் தேதி ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியாவிற்கு சென்றேன். ஒலிம்பிக் போட்டியின்போது முதல் 300 மீட்டர் வரை எனர்ஜியோடு ஓடிய என்னால், இறுதியில் மற்ற நாட்டு வீராங்கனை களோடு ஈடு கொடுக்க முடிய வில்லை. அவர்கள் என்னைவிட எனர்ஜி யோடு ஓடியதற்கு, அவர்களின் உணவுப் பழக்கமும், நீண்ட காலப் பயிற்சியும் காரணமாக இருந்தது. அடுத்தமுறை எனது பயிற்சியை அதிகரித்து, உணவுப் பழக்கத்தையும் மாற்றியமைத்து, எனர்ஜியுடன் ஓடி பதக்கம் வெல்ல கடுமையாக உழைப்பேன்.
ஒலிம்பிக் முடிந்த தும் ஆகஸ்ட் 7-ம் தேதி திருச்சிக்கு விமானம் மூலம் வந்துசேர்ந்தேன். நான் இங்கு வந்தபோது தான் என்னுடைய மூத்த அக்கா காயத்ரி, ஜூலை 12-ஆம் தேதியே மாரடைப்பால் உயிரிழந்த விஷயம் தெரியவந்தது. இது எனக்கு அப்போதே தெரிந்தால் விளையாட்டில் கவனம்செலுத்த முடியாதென்று சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். தற்போது அக்காவின் மரணம் குறித்து அறிந்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய வளர்ச்சியில் எல்லாமுமாக இருந்தவர் காயத்ரி அக்கா. அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏற்கனவே என்னுடைய 2-வது அக்கா கஸ்தூரி, கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் இறந்த சோகம் மறையும்முன்னே இவரின் இழப்பு மேலும் வருத்துகிறது. நான் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதைப் பார்த்தால் இரண்டு அக்காக்களும் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்'' என்றார் வேதனையுடன்.