கடலோரப்பகுதி வழியாகத் தங்கக் கடத்தலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தாலும், "அதைவிட மூணு மடங்கு கடத்தல் நடக்குது" என்று நம்மைத் தெறிக்க விடுகிறார்கள் சில முன்னாள் ‘குருவிகள்!
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல்வெளி தூரம் வெறும் 18 கிலோ மீட்டர்களாக இருந்தாலும், தூத்துக்குடி, வேதாரண்யம் போன்ற தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரமும் மிகக்குறைவு தான். அந்த கடற்கரைப் பகுதிகளைப் பார்வையிடுவதற்கும், பாதுகாப்பதற்கும் கடற்படை கப்பல்கள், நவீன அதிவிரைவுப் படகுகள், தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய ஹோவர்கிராஃப்ட் முதல் ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ‘ஐ.என்.எஸ். பருந்து’ என்ற தனி விமானத்தளமே அமைந்துள்ளது. இருந்தாலும், அனைவரின் பார்வைகளையும் மீறி கடல்வழிக் கடத்தல்கள் கனஜோராக நடப்பதையே சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன.
கடந்த மாதம் 13ஆம் தேதியன்று இலங்கை வடமத்திய கடற்பிரிவைச் சேர்ந்த கடத்தல் தடுப்புப் பிரிவினர் தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேவம்பிடி கடல் பகுதியில் வைத்து ஒரு படகை மடக்கிச் சோதனையிட்டபோது, ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பார்சல் களைக் கைப்பற்றினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அகதிகளாக வந்தவர்களை தனுஷ்கோடி மணல் திட்டில் இறக்கி விட்டு வரும்போது நடுக்கடலில் இந்த பரிமாற்றம் நடந்ததாகக் கூறியிருக்கின்றனர். அதற்கு முந்தைய தினம், தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள இரண்டாம் மணல் திட்டு அருகே சோதனையிட்ட கடலோரக் காவல் படையினர், கடலில் மிதந்துகொண்டிருந்த 50 கிலோ கஞ்சா பார்சலை கைப் பற்றினர். கடந்த 15ஆம் தேதி, நாகமுத்துநகர் சுனாமி காலனி அருகே ஒரு மினிலாரியில் 13 மூட்டைகளில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 450 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர்.
சீனாவில் தயாரித்த ரப்பர் படகு மூலம் இலங்கையிலிருந்து கோடியக்கரைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த போலந்து நாட்டைச் சேர்ந்த வாட்டிஸ்டா என்ற 40 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவில், தலைமன்னாரின் பேசாலை கடல் பகுதியில், ஒரு படகை சோதனையிட்டதில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 470 கிராம் தங்க கட்டிகளையும், அரிய வகை வலம்புரிச் சங்கை யும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி விசாரித்ததில், தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. அதற்கடுத்த தினம், இலங்கைக்கு கடத்தப்பட விருந்த 4 ஆயிரத்து 430 வலி நிவாரணி மாத்திரைகளை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
தமிழகக் கடல்பகுதி வழியாக இலங்கைக்கு எதைக் கடத்தினாலும், பணத்திற்குப் பதிலாக தங்கம் கிடைப்பதால் பெரும்பாலான நேரங்களில் சுங்கத்துறை, கடலோரக் காவல் படை அதிகாரிகள் சிலருக்குத் தெரிந்தே கடத்தல்கள் நடப்பதாகக் கூறுகிறார்கள், விபர மறிந்த சிலர். “துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து இலங் கைக்கு வரும் தங்கத் தைத்தான் கட்டியா மாத்திக் கடத்துறாங்க. ஒவ்வொரு நாளும் 70 முதல் 100 கிலோ வரை ஃபிளைட்ல வந்தா, அதைவிட ஜாஸ்தியா கடற்கரை வழியாகக் கொண்டு வர்றதா சொல் றாங்க. கொழும்புக்கு என்ன பொருள் தேவை யோ அதைக் கொண்டு போய் கொடுத்தால் அதற்குப் பதிலாக தங்கம் கைமாறும். ரெண்டு தரப்புக்குமே நல்ல லாபம்''’என்றவர்கள், "தலைமன்னார், நெடுந் தீவு, யாழ்ப்பாணம் வழியா தமிழகத்தின் கோடியக்கரை, ஜெகதாப் பட்டினம் போன்ற பகுதிகளில், நடுக்கடலில் வியாபாரம் நடக்கும் போது ஹெலிகாப்ட ரோ, ரோந்துப் படகோ அந்த ஏரியாவுக்கே வராது. எல்லாம் ஒரு ‘அட்ஜெஸ்ட்மென்ட்டுதான்''’என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், கஸ்டம்ஸ் மற்றும் கடலோரக் காவல்படையின் கருப்பு ஆடுகள் சிக்கினால் மட்டுமே தமிழகக் கடற்பகுதிகளை தங்கள் ஆளுமைக்குள் வைத்திருக்கும் கடத்தல் திமிங்கிலங்களும் வலைக்குள் வரும்போல!
_____________
மீண்டும் விடுதலைப் புலிகள்...?!
கடந்த 2021, மார்ச் 21ஆம் தேதி, கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் ‘ரவிஹன்சி என்ற இலங்கை படகிலிருந்து, 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், ஆயிரம் 9 எம்.எம். தோட்டாக்களை இந்திய கடலோரக் காவல் படையினர், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றிய தோடு, அதில் பயணித்த 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணையில், சின்ன சுரேஷ், சௌந்தர் மற்றும் சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழரான சற்குணம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விடுதலைப் புலிகள் தொடர்பான சில ஆவணங்களும், சிம் கார்டுகளும் சிக்கவே, அலர்ட்டான ஐ.என்.ஏ. அதிகாரிகள், கடந்த மாதம் 21-ஆம் தேதியன்று சென்னை, திருப்பூர், திருச்சியிலுள்ள அகதிகள் முகாம்கள் உட்பட 25 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் நோக்கம், போலி பாஸ்போர்ட் சமாச்சாரம்’ எனக் கூறப்பட்டாலும், தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை காரணமாக விடுதலைப் புலிகள் மீண்டும் தங்களைக் கட்டமைக்க வாய்ப்பிருப்பதாகக் கருதியே அந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. என்றார்கள்.