விவசாயம் மனித நாகரிகத்தின் வளர்ச்சி என்று கூறலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்கள், மரபு விதைகளை கோபுரக்கலசங்களில் சேகரித்து வைத்தும், தானிய சேமிப்புக் கிடங்குகளிலும், விதை சேமிப்புக் கிடங்குகளிலும் சேமித்துவைத்து, தலைமுறை தலைமுறையாக விதைகளை காப்பாற்றிவருவது, கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் தெரியவருகிறது. அப்படிப்பட்ட விதைகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கென ஒன்றிய அரசு புதிய விதைச்சட்டம் 2025 கொண்டுவந்திருக்கிறது என்றும், இது விவசாயிகளுக்கு எதிரானது என்றும் கூறி நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் துவங்கியுள்ளது.

Advertisment

இந்திய விதைச் சட்டம் 2025, விதைகளின் மீதான விவசாயிகளின் உரிமையைப் பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கவும், விதை நிறுவனங்கள் விதைகளின் விலைகளைக் கடுமையாக உயர்த்திக் கொள்ளை லாபம் பார்க்கவும், விவசாயிகளின், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கவும் வழிவகை செய்கிறது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விவசாயி களைத் திரட்டி மாநிலம் முழுவதும் விதைச்சட்டம் 2025, நகல்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்திவருகிறார்.

Advertisment

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வெற்றிச்செல்வன் "விதைச் சட்ட மசோதா-2025-ஐ ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை விதைகளின் மீது நிலைநாட்டவும், விதைகளின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு/குறு உழவர்களின் உரிமைகளைச் சிதைக்க முனைகிறது. விதைத்துறையை வாழ்வாதாரத்தின் மையத்தி லிருந்து சந்தையின் மையத்திற்கு உந்தித்தள்ளும் வகையில் உள்ளது.

உண்மையில் விதை ஒரு நாட்டினுடைய உணவின் உயிர்மூச்சாக உள்ளது. விதை என்பது வெறும் வேளாண் இடுபொருள் பண்டம் அல்ல, உயிரியல் நினைவகம், பண்புக்கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, வேளாண்மைத் தொழில்நுட்பம், அனைத்திற்கும் மேலாக நமது அடையாளம். தற்போது நடைமுறையில் உள்ள 1966ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட விதைச்சட்டத்தை மாற்றி யமைக்கின்ற வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள 1966 விதைச் சட்டம் எந்தக் காரணங்களுக்காக மாற்றி யமைக்கப்பட வேண்டும் என்பதற்கான எவ்வித விளக்கமும் வரைவு மசோதாவில் அளிக்கப்படவில்லை. மேலும், 1966 விதைச் சட்டம், வர்த்தகரீதியாக உள்ள விதைகளைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் மட்டுமே செயல்படுகிறது.

Advertisment

seeds1

சமூகச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை 1966 விதைச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அவை விவசாயிகளின் உரிமையாக இருப்பதை 1966 சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாகப் புதிய விதைச்சட்ட மசோதா, அனைத்து வகையான விதைகளையும் புதிய சட்டத்தின் கீழாகப் பதிவுசெய்ய வலியுறுத்துகிறது. இந்திய விதை இறையாண்மையின் மீதான இத்தாக்குதலை எதிர்க்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. 

எளிதாகக் கூறவேண்டுமென்றால், 1966-க்குமுன் கொண்டுவரப்பட்ட விதைச் சட்டத்தில், வர்த்தக ரீதியில் பயன்படுத்தக்கூடிய விதைகளுக்கு வரைமுறை செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் விவசாயிகளிடம் உள்ள விதைகளை அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பண்டமாற்று முறையில் மாற்றிக்கொண்டனர். பின்னர் பணம் கொடுத்து அதன் விதைகளை வாங்கிவந்தனர். தற்போது பணம் கொடுத்து வாங்கப்படுவதால் அது வர்த்தக ரீதியிலானது எனக்கூறி, சட்டத்தை மாற்றி, மரபு விதைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சட்டம். எடுத்துக்காட்டாக, பொன்னி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்பு கவினி போன்ற நெல் வகைகளை பல நூற்றாண்டு காலமாக நம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதை தற்போது சிறிதளவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மரபணு மாற்றம் செய்து, இதை வேறு யாரும் பயன் படுத்தக்கூடாது என்று கூறினால், இச்சட்டத்தால் அது தடை செய்யப்படும். அந்த கார்ப்பரேட் பெருமுதலாளிக்கு மட்டுமே அந்த விதை சொந்தமாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. விவசாயிகள் எதிர்காலத்தில் விதைகளுக்காக பெருநிறுவனங்களிடம் கையேந்தி நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

இந்திய அளவில் ஆண்டுக்கு 3000 கோடி டாலர் அளவுக்கு விவசாய விதை வர்த்தகம் நடைபெறுகிறது. இதை குறிவைத்து தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த சட்டத்தை மாற்றி, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சுமார் 90 சதவீதம் இந்த பருத்தி வகை விதைகளை மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மரபு பருத்தி விதைகள் அழிந்து போய்விட்டது. இந்த நிலை தான் நாளை நெல், பருப்பு, காய்கறிகள் என்று எல்லா விதைகளுக்கும் ஏற்படும். எனவே தான் விவசாயிகள் இதை எதிர்க்கின்றனர்'' என்றார். மரபு விதைகளுக்கான ஆபத்தை விவசாயிகள் உணர்வார்களா?